Announcement

Collapse
No announcement yet.

Gnanopadesam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Gnanopadesam

    ஒரு குருவிடம் சென்ற சிஷ்யன், தனக்கு ஆத்ம ஞானம் வேண்டும் என்பதற்காக அவரிடம் வந்துள்ளதாகக் கூறினான். சிஷ்யன் மிகவும் பவ்யமாகவே நின்று கொண்டு இருந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த குருவானவர் சரி என அவனை தனது குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார். முதலில் அவனை நதியில் குளித்து விட்டு வருமாறு கூறினார். அவன் வரும்போது ஆஸ்ரமத்து வேலைக்காரியை அவன் எதிரில் துடப்பத்தினால் பெருக்கிக் கொண்டு இருக்குமாறு கூறினார்.
    குளித்து விட்டு வந்த சிஷ்யனும் தன் எதிரில் பெருக்கிக் கொண்டு இருந்த வேலைக்காரியின் முகத்தைப் பார்த்து விட்டு, 'சனியன் இத்தனை அழகாக இருந்தும் நல்ல காரியத்துக்குப் போகும்போது அபசகுனம் போல பொட்டு வைத்துக் கொள்ளாமல் எதிரில் வந்து விட்டாள்' என மனதில் திட்டிக் கொண்டே சென்றான். குருவின் முன்னால் போய் நின்றதும், அவர் அவனை ஒரு வருடம் மாட்டுத் தொழுவத்தை அலம்பும் வேலையை செய்து விட்டு வருமாறும், அதற்குப் பின்னரே ஞான மார்க்கத்தைப் போதிக்க முடியும் என்றும் கூறி அவனை மாட்டுத் தொழுவத்துக்கு அனுப்பினார். முகம் கோணாமல் சிஷ்யனும் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டான். அது முதல் அவன் மனதில் மாடுகளைத் தவிர வேறு எதுவுமே அவன் கண்களுக்கு தெரியவில்லை என்ற அளவு மனம் பக்குவமாகியது.

    ஒரு வருடம் கழிந்தது. அவனை அழைத்த குருவின் முன்னால் போனவனை மீண்டும் ஒருமுறை நதியில் குளித்து விட்டு தன்னிடம் வருமாறு அனுப்பினார். இந்த முறை அவன் குளித்து விட்டு வரும்போது அந்த வேலைக்காரியை நல்ல குங்குமத்தை இட்டுக் கொண்டு அவன் வரும் வழியில் ஒரு மூலையில் துடப்பத்துடன் நிற்குமாறு கூறினார். குளித்து விட்டு வந்த சிஷ்யனும் ஒரு மூலையில் துடப்பத்தை வைத்துக் கொண்டு கொண்டு நின்று இருந்த வேலைக்காரியின் முகத்தை பார்த்தான். 'இந்த முறை அழகாக குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கிறாளே, ஆனால் நல்ல சிவப்பு வண்ணத்தில் அதை இட்டுக் கொண்டு இருக்கலாம். அதற்கு மாறாக ஏன் பழுப்பு நிற சிவப்புக் கலரில் குங்குமத்தை இட்டுக் கொண்டு வந்துள்ளாள் ' என நினைத்தவாறே குருவின் முன்னால் போய் நின்றான்.
    குருவின் முன்னால் போய் நின்றதும், அவர் அவனை ஒரு வருடம் ஆஸ்ரமத்துக்குத் தேவையான விறகுகளை பொறுக்கிக் கொண்டு வரும் பணியை செய்து விட்டு வருமாறும், அதற்குப் பின்னரே ஞான மார்க்கத்தைப் போதிக்க முடியும் என்றும் கூறி அவனை விறகு பொறுக்கும் வனத்துக்குள் அனுப்பினார். முகம் கோணாமல் சிஷ்யனும் அந்தப் பணியில் ஈடுபட்டான். அப்போது ஒருநாள் அவன் வனத்தில் இருந்த இன்னொரு முனிவரைக் கண்டான்.

    அவர் முன்னிலையில் அமர்ந்து கொண்டு இருந்த சில சிஷ்யர்களுக்கு அவர் எதோ ஒரு கதையைக் கூறிக் கொண்டு இருந்ததைக் கண்டு, அந்தக் கதையை தானும் கேட்க எண்ணினான். தூரத்தில் மறைந்தவாறு அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்தக் கதையைக் கேட்கத் துவங்கினான். அந்த முனிவர் கூறிக் கொண்டு இருந்தக் கதை இதுதான்.
    ''முன்னர் ஒரு காலத்தில் சௌபாரி முனிவர் (பாகவதம், விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம் என அனைத்திலும் அவரைக் குறித்த பெருமையான செய்திகள் உள்ளன) என்பவர் இருந்தார். அவர் மிகவும் பிரபலமானவர். அவர் மீது அனைத்து ராஜா மகாராஜாக்களும் பெரும் மதிப்பு வைத்து இருந்தார்கள்.

    ஒருமுறை அவர் தான் அதீத ஞானம் பெற வேண்டும் என்பதற்காக யமுனை நதிக் கரையில் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார். தினமும் காலை யமுனையில் குளித்து விட்டு தவத்தில் அமர்வார். தினமும் அந்த நதியில் மீன்கள் ஓடியாடும். பலர் அங்கு வந்து குளிப்பார்கள். அருகில் வனம் இருந்ததினால் சில மிருகங்களும் அங்கு வரும். ஆனால் அவர் எதையும் பார்க்க மாட்டார். குளிப்பார், திரும்பிக் கூடப் பார்க்காமல் தவம் செய்யக் கிளம்பிச் சென்று விடுவார். பல காலம் அப்படி தவம் இருந்தவர் ஒருநாள் காலையில் நதியில் குளிக்கச் சென்றபோது, வழியில் அதில் இரண்டு மான்கள் சல்லாபித்துக் கொண்டு இருந்ததைக் கண்டார். அன்றுவரை எதையுமே ஒரு பொருட்டாகப் பார்க்காதவர், மான்கள் இரண்டு சல்லாபிப்பதைக் கண்டதும், ஒரு ஷணம் நின்று அவற்றைப் பார்த்தார்.

    மீண்டும் குளிக்கக் கிளம்பியவரின் மனதில் அந்தக் காட்சி தொடர்ந்து கொண்டு இருக்க, நதியில் குளிக்க இறங்கியவர் எதேர்சையாக அங்கு குளிக்க வந்த மண்டாத்தா என்ற மன்னனின் ஐம்பது மகள்களையும் கண்டார். அவர்களைக் கண்டதும், மான்கள் நினைவுக்கு வந்தன. மேலாடை பாதியுடன் மட்டுமே குளித்துக் கொண்டு இருந்தவர்களின் உடல் அழகில் மனதை பறக்க விட்டார். அவர் மனதிலும் காமம் பற்றி எரிந்தது. தான் வந்த வேலையை மறந்தார். ஒரு ஷணச் சம்பவம், அவர் ஆயுளைப் பற்றிக் கொண்டு விட்டது.

    அவசரம் அவசரமாக குளித்தவுடன் அந்த முனிவர் நேராக மன்னன் மண்டாத்தாவிடம் சென்று அவரது அனைத்து மகள்களையும் தான் மணக்க விரும்புவதாகக் கூற மன்னன் துணுக்குற்றான். அத்தனை உயர்ந்த முனிவரா திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்?. அதுவும் தன்னுடைய ஐம்பது பெண்களையுமே மணம் செய்து கொள்ள விரும்புகிறாரே, அது முறையா என திகைத்தான். ஆனால் வந்துள்ளவரோ மாபெரும் முனிவர். அவரிடம் என்ன கூறுவது? பெரும் முனிவருக்கு ஐம்பது பெண்களையும் மணமுடித்துக் கொடுப்பதா என்று யோசனை செய்தவன், வேறு வழியே இல்லாமல் தான் தனது அனைத்துப் பெண்களையும் அழைப்பதாகவும், அவர்களில் யார் அவரை எந்தக் குறையையுமே கூறாமல் விரும்புகிறார்களோ அவளை அவர் மணந்து கொள்ளலாம் என்றும் கூறி விட்டார். ஆனால் அவர்கள் ஏதாவது குறையைக் கூறினால் அதற்கு அவர் கோபம் அடைந்து சாபமிடக் கூடாது எனவும், அப்படி கோபத்தினால் சாபமிட்டால் , அந்த சாபம் அந்த முனிவரையே போய் சேரும் என்றும் சத்தியம் பெற்றுக் கொண்டு மறுநாள் காலை அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறினார்.

    அன்று இரவு மன்னன் தனது அனைத்து மகள்களிடமும் அந்த முனிவரின் ஆசையைக் கூறி விட்டு, அவர்கள் யாருமே அவரை ஏற்றுக் கொள்ளாமல் ஏதாவது குறையைக் கூற வேண்டும் என்றும், அப்போதுதான் அவருக்கு அவர்களை மணமுடித்துக் கொடுக்க மறுக்க முடியும் என்றும் அறிவுரைக் கொடுத்தார். மறுநாள் முனிவர் வந்தார். ஒவ்வொரு பெண்ணாக அவர் எதிரில் வந்தார்கள். முனிவராயிற்றே, அவருக்கா அவர்களின் மனதை புரிந்து கொள்ள முடியாது. வந்தவர்கள் தன்னிடம் உள்ளக் குறைகளைக் கூறும் முன்னரே வந்தவர்களின் எதிரில் தன்னை பேரழகு மிக்க இளைஞன் போல மாயையாகக் காட்ட ஒவ்வொருவரும், அவருடைய அதி சுந்தர வதனத்தைக் கண்டு அந்த உருவத்தின் மீது காமமுற்று, 'இவரை மணக்க சம்மதம்' என்று கூறிக் கொண்டே சென்று விட்டார்கள். ஆகவே வேறு வழி இன்றி மன்னன் அவருக்கு ஐம்பது பெண்களையும் மண முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது.

    அந்த முனிவரும் அவர்களுடன் பல ஆண்டுகள் உல்லாசமாக இருந்து நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டார். அதன் பின் அவர் மனதில் மெல்ல மெல்ல காமம் அழியத் துவங்கியது. தான் செய்த பிழையை நினைத்து வருந்தினார். ஆனால் அதன் பின் அவருக்கு தவம் செய்யச் சக்தி இன்றி போய் விட்டது. ஆனாலும் அவர்கள் அனைவரையும் துறந்து விட்டு வனத்துக்குச் சென்று தனிமையில் அமர்ந்து கொண்டு தவம் செய்ய முனைந்து தோல்வி கண்டு மரணம் அடைந்தார். ஆகவே நாம் எந்த காரியத்திற்காக நம்ம அர்பணித்துக் கொண்டாலும், அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டுமே தவிர, நம் மனதில் வேறு எந்த சிந்தனையுமே இருக்கலாகாது'' என்று அவர் கூறிய கதையைக் கேட்டதும் தான் செய்த தவறை சிஷ்யன் உணர்ந்தான்.

    அது முதல் வனத்தில் இருந்து விறகுகளை பொறுக்கிக் கொண்டு ஆஸ்ரமத்துக்குச் சென்றவன் மனதில் எந்த பிற நினைவுகளுமே எழவில்லை. இப்படியாக ஒரு வருடம் கழிந்தது. அவனை அழைத்த குரு மீண்டும் ஒருமுறை அவனை நதியில் குளித்து விட்டு தன்னிடம் வருமாறு அனுப்பினார். இந்த முறை அவன் குளித்துவிட்டு வரும்போது அந்த வேலைக்காரி நல்ல குங்குமத்தை இட்டுக் கொண்டு, தன் உடம்பின் பல பாகங்கள் தெரியும் வகையில் அரைகுறை ஆடையுடன் அவன் வரும் வழியில் ஒரு மூலையில் நிற்குமாறு கூறினார். ( வேலைக்காரி என்பது அந்த குரு தன்னிடம் வந்திருந்த சிஷ்யனை சோதிக்க எண்ணி மாயையாகப் படைத்த உருவமே தவிர உண்மையில் மனித உருவில் அங்கு யாருமே இல்லை). சிஷ்யனும் குளித்து விட்டு வந்தான். வரும் வழியில் அவளை அந்தக் கோலத்தில் பார்த்தவன் மனதில் விறகுகள் மட்டுமே தெரிந்தன.குருவிடம் சென்று நின்றதும், உன்னை வேறு எதற்காகவோ வரச் சொன்னேன்.

    சரி நாளைக்கு குளித்து விட்டு வா என்று மீண்டும் திருப்பி அனுப்பி விட்டார். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தன. குளித்து விட்டு வந்தவனின் கண்களில்படுமாறே தினமும், அந்த வேலைக்காரியும் அரைகுறை உடைகளுடன் நின்று கொண்டு இருந்தாள். ஆனால் அவனது மனதில் எந்த சலனமும் தோன்றவில்லை. அவன் மனது அத்தனை பக்குவமாகி இருந்தது. 'குரு அழைத்துள்ளார் என்ற நினைவு மட்டுமே இருந்தது'. சில நாட்கள் இப்படியே கழிய ஒரு நாள் குரு அவனைப் பார்த்துக் கூறினார் ' சிஷ்யா, உன் சேவையை எண்ணி மகிழ்ந்தேன். நீ ஏற்கனவே ஞானத்தில் பாதியைக் கடந்து விட்டாய். ஆகவே மீதி பாதியை இன்று முதல் உனக்கு போதனையைத் துவக்குகிறேன்' எனக் கூறி விட்டு அன்று முதல்அவனை தனது சீடனாக ஏற்றுக் கொண்டு ஞானோபதேசம் செய்தார்

    Courtesy:Sri.mayavaram Guru
Working...
X