Announcement

Collapse
No announcement yet.

அழகர் தோசை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அழகர் தோசை

    ஸ்ரீரங்கத்திற்கு அடுத்ததாக மனதில் மிக அதிகமாகப் பதிந்த கோயில் மதுரை கள்ளழகர் கோயில். காரணம், அங்கே இருக்கும் பதினெட்டாம் படியான் மற்றும்கள்ளழகர் (சுந்தரராஜப் பெருமாள்) எங்கள் குலதெய்வம். சின்ன வயதில் காளி பட ஷூட்டிங்கிற்காக வந்திருந்த ரஜினியை மிக அருகில், கூட்டமே இல்லாமல்- மொத்தமே பக்கத்தில் 5,6 பேர் மட்டும் தான் இருந்தார்கள்- பார்த்தது அந்த வயதிற்கான த்ரில். எப்பொழுதும் குரங்குகள் த்ரில். பிரகாரத்தை வலம் வரும்போது, இடதுபக்க ஓரமாக இருக்கும் ஷேத்ர பாலர் சன்னதி முன்பு வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் (அம்மா வழிப்) பாட்டி தன் மாமனாரை நினைவு கூறுவார். “அப்பல்லாம் தோசைப் பொடி முடிஞ்சு நடை சாத்தினதும் கங்காணித் தாத்தா(கண்காணிப்பு?) கோயிலைப் பூட்டி சாவியை உள்ள நீட்டுவார். ஷேத்ர பாலர் கை நீட்டி வாங்கி வெச்சுப்பார்” என்று சொல்வார். நம்பியும் நம்ப முடியாமலும் ஆனால் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கேட்டுக் கொள்வோம். இப்போது தொடர்ந்து நானும் அடுத்த தலைமுறைக்கு அங்கே அதைச் சொல்லி வருகிறேன், மற்றவர்கள் எல்லாம், “ஆமா, பெரிய நாட்டாமை வாரிசு! பரம்பரைக் கதையை எடுத்து விடறா!!” என்று கிண்டல் செய்வதைப் பொருட்படுத்தாமல். அடிக்கடி பெரிய வேன் வைத்துக் கொண்டு கூட்டமாகப் போவது, குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, வெள்ளரி மாங்காய் பத்தைகள் என்று ஏகப்பட்ட சில்லுண்டி ஐட்டங்களை உள்ளே தள்ளிக்கொண்டே மேலே முருகனை தரிசிக்க நடந்தே மலையேறுவது என்று எப்பொழுதுமே அழகர் கோயில் பற்றி இனிமையான நினைவுகள் மட்டுமே…..

    அழகர் மணம் கொடார், அரங்கர் இடம் கொடார்”என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு அரங்கனின் பிரசாதங்கள் தொலை தூரத்திலேயே வாசனையால் இழுக்குமோ அதற்கு நேர் மாறாக அழகருக்குச் சாற்றிய பூவும், நைவேத்தியம் செய்த பிரசாதமும் ஏனோ மணத்தை இழந்துவிடும். ஆனால் பிரசாதங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரு எதிர்ப்பார்ப்போடு போவது பிரசாதத்திற்காக மட்டுமே.

    தேவையான பொருள்கள்:
    பச்சரிசி - 3 கப்
    கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)
    மிளகு – 2 டீஸ்பூன்
    சுக்குப் பொடி - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய், உப்பு – தேவையான அளவு

    செய்முறை:
    • அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)
    • உளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
    • தேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.
    • மறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
    • அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.
    • நன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.

    * அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம்

    * அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம்.
    * வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை.
    மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
    கோயிலில் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1 1/2 அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து விநிநோகம் செய்வார்கள். இதற்கு தோசைப் பொடி என்று பெயர். இரவு 9 மணிக்கு நடை சாத்துவதற்கு முன் செய்யப் படுவது. தற்கால சூழல் காரணமாக இரவு 7 மணிக்கே இதைச் செய்து முடித்து நடைசாத்துவதாகச் சொல்கிறார்கள்.
Working...
X