Announcement

Collapse
No announcement yet.

மதத்தின் மூலாதாரம் வேதமே - மஹா பெரியவா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மதத்தின் மூலாதாரம் வேதமே - மஹா பெரியவா

    மதத்தின் மூலாதாரம் வேதமே - மஹா பெரியவா
    --------------------------------------------------------------------

    தர்ம பிரமாணங்கள் பதிநான்கில் பிரதானமானது வேதம். ரிக்-யஜுஸ்-ஸாமம்-அதர்வம் என்ற நாலு வேதங்களுந்தான் பதினான்கில் முதல் நாலாகும்.

    பாக்கியுள்ள பத்தில் ஆறை வேதத்தின் அங்கம் என்றும், மிகுதியுள்ள நாலை உபாங்கம் என்றும் சொல்வார்கள்.

    ஒரு மனிதன் என்றால், பல அங்கங்கள் இருக்கின்றன அல்லவா?இப்படியே வேதத்தை வேத புருஷன் (வேதமாதா என்றும் சொல்வதுண்டு) என்று உருவகப்படுத்தினால், அந்த புருஷனுக்கு ஆறு அங்கங்கள். இப்படி அங்கம் மாதிரி நேராக வேதத்தில் இருப்பவை என்று இல்லாவிடினும், வேத புருஷனுக்குத் துணை அங்கமாக இருக்கிற நாலும் உபாங்கங்கள். நேர் அங்கம் ஆறை ஷடங்கம் (ஷட்-ஆறு) என்பார்கள். இவை சி¬க்ஷ, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம் (ஜோதிடம்) , கல்பம் என்பவை. உபாங்கம் நாலு. மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் என்பவை.

    ஆகக்கூடிய வேதம்தான் முக்கியம். வேதத்துக்கு அங்கம், வேதத்துக்கு உபாங்கம் என்பதால்தான் மற்றப் பத்தும் வித்தைகளாக, சாஸ்திரங்களாக அந்தஸ்துப் பெறுகின்றன. பதினெட்டு வித்தைகள் என்கிறபோது மிச்சமிருக்கிற ஆயுர்வேதம், அர்த்த சாஸ்திரம், தநுர்வேதம், கந்தர்வ வேதம் இவற்றுக்கும் உப-வேதங்கள் என்றே பெயர் இருப்பதிலிருந்து, வேத அடிப்படையில்தான் இவையும் உண்டானவை என்று தெரிகிறது.

    அங்கம், உபாங்கம் இவற்றோடுகூட வேதத்தைக் கற்க வேண்டும். அதற்கு 'ஸ'அங்க உபாங்க அத்யயனம் என்று பெயர். இதுவே "ஸாங்கோபாங்கம்"என்பது. இப்போது எந்த விஷயமாயினும், அரசியல் கட்சி விஷயமானாலுங் கூட, ஒருத்தர் அந்த விஷயத்தை அடியிலிருந்து நுனி வரை எல்லாப் பாயின்டுகளையும் எடுத்துக் காட்டிப் பேசினால் 'ஸாங்கோபாங்கமாகப் பேசினார்' என்கிறோம் அல்லவா?இந்த ஸாங்கோபாங்கம் என்ற சொல் பழைய சதுர்தச வித்யையைக் குறிப்பதுதான். அந்த வித்யாப்யாஸத்தை நாம் இப்போது அடியோடு மறந்துவிட்டாலும், வழிவழியாக அந்த பயிற்சிமுறை நம் நாகரிகத்தோடு கரைந்து விட்டதால் இன்றைக்கும் பூர்த்தியாக ஒரு விஷயத்தை விளக்குவதனால் "ஸாங்கோபாங்கமாக"என்று சொல்கிறோம். இதிலிருந்தே வேதம், அதன் ஆறு அங்ங்கள், நாலு உபாங்கங்கள் ஆகியவற்றின் அப்பியாஸமானது ஸாதாரண ஜனங்களுக்கும் தெரிகிற அளவுக்கு எவ்வளவு சிறப்பாக நம் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அப்படியெல்லாம் இருந்தும், இன்று அவற்றின் பேர் கூடத் தெரியாத நிலைக்கு வந்துவிட்டதுதான் இன்னம் ஜாஸ்தி துக்கத்தைத் தருகிறது. இது இருக்கட்டும்.

    வேதந்தான் பிரதானம்;மையமானது. அதை வைத்துத்தான் மற்றவை. நேரான தர்மப் பிரமாணம் நம் மதத்துக்கு எது என்றால் வேதம்தான். அதுதான் நம் பைபிள், குரான், கிரந்தஸாஹேப். இப்போது நான் இப்படி அந்த மற்ற மத நூல்களின் பெயர்களை வேதத்துக்குச் சூட்டினாலும் வேதம்தான் அவை யாவற்றிலும் முந்தையது. அவை எல்லாமுங்கூட வேதத்தின் ஒரு சில தத்வங்களிலிருந்து உண்டானவை தான். எனவே வேதம் என்றால்தான் பிரமாணநூல் என்றே அர்த்தமாகி விட்டது. நான் இப்போது மாற்றிச் சொன்னாலும் பைபிளையும், குரானையும் - மற்ற மதங்களின் ஆதார நூல்களையும்தான் - கிறிஸ்துவ வேதம், முஹம்மதியர் வேதம், ஸீக்கியர் வேதம், பார்ஸியர் வேதம் என்று சொல்கிற வழக்கம் இருக்கிறது. கிறிஸ்துவர்கள் நம் ஊரில் தங்கள் பைபிளை "ஸத்ய வேதம்" என்றே சொல்கிறார்கள்.

    வேதத்தைப் பற்றிச் சொல்வதென்றால், எங்கே ஆரம்பிப்பது, எங்கே முடிப்பது என்று மலைப்பாக இருக்கிறது. அத்தனை விஸ்தாரமான மகிமை வாய்ந்தது அது.

    ப்ரமாணம் வேதாச்ச என்று ஆபஸ்தம்ப தர்ம ஸ¨த்திரத்தில் சொல்லியிருக்கிற மாதிரி, எல்லாத் தர்மங்களுக்கும் மூலமான பிரமாணம் நாலு வேதங்களும்தான்.

    மநு தர்ம நூல், மநு தர்ம நூல் என்று ஒன்றைத் தமிழ் தேசத்து மஹான்கள் ஆதிகாலத்திலிருந்து போற்றி வந்திருக்கிறார்கள். பாரத தேசம் முழுவதிலுமே நீதிகளை எடுத்துச் சொல்வதில் மநுவின் தர்ம சாஸ்திரம்தான் முதல் ஸ்தானம் பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டில் மநுநீதிச் சோழன் என்றே ஒருவன் மஹா நீதிமானாக இருந்து கொண்டு, தன் பிள்ளையின் தேர்ச் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உயிரை விட்ட ஒரு கன்றின் தாய்ப்பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காக, அந்த பிள்ளையையே தேர்க்காலில் பலி கொடுத்தான் என்று கதை இருக்கிறது. தர்ம விஷயங்களுக்கு மநுநீதி சாஸ்திரந்தான் பிரமாணம் என்றே வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மநு தர்மசாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறது?இந்த நால்தான் தர்மத்துக்கெல்லாம் மூலாதாரம் என்றா சொல்லியிருக்கிறது?இல்லை. "வேதோ (அ) கிலோ தர்ம மூலம்" -ஸகல தர்மங்களுக்கும் மூலம் வேதம்தான் - என்றே மநு சொல்லியிருக்கிறார். எல்லாக் காலத்துக்கும் பொதுவான சாச்வத தர்மங்களைச் சொல்வது வேதம்தான் என்றஏ அவ்ர் சொல்லிவிட்டார்.

    வேதம் எப்படி சொல்கிறதோ அப்படித்தான் செய்யவேண்டும். அது சொல்வதை மீறக் கூடாது. ஏனென்றால், அதுதான் தர்மமூலம். யாராவது ஒன்றைச் சொல்லி அதை நாம் துளிக்கூட ஆக்ஷேபிக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றால், "அது என்ன வேதவாக்கோ?"என்று கேட்கிற வழக்கம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அதாவது, வேத வாக்கு என்றால் எதிர்க் கேள்வி கேட்காமல் அதன்படி செய்துதான் ஆக வேண்டும் என்று அத்தனை பொது ஜனங்களும் நம்பி வந்ததைத் தான் வேத வாக்கோ?என்று கேட்கிற வழக்கு நிரூபிக்கிறது. இப்படி எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக அதுதான் நமக்கு பெரிய சட்டமாக இருந்திருக்கிறது. அதனாலேயே, வைரம் பாய்ந்த மரம் என்கிறோமே, அது மாதிரி, வேதம் வைரம் பாய்ந்தததாக இருக்கிறது. அநாதியாக வந்து கொண்டிருக்கும்படியாந சட்டப் புஸ்தகம் அது.
Working...
X