Announcement

Collapse
No announcement yet.

Wife

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Wife

    மனைவி அமைவதெல்லாம்! (முழுவதும் படிக்கவும் )
    திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.
    கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .
    ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
    விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.
    கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.
    புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?
    இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!
    எந்த புக்கும் படிச்சது இல்லையா ?
    ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!
    இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?
    நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!
    எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!
    எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!
    கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .
    ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.
    அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!
    இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?
    எதுக்கு வாங்குனீங்க..?
    இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
    ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?
    எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!
    (அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )
    யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!
    இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?
    ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!
    உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!
    அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?
    சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?
    யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?
    எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!
    என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.
    மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .
    ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்
    இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .
    கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!
    பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.
    மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா
    நானும் அவளிடம் கேட்கிறேன்
    உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு
    அதெல்லாம் ஒன்னும் வேணாம்
    இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
    பிடிக்குமென சிலதை சொல்ல
    முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.
    இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?
    ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.
    அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
    பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.
    நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .
    நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.
    இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.
    பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.
    குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .
    தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .
    வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!
    சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.
    இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!
    சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .
    இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!
    ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!
    எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
    ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
    தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..

  • #2
    Re: Wife

    Dear soundararajan Mama,

    Superb. I liked " சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் " this sentence very Much. I read your this postings three times.

    Very very nice.

    with Namaskarams

    S. Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment

    Working...
    X