PDA

View Full Version : Lemon garland - Storysoundararajan50
28-06-2018, 08:30 PM
எலுமிச்சம்பழ மாலை (மனதை தொட்டுவிடும் கதை 23) #ganeshamarkalam
இப்போல்லாம் நான் அந்த தப்பை பண்ரதில்லை. எதை நிறுத்தினேன், ஏன், எப்படிங்கிரதை விவரமா சொன்னாத்தான் புரியும். அவசரப்படாதீங்கோ. சொல்லத்தானே வந்துருக்கேன்.
எனக்கு பூர்வீகம் நாமக்கல். வெய்யல் கொளுத்தும். ஒரே பாறை. பகல்பூரா சூட்டை கிரஹிச்சுண்டு சாயங்காலம் கொட்டும். வைதீகக்குடும்பம், தினப்படி வாழ்க்கை. எங்கூர் ஆஞ்சனேயர் பிரபலமானதும் சித்த வருமானம் கூடித்து. இருந்தாலும் நம்மவா பொறாமையையும் கூடவே வளர்த்துண்டா. பாத்தேன்; இங்கேயே குண்டுசட்டீலே எவ்வளவுநாள் குதிரை ஓட்டரதுன்னுட்டு கிளம்பிட்டேன். எனக்கென்ன பொண்டாட்டியா குட்டிகளா? 30 வயசாச்சு பாத்து செய்யரத்துக்குன்னு யாருமில்லை.


என்னோடதுன்னு ஒரு குடுமி மட்டுமே. நான் என்ன சொன்னாலும் கேட்கும். நான் தலையை ஆட்டினா அதுவும் ஆடும். கண்ணாடிலே பார்த்துண்டே போயிடலாமான்னு கேட்டேன், சரின்னுடுத்து. அதையும் கூடவே கூட்டிண்டு கிளம்பிட்டேன்.


அங்கே இங்கேன்னு சுத்தி திரிஞ்சு எப்படியோ தினப்படி வருமானத்துக்கு வழி பண்ணிண்டேன். கோவில்லேதான். எதையும் செய்வேன். எதுக்கும் தயார். பூ பரிச்சு, தொடுத்து விப்பேன். இது என்னடா ஆம்பிளை, வெளியூர்காரன் இங்கே நமக்கு போட்டின்னு பெண்டுகள் துரத்திவிடுவா. அப்புரம் பிரசாதக்கடையை பாத்துக்கிரது. கொஞ்சநாளில் தெரிஞ்சது, முதலாளி, பிராமண்ரே இல்லை, ஆத்தில் பண்ணி பிளாஸ்டிக் கவெரில் போட்டு, லட்டு, அதிரஸசம் அப்படின்னு என்னை முன்னாடி நிறுத்தி மடி ஆசாரமா செஞ்சு நெய்வேத்யம் பண்ணினதுன்னு வித்துடரார்னு. மனசு கஷ்டப்பட்டது. வாங்க வந்த ஒரு மாமி எப்படி செய்யரேள்னு கேட்டப்போ எல்லா விவரத்தையும் கக்கிட்டேன். என்னை முதல் காரியமா போகச்சொல்லிட்டார்.


இன்னொரு கோவிலில் ஆபீஸ் வேலை. ரெண்டு பில் புஸ்தகம் வச்சுண்டு அர்ச்சனை சீட்டு விக்கரதும், ரசீதுகொடுக்காம சரபேஸ்வரர் ராகுகால பூஜைக்கு சைட்லே பணம் பண்ரதும் தெரிஞ்சது. சரி தமிழ்நாட்டை விட்டுட்டு போயிடணும்னு தீர்மானமா இங்கே வந்தாச்சு.


இங்கேன்னா எங்கே?


காவேரிக்கரையில் நிமிஷாம்பா கோவில். ஸ்ரீரங்கபட்டணத்துக்கு வரவா இங்கே வராம போகமாட்டா. எப்போவும் ஜேஜேன்னு கும்பல். கோவில்லேந்து கொஞ்ச தூரம் போனா காவேரியே ரெண்டா பிரிஞ்சு திரும்பவும் சங்கமிக்கர இடம் திருவேணின்னு எல்லோரும் குளிக்க போவா. வரச்சே திப்பு கட்டின மாளிகை மசூதி எல்லாம் வரும், குளிச்சாதான் மசூதி தீட்டு கழியும் அப்புரம்தான் அம்பாள் தரிசனம். காவேரியில் எப்போவும் தண்ணி இருக்கும், ரொம்பவே ரம்யமான இடம். சின்ன கோவில், அழகு சொட்டும். அம்பாள், பார்வதி-துர்கை ரொம்ப பவர்ஃபுல், இங்கே ஸ்ரீசக்ரம் இருக்கு. அம்பாளுக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தினா விசேஷம்.


பாருங்கோ கதையின் தலைப்புக்கு லிங்க் போட்டுட்டேன்.


நான் நாமக்கல்காரன் இங்கேயே இருக்கலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்னா பாருங்கோ. இப்போ எனக்கு 42 ஆரது. கல்யாணமும் ஆயிடுத்து. கன்னட பிராம்ணா குடும்பம். இங்கே கோவிலுக்கு அடிக்கடி வந்தா. அவளுக்கு என்னை பிடிச்சுது. இந்த வயசில் என்னையும் பிடிச்ச ஒரு ஜீவன். நான் 12ஆவது வரைக்கும் படிச்சேன், அவள் படிக்கலை. அப்பா இல்லை. அம்மா கிட்டக்க கல்யாணங்களில் சமையல் உதவிக்கு, அல்லது வேர ஆத்தூக்காரியங்களுக்கு போரவா. இவளுக்கு 32 வயசு, ரொம்ப விசாரிக்கலை, பண்ணிண்டுட்டேன். கொஞ்சம் தெத்துப்பல், ஆசைப்பட்டு பின்னாடி போனப்போ கண்ணுக்கு தெரியலை. அப்பப்போ மனசை உறுத்தும். தேத்திப்பேன். 4வயசில் ஒரு பெண்குழந்தை, LKG போரா. அவகிட்டே இவ ஏ, பி, சி கத்துக்கரா!


நிமிஷாம்பா கோவிலில் என் வேலை என்னன்னு தெரிஞ்சுண்டேள்னா திட்டித்தீத்துடுவேள். எப்படி இருந்த நீயா இப்படி மாறிட்டாய்னு கேப்பேள். என்ன பண்ரது? எனக்கு ஒரு விஷயம் ஸ்பஷ்டமா விளங்கித்து. நேர்மை ஞாயம்னு ஒண்ணும் கிடையாது, எல்லாம் நாமே போட்டுண்ட வேலிகள். கோவில் சுவத்துக்குள்ளேயே, பகவான் சன்னதியிலேயே அவர் பேரை சொல்லித்தான் நிறைய அநியாயங்கள் நடக்கரதை கண்கூடா பாத்துட்டேன். இதுவரைக்கும் இருந்த இடங்களிலெல்லாம் அதுவே பலபேரை பேஷா வாழவச்சுண்டிருந்ததையும். நான் மட்டும் எவ்வளவு நாளைக்குத்தான் தாக்குப்பிடிக்கிரது? அப்படி என்ன பெரிசா தப்பு பண்ணிடப்போரோம்னு தோணும்.

ஊர்ஜிதப்படுத்தரா மாதிரி இதைப்பத்தி கேட்டப்போ அதான் கண்ணாடி முன்னாடி நின்னுண்டு இது தப்பில்லையா, இப்படி பண்ணலாமான்னு என் குடுமியை கேட்டப்போ, இல்லைன்னுடுத்து. அப்புரம் என்ன? மனசாக்ஷியே வருடிக்கொடுத்து என்னை உன் இஷ்டம்போல இருன்னு ஆசீர்வாதம் செஞ்சாப்போல. அன்னைக்கு அதுக்கு ஸ்பெஷல் வாசனை எண்ணை மசாஜ் செஞ்சு முடிஞ்சிண்டேன்.


என் வேலை என்ன? அம்பாள் சன்னிதி குருக்களுக்கும், வெளீலே மாலை கடை வச்சிருக்கிரவாளுக்கு நடுவுலே ஒரு பாலம் போல செயல்படணும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சைடாலே நேர அம்பாள் சன்னிதிக்கிட்டே போகணும். குருக்கள் 30நிமிஷத்துக்கு ஒருதடவை அம்பாள் மேல சாத்தின எலுமிச்சைமாலைகளை எடுத்து சேர்த்து என் கையில் கொடுப்பார். அதை அப்படியே கொண்டுவந்து அலுங்காம, நலுங்காம அவர் சொன்ன கடைகளில் கொடுக்கணும். அரைமணிக்கு ஒருதடவை. இதில் ஒரே ஒரு சூட்சுமம்தான். எடுத்துண்டு வர மாலை கோவிலுக்குள்ளேந்து வரதுங்கரது பக்தாளுக்கு தெரியப்பிடாது.


மாலை ஒண்ணு 80ரூபாலேந்து 120ரூ வரைக்கும். எனக்கு மாலைக்கு 20ரூ தருவா. தினம் மினிமம் 2000ரூ கிடைக்கும். சிலநாட்கள் ஜாஸ்தி. எங்கேயொ சோத்துக்கு அலைஞ்சுண்டு கிடந்தவனை நிமிஷாம்பாதான் அருள்பாலிச்சு இங்கே ஒரு வாழ்க்கைத்துணையையும் சிக்க வச்சு பூவாக்கும் வழி செஞ்சிருக்கான்னு நினெச்சுப்பேன்.


நான் செய்யரது தப்புதான், ஆனா என் உதவியோட என்னைவிட பணம் பண்ரவா, இப்படி நடக்ரதுன்னு தெரிஞ்சுண்டும் கண்டுக்காம அதில் கொஞ்சம் தானும் சுரண்டிண்டு சந்தோஷமா வாழரவா நிறைய. மாலையை கொடுத்துட்டு நகந்து போயிடுவேன். ஒருநாள் ஆம்பரீஷ் (மாலை கடைக்காரன்) வரலை, அவனோட பொண்டாட்டி சௌந்தர்யாதான் கடையை பாத்துண்டிருந்தா. கொடுத்த மாலைகளை அவ நீட்டா எடுத்து ஆணிலே அழகா புதுசா கோத்த மாலை மாதிரி வச்சுண்டிருந்ததை அந்த ஆங்கிள்லெ பாக்க ஒரு மார்கமா இருந்ததுன்னு நாக்கை தொங்கப்போட்டுண்டு நின்னுட்டேன்.


அப்போதான் அந்த 60 வயசு மிக்க தம்பதி தமிழ்காராதான் - எலுமிச்சை மாலை எவ்வளவுன்னு கேக்கிரா. இவ கூசாம 108 பழம்னா 200ரூவாய்னு சொல்லி, 10 ரூவா கழிச்சுண்டு கொடுங்கோன்னு வித்துட்டா. அவர் பாவம் அதை பதவிசா, பக்தி ஸ்ரெத்தையோட பிடிச்சுண்டு அவர் மனைவி பின்னாடியே வர காயத்ரி ஜபிச்சுண்டு கோவில் லைனில் நின்னுக்கரார். எனக்கு தெரியும் அந்த மாலை 15 தடவை உள்ளெ போயிட்டு வந்ததுன்னு. வந்த மாலையே வரதுன்னு அம்பாள் தோளுக்கு தெரியாமலா இருக்கும்?


எனெக்கெனமோ மனசை பிசைஞ்சது. அவர்கிட்டே சொல்லிடணும்னு தோணித்து. புது மாலை கொடுக்கலாமான்னு.


அப்போதான் ஆத்துக்காரிகிட்டேந்து போன். குழந்தை ஸ்கூலில் மயக்கம் போட்டு விழுந்துட்டாளாம். ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டு போனாளாம், உடனே வாங்கோன்னா. ஓடரேன். தெய்வமே, என்னவா இருக்கும், சரியா சாப்பிடலையா என்ன? போனா, டெஸ்ட் எடுத்திருக்கு, கொஞ்சம் வெயிட் பன்ணுங்கோங்கிரா. மத்தியானம் வரைக்கும் நானும், அவளும் பதபதைச்சுண்டு நிக்கரோம். ட்யூடிடாக்டர் யாரோடையோ போனில். என்னைப்பாத்து கிட்டே வாங்கோன்னு கூப்பிடரார். உங்க குழந்தைக்கு ஹிருதயத்தில் ஒரு சின்ன பிராப்ளம். ஆபரேஷன் செய்யவேண்டியிருக்கும். ஆனால் யதேச்சயா சென்னைலேந்து மிகப்பெரிய ஹிருதய நிபுணர் இங்கேதான் பக்கத்துலே வந்திருக்கார், அவரை கூப்பிட்டிருக்கோம், வந்து பாத்தப்பரம்தான் சொல்லமுடியும்னு சொல்ரார்


அப்போ காரில் ஒரு தம்பதி, அதான் கோவிலில் பாத்தேனே, முதியவர், பழைய மாலையை புதுசுன்னு நம்பிண்டு போனவர் அவர் இறங்கிவரார். என்னை அவருக்கு அடையாளம் தெரியலை. உள்ளெ போய் நேரா என் குழந்தைகிட்டே போய் பார்த்துட்டு ரிபோர்டெல்லாம் படிக்கரார். அப்புரம் என்னென்னவோ பெசிக்கரா.


என் மனைவியோ "அம்மா நிமிஷாம்பா, எங்காத்துக்காரர் நீயும் உன் கோவிலுமே கதின்னு கிடக்கார், எங்களை கைவிட்டுதாதேன்னு" அழரா. நான் கோவிலில் எப்படிப்பணம் பண்ரேன்னு இவளுக்கு தெரியாது. டாக்டர்ஸ் எல்லாரும் வெளியே வரா. பெரியவர் எங்கிட்டெ வந்து ஆறுதலா என் கையை பிடிச்சுண்டு, ஒண்ணும் பயப்படவேண்டாம், ஷி இஸ் ஓகே, 1 மாசம் மருந்து சாப்பிட்டா சரியாயிடும், எழுதிக்கொடுத்திருக்கேன், வாங்கிக்கோன்னு சொல்லிண்டே காரில் ஏறிப்போரார்.


இப்போல்லாம் நான் அந்த தப்பை பண்ரதில்லை. எந்த தப்புமே. ரெங்கநாதஸ்வாமி கோவில் திருப்பணி நடக்கிரது. அதில் எனக்கு வேலை. அன்னைக்கு நிமிஷமா அந்த நிமிஷாம்பா என்னை திருத்திட்டா.
குடுமியையும் எடுத்துட்டேன், கிராப் வச்சுண்டிருக்கேன்!