Announcement

Collapse
No announcement yet.

தத்வ மஞ்சரி-03 - அத்வைத ஸித்தாந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தத்வ மஞ்சரி-03 - அத்வைத ஸித்தாந்தம்


    [hd2அத்வைத ஸித்தாந்தம்
    இதற்கு ப்ரவர்த்தகர் - ஸ்ரீசங்கராச்சாரியார்.[/hd2]

    "ப்ரஹ்மைகம் பரமார்த்த - ஸத் ததிதரன் - மாயா மயத்வான் - ம்ருஷா
    ப்ரஹ்வைகமுபாதி - பிமபித - மதோ ஜீவேச - பாவம் கதம்!
    ப்ராந்திஸ் - ஸம்ஸ்ருதி - ரஸ்ய தத் - ப்ரசமனம் முக்திஸ் - ததப்யாத்மநோ
    ப்ரஹ்மைக்யாவகமாத் ச்ருதி - ச்ரவண - ஜாத் இத்யாஹ{ரத்வைதிந:!!"

    இது இந்த ஸித்தாந்தத்தின் ஸங்க்ரஹ ச்லோகம்.
    ஏகம் - தனக்கு ஸஜாதீயமானதும், விஜாதீயமானதும், ஒன்றுமில்லாததாய், தன்னிலும் ஒரு தர்மமும் இல்லாததான, ப்ரஹ்ம - ஆத்ம வஸ்து, பரமார்த்த ஸத்பரமார்த்தமாயுள்ளது (ஆத்ம வஸ்துவுக்கு ஸஜாதீயமானது மற்றொரு ஆத்மா, விஜாதீயமானது ஆத்மாவைக் காட்டில் வேறுபட்டது.)
    இதனால் இரண்டாவது ஆத்மாயில்லை என்றும், ஆத்மா தவிர மற்றொரு வஸ்து இல்லை என்றும், ஆத்ம வஸ்துவில் ஒரு தர்மமும் இல்லை என்றும் சொன்னதாகிறது.

    இங்கு ‘ப்ராதிபாஸிகஸத்” ‘வ்யாவஹாரிகஸத்” இவைகளைக் காட்டில் ஆத்ம வஸ்துவுக்கு வாசி தோன்றுவதற்காக ‘பரமார்த்தஸத்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘ததிதரன் .... ம்ருஷா” - ப்ரஹ்மத்தைக் காட்டில் வேறுபட்டது மாயையின் கார்யமானதால் பொய்;. ‘ப்ரஹ்மை .... கதம்” - ஒரு ப்ரஹ்மமே உபாதியில் ப்ரதிபலித்ததாய் அந்த ப்ரதிபலனத்தால் ஜீவனாகவும், ஈச்வரனாகவும் ஏற்பட்டது.

    ‘ப்ராந்தி .... அஸ்ய”- ஜீவாத்மாவுக்கு நான் ஞாதா, நான் கர்த்தா, நான் போக்தா, இது முதலிய ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

    ‘தத்ப்ரசமனம் முக்தி:” அந்த ப்ராந்தியின் நிவ்ருத்திதான் மோக்ஷம்.

    ‘ததபி .... ச்ரணஜாத்” தத்வமஸி என்கிற வேதாந்த வாக்ய ச்ரவணத்தால் உண்டாகும் ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானத்தால் (தனக்கு ப்ரஹ்மத்தோடு ஐக்ய ஜ்ஞானத்தால்) அந்த ப்ராந்தி நிவ்ருத்தி உண்டாகிறது.

    ‘இத்யா ... ந:” என்றிப்படி அத்வைதி வேதாந்திகள் சொல்கிறார்கள்.

    1. ப்ரஹ்மத்துக்கு ஸத்யத்வ நிரூபண ப்ரகரணம்
    ப்ருதிவீ (பூமி), ஜலம், தேஜஸ் (ரூபம்), வாயுஈ ஆகாசம் என்று பெயருடைய பஞ்ச பூதங்களும், அவைகளுடைய கலப்பாலுண்டான ‘பௌதிகம்” (பூதங்களிலிருந்து உண்டானவை), என்று பெயருடைய சரம், அசரம் என்று இரண்டு வகைப்பட்ட நமக்குத் தென்படும் ;எல்லா வஸ்துக்களும் வாஸ்தவமாவையன்று. பாலைவனத்தில் மத்யாஹ்னத்தில் ஸ_ர்ய க்ரணங்கள் பரவ அவ்விடத்தில் வாஸ்தவமாயில்லாத (உண்மையற்ற) ஜலப்ரவாஹமும் (கானல் நீரோட்டம்) அதின் அலைகளும் காணப்படுவதுபோல இந்த ப்ரபஞ்சமும் உண்மையில்லாதபோதிலும் உள்ளதுபோல் தோன்றுகிறது. அங்கே பரவிய சூரிய க்ரணங்கள் ஜலம்போல் தென்படுவதுபோல, இங்கும் எங்கும் பரவிய ஒரு வஸ்து இப்படி ப்ரபஞ்ச ரூபமாய் காணப்படுகிறது. இதுதான் ப்ரஹ்மமென்று சொல்லப்படுகிறது.

    வாஸ்தவமாயுள்ள ப்ரஹ்ம ஸ்வரூபம் தெரியாமல் பொய்யான ப்ரபஞ்சம் காணப்படுவானேன்? எனில்-- வாஸ்தவமான ப்ரஹ்மஸ்வரூபத்திற்கு அநாதிகாலமாக மாயையென்று ஒரு வஸ்துவின் ஸம்பந்தம் வந்திருக்கிறது. இந்த மாயைக்கு தனக்கு ஆதாரமான ப்ரஹ்மத்தை மறைப்பது ஸ்வபாவம். அப்படி மாயையினால் மறைக்கப்பட்டதால் ப்ரஹ்மஸ்வரூபம் உள்ளபடி ப்ரகாசிப்பதில்லை.

    இந்த ப்ரஹ்மத்துக்கு ஸத்தை, ப்ரகாசம், ஆநந்தம் என்று மூன்று ஆகாரங்கள் உண்டு. அதனால்தான் இது ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று ஆகாரங்களும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று. இந்த ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் ஒரு குணமும் கிடையாது. ஆகையால் இது நிர்குணம் என்றும் நிர்விசேஷம் என்றும் சொல்லப்படுகிறது.

    ஸச்சிதாநந்த ரூபமான இந்த ப்ரஹ்மம் வாஸ்தவமாக உள்ளதென்று ‘ஸத்யமாயும் விஜ்ஞானமாயும், ஆந்தமாயும் உள்ளது ப்ரஹ்மம்” என்றிது முதலிய ச்ருதிகளாலும் அதற்கு ஒத்தாசையான யுக்திகளாலும் கிடைக்கிறது. யுக்தி எதுவெனில் -- முன் சொன்ன த்ருஷ்டாந்தத்தில் (உதாரணத்தில்) பாலைவனத்தில் பரவின ஸ_ர்ய க்ரணத்தில் ஜலப்ரமம் (ஜல உள்ளது போன்ற ப்ரமை) உண்டாகிறது. இதுபோலவே அந்தந்த ப்ரமங்களில் ஒரு வஸ்துவிலே மற்றொரு வஸ்துவுக்கு ப்ரமம் உண்டாகிறது. அவ்விதமே இங்கும் இந்த ப்ரபஞ்சத்தினுடைய ப்ரமம் ஒரு வஸ்துவில் உண்டாயிருக்கவேண்டும். அந்த வஸ்து ஸத்யமென்று ஒப்புக்கொண்டால், அதன் விஷயமான ப்ரமத்திற்கு ஆதாரம் ஒன்று ஒப்புக்கொள்ளவேண்டும். இப்படியே மேல் மேல் ஆதார (எதில் ஒன்றுக்குத் தோற்றம் ஏற்படுகிறதோ அது அதற்கு ஆதாரம்) பரம்பரை (ஒன்றின்மேல் ஒன்றாக தொடர்ந்து ஒரு முடிவின்றிக்கே வருவது.) ஒப்புக்கொள்ள வேண்டியதாக வ:ருகிறது. ஆகையால் ப்ரபஞ்ச ப்ரமத்திற்கு ஆதாரமான வஸ்து ஸத்யமாக உள்ளது என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

    ப்ரபஞ்ச மித்யாத்வ நிரூபணம்

    ச்ருதி ப்ரமாணத்தால் இந்த ப்ரஹ்மம் ஸத்யமாய் ஸித்திக்கிறார்போல், ப்ரத்யக்ஷ ப்ரமாண பலத்தால் ப்ரபஞ்சம் ஸத்யமாக ஸித்திக்கத் தடையென்னவென்றால் -- இது ஸத்யமென்று சொல்ல வழியில்லை. இது ஸத்யமென்றால் எப்போதும் காணப்படவேண்டும். மூன்று காலங்களிலும் உள்ளதுதான் பரமார்த்த ஸத்யமாக ஆகும். ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்கள், உண்டாவதற்கு முன்னும், நாசத்திற்கு பனின்னும் காணப்படுவதில்லை. ஸத்யமாய் இருந்தால் இறந்தகாலம், நிகழ் காலம், எதிர் காலம் எனப்படும் மூன்று காலங்களிலும் இருப்பதாகக் காணப்படவேண்டும். அப்படியன்றிக்கே ஒரு காலத்தில் உண்டாய், சிலகாலமிருந்து, பிறகு நாசமடைந்து முன்னும் பின்னும் காணப்படாத வஸ்துக்கள் பரமார்த்த ஸத்யமாக ஆகமாட்டா. ஆகையால் இந்த்ர ஜாலாதிகளில் மாயையினால் அஸத்யமான வஸ்துக்கள் தோன்றுகிறதுபோல இங்கும் மாயையினால் இந்த ப்ரபஞ்சம் உள்ளதாகத் தோன்றுகிறது. இந்த அர்த்தம் ‘மாயையை உடையவன் ஒருவன் இப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான்” என்றும், ‘பரமாத்மா மாயைகளால் அனேக ரூபமுள்ளவனாய்;த் தென்படுகிறான்” என்றும் சொல்லும் பலச்ருதிகளால் கிடைக்கிறது.

    மாயையாவது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற குணத்ரயமாயும், ஸத் (ஒரு காலத்திலும் இல்லையென்று சொல்லவொண்ணாத ப்ரஹ்மம் போன்றவை) என்றும், அஸத் (ஒரு காலத்திலும் இல்லாத முயல் கொம்பு போன்றவை) என்றும் சொல்ல முடியாததாயும், தன் ஆச்ரயத்தை(தான் சார்ந்துள்ளதை) மறைக்கும் ஸ்வபாவம் உள்ளதாயும், மேல் மேல் விகாரத்தை அடைவதுமான ஒரு வஸ்து. இது அஜ்ஞானம், அவித்யை, மோஹம் என்கிற பெயர்களாலும் வ்யவஹரிக்கப்படும் (கையாளப்படும்). சில ச்ருதிகள் இந்த மாயைக்கு நாசத்தைச் சொல்லுகிறபடியால், இந்த மாயை ஸத்யமன்று. இந்த மாயை ப்ரஹ்மத்தை ஆச்ரயித்து, அதன் ஸ்வரூபத்தை மறைத்து, ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ என்கிற விகாரங்களையும், அதிலிருந்து உண்டாகும் மற்ற விகாரங்களையும் அடைந்து வருகிறது. அப்போது ப்ரஹ்மம் அந்தந்த ரூபமாய்த் தோன்றுகிறது. காப்பு முதலிய நகைகளுக்கு தங்கம் காரணமாகிறது போல, ப்ருதிவீ முதலியவைகளுக்கு மாயை மூலகாரணமாயிருக்கும். இப்படி அஸத்யமான மாயாகார்யமானதால் (மாயையிலிருந்து உண்டாகும் வஸ்து) இந்த ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கிறது.

    அன்றிக்கே ச்ருதிகள், ‘பலவாகத் தோன்றும் வஸ்துக்கள் ஒன்றும் இல்லை” என்று சொல்லுகிறபடியாலும், இந்த ப்ரபஞ்சம் மித்யை (பொய்) என்று கிடைக்கிறது. ஆனால் முன் சொன்ன த்ருஷ்டாந்தத்தில் ஸ_ர்ய கிரணத்தில் தென்படும் ஜலத்துக்கும் ப்ரஹ்மஸ்வரூபத்தில் தோன்றும் ப்ரபஞ்சத்திற்கும் வாசியுண்டு (வித்யாசம் உண்டு). அந்த ஜலாதிகள் ப்ராதிபாஸிக-ஸத்ƒ ப்ருத்வீ முதலிய ப்ரபஞ்சம் வ்யாவஹாரிக ஸத். ஸத் என்பது ப்ராதிபாஸிகம், வ்யாவஹாரிகம், பரமார்த்திகம் என்று மூன்று வகைப்படும். இதில் ப்ராதிபாஸிக ஸத்தாவது ப்ரஹ்மம் தவிர வேறு வஸ்துக்களில் தோன்றி, அந்த வஸ்துவின் உண்மையான ஸ்வரூபத்தை அறிவதினால் நிவ்ருத்திப்பது. அதாவது து}ரத்திலிருந்து பார்க்கும்பொழுது முத்துச்சிப்பியின் ஸ்வரூபம் மறைந்து அது வெள்ளி என்று ப்ரமம் உண்டாகிறது. பின்பு ஸமீபத்தில் போய் பார்த்தால் இது வெள்ளியன்று சுக்தி (முத்துச்சிப்பி) என்று தெரிகிறது. இங்கு ப்ரமத்திற்கு ஆதாரமான சுக்தியினுடைய ஸ்வரூப ஜ்ஞானத்தால் வெள்ளி நிவ்ருத்திக்கிறது. இவ்வாறு முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளிதான் ‘ப்ராதிபாஸிக ஸத்” என்று சொல்லப்படுகிறது.

    வ்யாவஹாரிக ஸத்தாவது, ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தோன்றும் ஆகாசம் முதலிய பூத பௌதிக ப்ரபஞ்சம். ப்ரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபம் மறைந்து அதில் அஜ்ஞானத்தால் ஆகாசாதி ப்ரபஞ்சம் ஏற்படுகிறது. வேதாந்த வாக்யங்களால் தத்வஜ்ஞானம் பிறந்து இரண்டாவது இல்லாததான ப்ரஹ்ம ஸ்வரூபத்தின் ஸாக்ஷhத்காரம் உண்டாகும்போது முன் ஏற்பட்ட ஆகாசாதி ப்ரபஞ்சம் நசித்துப்போகிறது. இதனால் ப்ரஹ்ம ஸ்வரூபத்தின் தத்வஜ்ஞானம் தவிர மற்றொரு தத்வஜ்ஞானத்தால் நசிப்பது ப்ராதிபாஸிக-ஸத் என்றும், ப்ரஹ்மஸ்வரூப-தத்வஜ்ஞானம் ஒன்றினால் மாத்திரம் நசிப்பது வ்யாவஹாரிக-ஸத் என்றும் ஏற்படுகிறது.

    பரமார்த்தஸத்தாவது-ஒரு காலத்திலும் நிவ்ருத்தியாமல் (நீங்குதல்) எல்லா காலங்களிலும் அநுவர்த்திக்கும் (இடைவிடாமல் இருத்தல்) வஸ்து. இதுதான் நிர்குண ப்ரஹ்மம்.

    ஜீவ ஈச்வர பேத ப்ரம நிரூபணம்
    ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைக்கும் ஸ்வபாவமுள்ளதான மாயைக்கு இரண்டு அம்சமுண்டு. ஒன்று தலையெடுத்த ஸத்வகுணத்தை உடையதாயும், மற்றொன்று குறைந்த ஸத்வமுடையதாயும் இருக்கும். இவ்விரண்டில் முதலாவது மாயை என்றும், இரண்டாவது அவித்யை என்றும் சொல்லப்படும். இந்த இரண்டும் கண்ணாடிபோல் பிம்பத்தை க்ரஹிக்க சக்தியுள்ளது. ஆகையால் ப்ரஹ்மம் இவைகளில் ப்ரதிபலிக்கிறது. இதில் மாயையில் ப்ரதிபிம்பம் ஈச்வரனென்றும், அவித்யையில் ப்ரதிபிம்பம் ஜீவனென்றும் ஒரே ப்ரஹ்மத்தில் பேதம் உண்டாகிறது. சிலர் மாயையில் ப்ரதிபிம்பம் ஈச்வரனென்றும், மாயா பரிணாமமான அந்தக் கரணத்தில் ப்ரதிபிம்பம் ஜீவனென்றும் சொல்லுகிறார்கள். அவித்யா அம்சங்களும் அந்தக்கரணங்களும் அநேகங்களாகையால் அவைகளில் ப்ரஹ்ம - ப்ரதிபிம்பத்தால் பல ஜீவர்கள் ஏற்படுகிறார்கள்.

    கண்ணாடியில் ப்ரதிபலிக்கிற முகம் நேரிலிருக்கும் முகத்தைக் காட்டிலும் உண்மையில் வேறன்று, ஆகிலும் வேறாகத் தோன்றுகிறது. அப்படியே இரண்டு கண்ணாடிகளில் ஒரு முகம் ப்ரதிபலித்தால் கண்ணாடியின் பேதத்தால் ப்ரதிபலிக்கும் முகங்கள் வேறு வேறாகத் தோன்றுகின்றன. வாஸ்தவத்தில் எல்லாம் ஒன்றே. இவ்விதமே ஒரே ப்ரஹ்மம் இரண்டு வஸ்துக்களில் ப்ரதிபலிப்பதால் மூன்றும் வேறு வேறாகத் தோன்றுகின்றன. அவற்றில், ஈச்வரரூபமான ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான மாயையில் அதிகமான ஸத்வகுணமிருப்பதால், அது அதிகமான ஞானம், சக்தி, முதலியவைகளை உள்ளதாயிருக்கும். கண்ணாடியிலுள்ள தோஷங்களெல்லாம் அதில் ப்ரதிபலித்த முகத்தில் தோன்றுகிறதுபோல, மாயையிலுள்ள அதிகமான ஞானம், சக்தி முதலியவை அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மத்தில் தோன்றுகிறது, அதனால் ஈச்வரன் ஸர்வஜ்ஞன், ஸர்வஸக்தன், ஸத்யஸங்கல்பன் முதலான வ்யவஹாரங்கள் நடந்து வருகின்றன. இவனுக்கு அதிகமான ஞான சக்திகள் இருப்பதால் இவன் ஆராத்யனாயும் (பூஜிக்கப்படுபவனாய்) தன்னை ஆராதிப்பவர்களுக்கு பலப்ரதனாயும் ஆகிறான். இந்த ஈச்வரன்தான் ஸகுண ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறான்.

    ஜீவ ரூபமான ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான அவித்யை அல்லது அந்தக்கரணம் ஸத்வகுணம் குறைவாயிருப்பதால் அல்பமான ஞான சக்திகளை உடையதாயிருக்கும். அதனால் அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மம் அல்பஜ்ஞமாய் அல்பசக்திகமாய்த் தோன்றுகிறது. இதனால் ஜீவன் அல்பஜ்ஞன் அல்பசக்திகன் என்கிற வ்யவஹாரம் நடந்து வருகிறது.

    மாயா பரிணாமமான அந்தக்கரணத்தின் விகாரங்களான ஞானம், இச்சா (ஆசை), க்ருதி (முயற்சி), த்வேஷம், ஸ{கம், துக்கம் முதலானவைகள் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிக்கிற ஜீவனிடத்தில் தோன்றுகிறபடியால் ஜீவனுக்கு நான் ஞாதா (அறிபவன்), போக்தா (அனுபவிப்பவன்), கர்த்தா (செய்பவன்) ஸ{கீ, துக்கீ முதலிய வ்யவஹாரங்கள் நடக்கின்றன.

    ஜலத்தில் ப்ரதிபலித்த சந்திரனிடத்தில் ஜலத்திலுண்டாகும் அசைதல் முதலியவை தோன்றி, சந்திரன் அசைகிறான் என்று ப்ரமத்தால் சொல்லப்படுவதுபோல் அந்தக்கரணத்தில் உண்டாகும் சலநாதிவிகாரம் (அசைதல் முதலிய செய்கைகள்) அதில் ப்ரதிபலித்த ப்ரஹ்மத்தில் தோன்றுவதால், ஜீவன் இகலோக, பரலோக ஸஞ்சாரம் (இவ்வுலகம் மேலுலகம் இவைகளுக்கு போவது, வருவது) செய்கிறான் என்கிற வ்யவஹாரம் உண்டாகிறது.

    ஜீவனுக்கு ஞானம், சக்தி முதலியவை குறைவு. அதனால் ராகத்வேஷாதிகளாலே தனக்கு இஷ்டமான வஸ்துவை அடைவதற்கும் சக்தியற்றவனாய், அதற்காக ஈச்வரனை உபாஸித்து, அவனுடைய அநுக்ரஹத்தால் ஐச்வர்யம் முதலான ஸம்ஸாரிக பலத்தை (ஸ்வர்கம் பூமி இவைகளிலேயே அனுபவிக்கக்கூடிய பலம்) அடைகிறான். நிஷ்காமனாய் (பலனில் ஆசையற்றவனாய்) ஈச்வரனை உபாஸித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்தசுத்தி உண்டாகி வேதாந்த ச்ரவணத்திற்கு அதிகாரியாகிறான் (ஒரு காரியத்தைச் செய்வதற்கு யோக்யதை உடையவனாகிறான்).

    பந்த மோக்ஷ நிரூபணம்
    இப்படி ப்ரஹ்மம் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிப்பதால் ஏற்பட்ட ஜீவாத்மா உண்மையில் நிர்விகாரமான ப்ரஹ்மமே. இப்படி இருந்தபோதிலும், அழுக்கற்ற ஸ்படிகத்தின் அருகில் வைக்கப்பட்ட செம்பரத்தம் பூவின் சிவப்பு தோன்றுவது போல, இந்த ஜீவனுக்கு உபாதியான அந்தக்கரணத்தின் விகாரமான ராகம், த்வேஷம் முதலியவை இவனிடத்தில் தோன்றுகின்றன. இந்த ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

    இப்படி ஜீவனுக்கு வந்த ஸம்ஸாரம் நீங்குவதற்கு வழி என்னவென்றால் யாகம், தானம், ஹோமம் முதலிய வைதிக கர்மங்களைக் கொண்டு இந்த ஜீவாத்மா ஈச்வரனை ஆராதித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்தசுத்தி பிறக்கிறது. பிறகு மோக்ஷத்தில் ஆசையுண்டாய் , அதற்காக வேதாந்த ச்ரவணத்தில் முயற்சிக்கிறான். பிறகு குருவின் உபதேசத்தால் ‘தத்வமஸி” என்கிற வேதாந்த வாக்யத்தின் அர்த்த ஜ்ஞானம் உண்டாகிறது. இந்த வாக்யத்தில் ‘தத்” என்கிற பதத்துக்கு ஸச்சிதானந்த ரூபமாய், ஸர்வ விகார ஹிதமாய் அத்விதீயமான பொருள் ப்ரஹ்மம். ‘த்வம்” என்கிற பதத்துக்கு, முஞ்ஜம் என்று சொல்லப்படும் புல்லின் மேல் புரைகளைக் கழித்து அதன் நடுவிலிருக்கும் குருத்தை வேறாக எடுக்குமாப்போலே, சரீரம், இந்த்ரியம் முதலிய உபாதிகளோடு கலந்திருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபத்தை விசாரத்தினால் அவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாக விவேகிக்கப்பட்ட சுத்தாத்ம ஸ்வரூபம் பொருள். இவையிரண்டுக்கும் அபேதம் தத், த்வம் என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்.

    இப்படி குரு உபதேசத்தாலே பரோக்ஷ ரூபமான நிர்விசேஷ சிந்மாத்ர ப்ரஹ்மாத்ம ஐக்ய ஜ்ஞானம் உண்டாகிறது. பின்பு குரு முகத்தாலே கேட்ட அர்த்தத்தை இடைவிடாமல் பாவனை பண்ணுவதால், ‘தத் த்வமஸி” வாக்யத்தால் ஸாக்ஷாத்கார ரூபமான முன் சொன்ன ஜ்ஞானம் உண்டாகிறது. அப்போது ஸகல ப்ராந்தியும் கழிந்து ப்ராந்திகளுக்கு மூலமான அவித்யையும் கழிந்து சக்கரத்தைச் சுற்றிவிட்டு, நாம் கையை எடுத்து விட்டாலும் சுழலுவது சில காலம் அநுவர்த்திக்கிறாப்போலே, இந்த கர்மத்தால் ஆரம்பிக்கப்பட்ட சரீரம் மாத்ரம் சிலகாலம் நிற்கிறது. இந்த நிலைதான் ஜீவன் முக்தியவஸ்தை என்று சொல்லப்படுகிறது. பின்பு ப்ராரப்த கர்மம் கழிந்ததும் சரீரம் கழிந்துவிடுகிறது. இந்த நிலை விதேஹ முக்தி என்றும் கைவல்யம் என்றும் சொல்லப்படும் பரமமோக்ஷம். அதாவது அவித்யா ரூபமான ஆவரணம் நிச்சேஷமாய்க் கழிந்து அகண்டாநந்த ப்ரஹ்ம ஸ்வரூப ஆவிர்பாவம். இந்த மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேறு உலகங்களுக்குப் போகவேண்டா. இருந்த இடத்திலேயே கிடைக்கும்.

    இந்த ஸித்தாந்தத்தில் ப்ரஹ்மம் தவிர வேறொன்றும் ஸத்யமானது இல்லை என்றும், ஜீவப்ரமங்கள் அபின்னமென்றும் ஒப்புக்கொள்ளுகிறபடியால் இதற்கு அத்வைத ஸித்தாந்தம் என்ற பெயர் உண்டாயிற்று.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: தத்வ மஞ்சரி-03 - அத்வைத ஸித்தாந்தம்

    Nice and expecting a lot from you. Rajaganapathy Sarma

    Comment

    Working...
    X