Announcement

Collapse
No announcement yet.

Yoga Vasishtam in tamil part-4

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Yoga Vasishtam in tamil part-4

    Yoga Vasishtam in tamil part-4
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    யோகவாசிஷ்டம் வைராக்ய பிரகரணம் - 4
    தசரதன் கூறினான்.
    "மகாமுனியே , உங்கள் வரவு எங்களுக்கு தாமரைக் கூட்டத்திற்கு சூரிய உதயம் போன்றது. இந்நாள் நன்னாள். எங்களுடைய ஆனந்தம் எல்லை மீறுகிறது."
    இவ்விதம் அவரை சகல் மரியாதைகளுடன் அழைத்துச் சென்று முறைப்படி பூசித்த பின் தசரதன பின் வருமாறு கூறலுற்றான்.
    "பிரம்மரிஷியே உங்கள் வருகை அமிர்தம் கிடைத்ததைப் போலவும், காய்ந்த நிலத்தில் மாரிபெய்ததைப் போலவும், குருடனுக்குக் கண் கிடைத்ததைப் போலவும், பிள்ளையில்லாதவனுக்கு தன் அன்பு மனைவிமூலம் மகப்பேறு போலவும். இழந்தது கிடைத்தது போலவும், இறந்த நண்பன் திடீரென்று ஆகாயத்தினின்று குதித்தது போலவும் ஆனந்தத்தை அளிக்கிறது.
    ராஜரிஷி என்ற பதவியில் இருந்து பிரம்மரிஷி என்ற பதவிக்கு உயர்ந்த காமக்ரோதாதிகள் சுகதுக்கங்கள் முதலிய தளைகளில் இருந்து விடுபட்டு உள்ள தாங்கள் என்னை நாடி வந்தது என் பாக்கியம்.
    பிரம்மனே நேரில் வந்ததுபோல் உங்களைக் கண்டு பிறவிப்பயன் அடைந்தேன். என்னை நாடிவந்ததன் நோக்கம் என்ன என்பதை தெரிவித்தால் உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற சித்தமாக உள்ளேன். "
    இவ்வாறு அடக்கமே உருவான அரசனால் அன்புடன் கூறப்பட்டதைக் கேட்டு விச்வாமித்திரர் மகிழ்ந்து பேச ஆரம்பித்தார்.
    " அரசே, சிறந்த ரகு வம்சத்தில் உதித்து வசிஷ்டமகரிஷியால் வழி நடத்தப் பட்ட உன்னுடைய உன் மேன்மைக்குகந்த சொற்கள் எனக்கு மகிழ்வூட்டுகின்றன.
    உன்னால் எனக்கு ஆகவேண்டிய காரியத்தை செவிகூர்ந்து கேட்பாயாக.
    சித்தியடைய வேண்டி என்னால் ஆரம்பிக்கப்பட்ட யாகத்திற்கு ராக்ஷசர்கள் இடையூறு விளைவிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் யாக வேள்வியில் மாமிசம் உதிரம் இவற்றை எறிந்து யாகம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.
    இதனால் சோர்ந்த மனத்துடன் உன் முன் ஒரு உதவி வேண்டி வந்துள்ளேன். யக்ஞதீக்ஷையில் உள்ள என்னால் அவர்களை சபிக்கவோ தண்டிக்கவோ இயலாது. "
    இவ்வாறு கூறி எதற்காக வந்தாரோ அந்த எண்ணத்தை வெளியிடுகிறார்.
    "தவாஸ்தி தனய: ஸ்ரீமான் த்ருப்தசார்தூலவிக்கிரம:
    மஹேந்திர சத்ருசோ வீர்யே ராமோ ரக்ஷோ விதாரண:
    உன் புத்திரனான ராமன் புலியைப்போல பராக்கிரமம் உடையவன் , இந்திரனுக்கு ஒப்பான வலிமை படைத்தவன். அவன்தான் ராக்ஷசர்களை அழிக்க வல்லவன்.
    தம் புத்ரம் ராஜசார்தூல ராம சத்யபராக்கிரமம்
    காகபக்ஷ தரம் சூரம் ஜ்யேஷ்டம் மீ தாதும் அர்ஹஸி
    உண்மையான பராக்கிரமம் உடைய அழகிய குழல் கற்றையை உடைய உன்னுடைய ஜ்யேஷ்ட புத்திரனை எனக்குத் தருவாயாக."
    தசரதன் முகத்தில் குழப்பத்தைக் கண்டவர் போல மேலும் சொல்கிறார் .
    " என்னால் காப்பாற்றப்பட்டு தன் வல்லமையால் ராக்ஷசர்களை அவன் அழிப்பான். என்னிடமிருந்து எண்ணற்ற நன்மைகளைப் பெற்று மூவுலகிலும் போற்றப்படும் மேன்மையை பெறுவான்.
    ராக்ஷசர்கள் சிங்கத்தைக் கண்ட மான்கள் போல் இவன் எதிரில் நிற்க மாட்டார்கள். கோபம் கொண்ட சிங்கம் மதயானைகளை எவ்வாறு வீழ்த்துமோ அவ்வாறே ராமன் அரக்கர்களை சிதறடிப்பான்.
    இந்த ராக்ஷசர்கள் கரன் தூஷணன் இவர்களின் அடியாட்கள். யமனைப்போல் பயங்கரமானவர்கள். ஆனால் ராமனின் பாணங்களின் முன் நிற்க முடியாமல் தூசுபோல பறந்துவிடுவார்கள்.
    என்னைப்போன்ற ரிஷிகள் நிச்சயம் நடக்கப்போவதையே சொல்வார்கள். "
    இந்த இடத்தில் மூல ராமாயணத்தில் உள்ள அதே சொற்களைப பார்க்கிறோம்.
    " அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ராஜீவ லோசனம்
    வசிஷ்டஸ்ச மஹாதேஜா: யே சான்யே தீர்கதர்சின:
    மகிமை பொருந்திய ராமனை நான் அறிவேன் .
    வசிஷ்டரும் மற்ற ரிஷிகளும் அறிவர். "
    இங்கு ராஜீவலோசநம் என்றதன் பொருள் தசரதன் தாமரைக்கண்ணன் ஆகிய ராமனை தன் புத்திரனாகப பார்க்கிறான். ஆனால் அவன் உண்மையில் அந்த தாமரைக் கண்ணனான திருமாலே என்பது.
    இதைக்கேட்ட தசரதன் ஒரு கணம் என்ன சொல்வதென்று தெரியாமல் வாளாவிருந்தான்.
    பிறகு அவனுடைய மறுமொழி மூல ராமாயணத்தைக காட்டிலும் விரிவாக உள்ளது.
Working...
X