PDA

View Full Version : POSTMASTER - Small story by Tagore in Tamilsoundararajan50
05-03-2019, 04:48 PM
POSTMASTER - Small story by Tagore in Tamil
போஸ்ட் மாஸ்டர் J.K. SIVAN


நமது ஊரில் ஒரு அலுவலகத்தில் ஒருவனை அவனது துரதிர்ஷ்டவசத்தால், மேலதிகாரியோடு மனக் கசப்பு ஏற்பட்டாலோ, மேலதிகாரியோடு தகராறு வந்தாலோ அடுத்த கணம் நாம் கேள்விப்படுவது அந்த ஆளை ஒரு தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது. தெய்வானுகூலமாக அப்படி தண்ணி இல்லா காடாக மாற்றப்பட்ட இடம் ஒரு சிறந்த சௌகரியமான, மரியாதை உள்ள இடமாக அமைந்தால் அது அந்த உத்யோகஸ்தனின் பூர்வ ஜன்ம கர்ம பலன்.


உலபூர் என்கிற கிராமத்தில் இருப்போரை ஒரு மணி நேரத்திற்குள் நேராகவே போய் பார்த்து எண்ணிவிடலாம். மனிதர்களை விட மரங்கள், மிருகங்கள், கோவில்கள் அதிகம் உள்ள ஊர். யாரும் கோபித்துக்கொண்டு மாற்றாமலேயே ஒரு போஸ்ட் மாஸ்டருக்கு அந்த ஊரில் தான் உத்தியோகம் கிடைத்தது. அவர் அலுவலகம் ஒரு சாயப் பட்டறையின் வாசலில். பட்டறை சொந்தக்காரன் ஒரு வெள்ளைக் காரன். அவனுடைய பட்டறைக்கு தேவையான பொருள்களை கடுதாசுகளை அனுப்ப, பெற, ஒரு போஸ்டாபீஸ் தேவைப் பட்டதால் அவனுக்கு தெரிந்த மேலிடத்து வெள்ளைக்கார அரசாங்க அதிகாரி இந்த போஸ்டாபிசை உருவாக்கியதில் நமது போஸ்ட் மாஸ்டருக்கு ஜீவனோபாயம் கிட்டியது.


போஸ்ட் மாஸ்டரின் பூர்வீகம் கல்கத்தா. அவரைப் போய் இந்த குக் கிராமத்தில் போட்டதில் துடித்தார். வாசல் கதவு தாண்டி ஒரு ஹால் மாதிரி. அதன் ஒரு முனையில் அவர் நாற்காலி மேஜை. எதிரே ஒரு அறை தான் அவர் கிடங்கு. அவருக்கு பின்னால் இருந்த அறை அவரது வீடு என்றோ படுக்கை அறை என்றோ எடுத்துக் கொண்டால் அதை ஒட்டிய இருட்டு அறை தான் சமையல் அறை . அதில் அவர் குடும்ப சாமான்களும் சில தேள் குடும்பங்களும் ஒற்றுமையாக இருந்தன. வாசலில் இருந்த கீத்துக் கொட்டகை தான் போஸ்டாபிஸ் வரவேற்பறை. கொஞ்சம் தள்ளி ஒரு பாசி பிடித்த குளம். அதன் கரை அந்த கிராம பொது கழிப்பிடம். அதன் துர்கந்தம் வெயில் ஏற ஏற போஸ்டாபீசை வியாபிக்கும். அப்போது அவர் லெட்டர் டெலிவரி பண்ண போய்விடுவார். தபாலாபீசுக்கு யாரும் அதிகமாக வருவதில்லை. எனவே அந்த நேரத்தில் கவிதைகள் எழுதிப் பழகுவார்.


காற்றில் மரங்களின் அசைவு, இலைகளின் சலசலப்பு, கிளைகள் உராய்வு, பக்ஷி களின் வித வித சுரத்தில் ஆலாபனங்கள், மேகக்கூட்டங்கள், சூரிய உதயம், அஸ்தமனம், மழையின் அழகு, புது மண்ணின் மணம். நிறையவே இருக்கிறது அல்லவா கவிதைக்கு விதைகள்....


வந்த வரை எதுகை மோனை. அதற்குமேல் எதற்கு இலக்கணம். இந்த வாழ்க்கை போஸ்ட் மாஸ்டருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக்கமாகிவிட்டது. ஒரு இரவில் ஒரு அலாவுத்தீன் பூதம் இந்த மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி எங்கும் தார் ரோடுகள், அதில் வண்டிகள், சாலையின் இருமருங்கும் ஒன்றை ஒன்று தழுவி அடுக்கடுக்காக வீடுகள்...அதனால் கல்காத்தா போல் நிறைய ஜனங்கள். . இப்படியெல்லாம் கூட கற்பனை அவருக்கு தோன்றும். போஸ்ட் மாஸ்டருக்கு கை நிறைய, பை நிறைய, சம்பளம் கிடையாது. அந்த சொல்ப வருமானத்தில் தானே ஸ்வயம்பாகம்.


ஒரு அனாதைப் பெண் ரத்தன் போஸ்ட் ஆபிசை சுற்றிக்கொண்டிருப்பாள் . மீந்த உணவு அவளுக்கு. எடுபிடி வேலைகள் அவருக்கு அவள் தான் செய்வாள்.


அஸ்தமன நேரத்தில் மாடு கன்று வைத்திருக்கும் இடையர்கள் பகுதி (தபாலாபிஸ் அருகே இருந்தது) யிலிருந்து மேலே சமையல் புகை வரும். பறவைகள் பறந்து கூடு செல்லும். கிராம ஜனங்கள் சிலர் வழக்கமாக ஒரு இடத்தில் கூடி பாட்டும் மேளமும் கும்மாளமாக இருக்கும். அது காதில் விழும். இருட்டு கவ்வும் நேரம். தபாலாபிஸ் வாசலில் ஒரு அரிக்கன் விளக்கு தொங்கும்.


''ரத்தன்?'' கூப்பிடுவார் அந்த பெண்ணை.
''கூப்பிட்டிங்களாப்பா?'' அருகேயே வாசலில் உட்கார்ந்திருந்தாலும் பதில் மட்டும் வரும் அவளிடமிருந்து.
''என்ன பண்றே?''
''விளக்கு ஏத்தறேன் பா. சமையல் செய்யணும்"
''எனக்கு முதல்லே இந்த குழாய் சுருட்டு கொஞ்சம் பத்த வையேன்?'''


அடுப்பு கரியை தணலாக்க ஊதிய கன்னம் உப்பியவாறு, ரத்தன் அவர் புகையிலை சுருட்டு குழாயில் தணலோடும் புகையொடும் வருவாள். சந்தோஷம் அவருக்கு பொங்கும். அவளோடு பேச்சு தொடரும்.
''ரத்தன் உனக்கு உன் அம்மாவை ஞாபகம் இருக்கிறதா?''
''இல்லேப்பா, அம்மாவை பத்தி லேசா ஏதோ கொஞ்சம் நினைப்பு இருக்கு. ஆனா அப்பா பத்தி தான் கொஞ்சம் கூடவே ஞாபகம் இருக்கு.''
அப்பா, அம்மாவை விட ரத்தன் மேல் ஆசையும் பாசமும் கொண்டவர். வேலையிலிருந்து சாயந்திரமாக வீட்டுக்கு வருவார். சில சாயங்காலங்கள் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. சில நாள் கொஞ்சுவார். பல நாள் அடிப்பார்.


ரத்தன் போஸ்ட் மாஸ்டர் காலடியில் கீழே தரையில் தான் உட்காருவாள். அவளுக்கு ஒரு தம்பி. குளத்தங்கரையில் அவளும் அவனும் மீன் பிடிக்க உட்கார்ந்ததேல்லாம் நினைப்பு வரும். இருவர் கையிலலும் ஒரு நீளமான குச்சி, அதில் நூல், நுனியில் ஒரு ஊக்கு, அதில் புழு. மீனுக்காக காத்திருப்பார்கள். இரவு கருக்க ஆரம்பிக்கும் போது எழுந்திருப்பார்கள். ஏதேதோ பேச்சு இருவருக்கும் அதுவரை.


சில சாயந்திரங்கள் போஸ்ட் மாஸ்டருக்கு சமைக்க பிடிக்காது. சோம்பல் வந்துவிடும். அப்போதெல்லாம் ரத்தன் உள்ளே போய் கரி அடுப்பு மூட்டி புகை மண்டலத்தில் அமர்ந்து சமைப்பாள். ரொட்டி சுட்டு தருவாள். காலையில் செய்த ஆகார மீதியோடு அது இரவு டின்னர் ஆகிவிடும். இருப்பதை போஸ்ட் மாஸ்டரும் ரத்தனும் காலி செய்துவிடுவார்கள்.


சில சாயங்காலங்கள் அந்த வராந்தா ஒர சாய்வு மேஜை முன் அமர்ந்து தன்னுடைய பழைய வாழ்வை போஸ்ட் மாஸ்டர் நினைவு கூறுவார். எங்கோ ஊரில் உள்ள தனது அம்மா,தங்கை, ஞாபகம் வரும். மனது வாடும். அவர்களைப் பற்றி யாரோடு பேசுவது? சாயப்பட்டறை ஆட்களோடா?? ரத்தன் அவர் எண்ணங்களின் குமுறலை அமைதியாக கேட்பாள். சிலது அவளுக்கு புரியாது. எனினும் தலையை ஆட்டுவாள். அவரது உறவுகளை அவளும் தனது உறவுபோல் அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, என்பாள். ஏதோ ரொம்ப காலம் அவர் குடும்பதாரை பார்த்தது போலும் பழகியது போலும் பேசுவாள். அவளுடைய சிறிய இதயத்தில் அவர்களைப் படம் பிடித்து வைத்திருப்பாள்.


ஒரு மத்யானம் கொட்டோ கொட்டு என்று மழை. வானம் பொத்துக்கொண்டது. அதை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரப் புல் மண், இலைகள் வாசம் வீசின. காய்ந்த பூமியிலிருந்து மழையின் ஈரம் பட்டவுடன் சூடாக அதன் பெருமூச்சு ஆவியாக வெளியேறியது. எங்கோ ஒரு பறவை மண்டை வெடிக்க வாய் ஓயாமல் கீச்சுக் குரலில் கத்திக்கொண்டே இருந்தது.


போஸ்ட் மாஸ்டருக்கு வேலை இல்லை. மரங்களில் இலைகள் புத்துணர்ச்சியோடு மழையில் குளித்து விட்டு பசேல் என்று இருந்தன. மழை பொழிந்து வானத்தில் மேகங்கள் இளைத்திருந்தன. கருமை போய் ஒரு சாம்பல் நிறம், வெண்மை இடையே இடையே.


''கிருஷ்ணா எனக்கு என்று யாராவது இங்கே இருக்க கூடாதா?'' என் இதய ஒலியை கேட்க யாருமே இல்லையே.?'' அந்த வாய் ஓயாத பறவை என்ன சொல்கிறது.? அந்த இலைகளின் ஓசையும் அதையே சொல்கிறதோ என்னவோ? ''


''ரத்தன்'' கூப்பிட்டார் அந்த சிறுமியை.
கொய்யா மரத்தடியில் படுத்துக்கொண்டு ஒரு காயை கடித்துக்கொண்டிருந்தாள். எஜமானன் குரல் கேட்டதும் எழுந்து ஓடி வந்தாள் .
''கூப்பிட்டீங்களா அப்பா?''
''என்னவோ ரத்தன், உனக்கு படிக்க சொல்லிக்கொடுக்கணும் என்று தோன்றிற்று" அன்று பகல் முழுதும் அவளுக்கு எழுத்துக்கள் அக்ஷராப்யாசம் ஆயிற்று. .


வெகு சீக்கிரமே ரத்தனுக்கு எழுத்து கூட்டி படிக்க முடிந்தது. ஆனால் ரொம்ப நேரமாகியது.


மழைகாலம் அவ்வளவு சீக்ரம் அந்த ஊரை விட்டு வைக்கவில்லை. துளைத்தெடுத்தது. குளம், குட்டை, கால்வாய், வாய்க்கால் ,எல்லாம் ரொம்பி பொங்கி வழிந்தது. இரவு பகல் பேய் மழை. ''தண்ணி கருத்திருச்சு,, தவளை சத்தம் கேட்டிருச்சி'' கிராம தெரு பூரா செம்மண் தொப்பம்.


ஒரு நாள் காலையிலேயே இருண்ட மேகங்கள் மேலே. வாசலில் ரத்தன் காத்திருந்தும் ஏன் அப்பா கூப்பிடவில்லை, கதவு திறக்கவில்லை?? கையில் பாட புத்தகத்துடன் உள்ளே நுழைந்தாள். படுக்கையில் போஸ்ட் மாஸ்டர். தூங்குகிறார் என்று திரும்பினாள் .
'' ரத்தன் '? குரல் வந்தது.
''தூங்கலையா அப்பா?''
'உடம்பு சரியில்லைமா. என் நெத்தியை தொட்டுப் பார். சுடுதா?"-- ஈனஸ்வரத்தில் வார்த்தைகள்.


தனியாக எங்கோ அனாதையாக வாழ்ந்த அவருக்கு அந்த பெண் தெய்வமாக இருந்தாள். அந்த பிஞ்சு கரங்களின் தொடல், கை வளைகள் நெற்றியில் படும்போது தன் அம்மாவே வந்து ''என்னடா கண்ணா ஆச்சு உனக்கு?'' என்று ஆதரவாக கேட்பது போல் இருந்தது. அக்காவோ தங்கையோ பாசமுடன் கவனிப்பது போல் இருந்தது. அவர்கள் தான் எங்கேயோ இருக்கிறார்களே? இப்போது ரத்தன் தான் அம்மா. அக்கா, தங்கை எல்லாமே. போய் கிராம மருத்துவரை கூட்டி வந்தாள் . மருந்துகளை கொடுத்தாள் கஞ்சி வைத்து புகட்டினாள் . இரவெல்லாம் தலைகாணி அருகே உட்கார்ந்து கவனித்தாள் நடு நடுவே ''எப்படிப்பா இருக்கு?' பரவாயில்லையா?'


சிறிது நாளில் கொஞ்சம் உடம்பு சரியானது. எப்படியாவது இந்த இடத்திலிருந்து மாற்றல் வாங்கிக்
'கொண்டு போகவேண்டும். இந்த பொட்டைக் காட்டில் இனியும் காலம் தள்ளுவது கடினம். கல்கத்தாவுக்கு கடிதம் பறந்தது. உடம்பு நலமில்லை உடனே மாற்றல் வேண்டும்.''


அப்பாவுக்கு உடம்பு சரியானதும் பழையபடி ரத்தன் வாசலிலேயே காவல் இருந்தாள். அவர் கூப்பிடுவது இல்லை. உள்ளே எட்டிப் பார்ப்பாள். பேசாமல் உட்கார்ந்திருப்பார், படுத்திருப்பார். மோட்டு வளையை பார்த்தவாறு ஏதோ யோசனை. அவர் கூப்பிட மாட்டாரா என்று அவள் காத்திருக்க உன்னை மாற்றியாகி விட்டது என்று கடிதம் வராதா என்று அவர் காத்திருந்தார். பழைய பாடங்களையே திரும்ப திரும்ப படித்தாள் .


ஒரு வாரம் ஓடியது. ஒருநாள் சாயந்திரம்.
''ரத்தன் ' போஸ்ட் மாஸ்டர் கூப்பிட்டார். ''
''கூப்பிட்டீங்களா அப்பா'' உள்ளே ஓடினாள்
''நான் நாளைக்கு இந்த ஊரை விட்டு போறேம்மா''
''எங்கே அப்பா''
''என் வீட்டுக்கு''
"எப்போ வருவீங்க?''
"வரவே மாட்டேன்''
அவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
''நான் மாற்றல் கேட்டிருந்தேன். இல்லேன்னுட்டாங்க. நான் இந்த வேலை வேண்டாம்னு எழுதிக் கொடுத்திட்டேன் ரத்தன்''
கொஞ்ச நேரம் இருவருமே பேசவில்லை.
விளக்கு மங்கலாக எரிந்தது. மேலே கூரையிலிருந்து சொட் சொட்டென்று மழை உள்ளே வழிந்தது. கீழே வைத்திருந்த பாத்திரத்தில் நிரம்பும் சத்தம் கேட்டது. .


வெறித்து பார்த்துக்கொண்டிருந்த ரத்தன் எழுந்தாள் . ராத்திரி சாப்பாடு தயார் செய்ய கிளம்பினாள் . வழக்கம் போல் வேகம் இல்லை. என்னென்னவோ புது எண்ணங்கள் இந்த இளம் மனதில் புகுந்தன. போஸ்ட் மாஸ்டர் சாப்பிட்டார்.
''அப்பா என்னையும் கூட்டி செல்வீங்களா?
'' ஒ... இது என்ன புதுசா? என்று அவர் மனதில் எண்ணம் தோன்றியது. அவள் இரவு பூரா தூங்கவில்லை.
பொழுது விடிந்தது. குளிக்க தண்ணீர் அண்டாவில் ரெடியாக வைத்திருந்தது. இது கல்கத்தாவில் காலையில் குளிக்கும் வழக்கம். கிராமத்தில் குளிப்பதானால் ஆற்றில் முழுகுவது வழக்கம். எப்போது கிளம்புகிறீர்கள் என்று அவள் கேட்கவில்லை. எனவே காலையிலேயே சூரிய உதயத்துக்கு முன்பாகவே அண்டாவில் நீர் நிரப்பி வைத்திருந்தாள். எஜமானன் குளித்தார்.
''ரத்தன்''
சத்தம் இன்றி உள்ளே வந்தாள் . பார்த்தாள்.
''நான் இங்கிருந்து போவதை பற்றி நீ கவலைப் படாதே. இங்கே எனக்கப்புறம் வரும் போஸ்ட் மாஸ்டரிடம் உன்னைப் பற்றி சொல்கிறேன்.." இந்த வார்த்தைகள் அவளுக்கு ஆறுதல் அளிக்க வில்லை. நிறைய தடவை திட்டி இருக்கிறார். அப்போது இதயம் சூடாக வில்லை. இப்போது இந்த தன்மையான வார்த்தைகள் அவள் இதயத்தை வெடிக்க வைத்தன. அழுதாள்.
''என்னைப் பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம். நானும் இனிமேல் இங்கே இருக்க போவதில்லை''
போஸ்ட் மாஸ்டர் சிலையானர். ரத்தன் இப்படி கண்டிப்பாக பேசி இதுவரை பார்த்ததில்லையே.
புது போஸ்ட் மாஸ்டர் வந்தார். பழையவர் பொறுப்பை ஒப்படைத்தார். கிளம்பினார்.
'' ரத்தன்.
அவர் கையில் ஒரு கவர். ரத்தனிடம் நீட்டினார். அதில் அவர் ஒருமாத சம்பளம். இது உனக்கு கொஞ்ச காலம் உதவும்''
ரத்தன் அவர் காலில் அழுதுகொண்டே விழுந்தாள். ''அப்பா, கெஞ்சி கேட்டுக்கறேன். எனக்கு எதுவும் தராதீர்கள். என்னைப்பற்றி கவலை வேண்டாம்'' வெளியே சென்றுவிட்டாள்.


ஒரு நீண்ட பெருமூச்சு. தன்னுடைய பெட்டி படுக்கையை, தூக்கிக்கொண்டு குடையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினார். படகில் ஏறவேண்டும். நீரில் படகு மிதந்தது. கண்களிலும் வெள்ளம் அவருக்கு. இதயம் வலித்தது.துயரத்தோடு நின்ற ரத்தன் முகம் மனத்திரையில் பெரிதாக தெரிந்தது.


திரும்பி போய்விடலாமா என்று பைத்தியக்கார எண்ணம். அவளையும் அழைத்துச் செல்லலாமா? காற்று பாய் மரத்தில் சாதகமாக வீச படகு வேகமாக முன்னேறியது. தூரத்தில் அந்த கிராமம் பச்சையாக தெரிந்தது. எங்கோ ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. இது தான் வாழ்க்கை. எத்தனையோ சந்திப்புகள், மரணம். பிரிவு. நட்பு. என்னென்னவோ. இது தான் உலக வாழ்க்கை. சென்றது எதுவுமே என்று மீண்டது?


இந்த தத்துவம் எல்லாம் ரத்தன் மனதில் இல்லை. அந்த தபாலாபிசை கண்ணீரோடு சுற்றி வந்தாள் . அப்பா எப்படியாவது இங்கே திரும்ப வருவார் என்று ஒரு எதிர்பார்ப்பு. அதனால் அந்த இடத்தை விட்டு நகர வில்லை. ஏதோ நம்பிக்கை நம்மை செலுத்துகிறது. அது மூட நம்பிக்கையோ தப்போ, சரியோ தெரியாது. நடக்கும் நடந்துவிடும் என்று ஏதோ உள்ளே தைரியம் அளிப்பது தான் நமக்கு சக்தி.+++++


(இது நான் தாகூரின் சிறுகதைகளில் மூன்றாவதாக எழுதும் ''போஸ்ட் மாஸ்டர்'' என்ற சிறுகதை. நன்றாக இருக்கிறதா?'. ரத்தன் பிடிக்கிறாளா?)