Announcement

Collapse
No announcement yet.

விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொட&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொட&#

    விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)
    Submitted by Right Mantra Sundar on November 15, 2012 – 07:579 Comments



    கோவிலுக்கு போறது பத்தி நாம பதிவெல்லாம் போடுறதுனால நாம முதல்ல கரெக்டா இருக்கணும்னு இப்போ ரெகுலரா கோவிலுக்கு போய்க்கிட்டுருக்கேன். அதுவும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கட்டாயம் ஏதாவது பாரம்பரியம் மிக்க பழமையான கோவிலுக்கு செல்வதை இப்போ வழக்கமாகவே ஆக்கிகொண்டுவிட்டேன். ஆகையால தீபாவளி அன்னைக்கு நிச்சயம் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் பண்ணிடனுங்கிறதுல உறுதியா இருந்தேன்.

    நெருங்கிய நண்பர்கள் பலர் தீபாவளிக்காக அவங்கவங்க சொந்த ஊருக்கு போய்ட்டாங்க. சென்னையிலிருந்த சில நண்பர்கள் தீபாவளியன்று தவறாமல் வீட்டில் இருக்கவேண்டிய கட்டாயம். கடைசியில் வருவதாக சொன்னது மாரீஸ் கண்ணன் என்கிற நண்பர் தான். “எங்கே போகப்போறோம்?”னு கேட்டார்.

    வர்றதுக்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்ககூடாது என்பதால் “அதிக தூரமில்லே… உங்களுக்கு பக்கத்துல தான். நீங்க ஈவ்னிங் ஒரு 7.00 – 7.30 pm ரெடியாயிருங்க. நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். என் பைக்லயே போய்டலாம். ரிட்டர்ன் வர்றப்போ உங்க வீட்டுலயே உங்களை டிராப் பண்ணிடுறேன்” என்று கூறினேன். “சரி..!” என்றார்.

    சென்னையில இருக்குற டிராஃபிக்குக்கு ஒரு இடத்துக்கு கரெக்ட் டயத்துக்கு போகனும்னு நினைச்சா இப்போல்லாம் எங்கே போகமுடியுது? நான் நண்பரை பிக்கப் செய்ய போகும்போது மணி 7.45 pm. ஈவ்னிங் கடைசீயில லேட் ஈவ்னிங் ஆயிடிச்சு. அப்புறமா அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்து அவர் வந்தவுடனே பிக்கப் செய்து… ராமாபுரம் வந்து மெயின்ரோட்டை பிடித்து… நந்தம்பக்கம் (டிரேட் செண்டர்) நோக்கி பயணித்தேன்.

    “எந்த கோவிலுக்கு போறோம்?”ன்னு கேட்டார். “அங்கே வந்து பாருங்க..!” என்றேன்.

    சரியாக 8.20 இருக்கும். டிரேட் செண்டர் வந்தவுடன் அதன் எதிரே உள்ள தெருவில், திரும்பி சற்று தொலைவு சென்றவுடன் கோவில் வந்துவிட்டது.

    (டிரேட் சென்டரின் பிரதான நுழைவாயிலுக்கு (Main Entrance) சற்று முன்னர் சர்வீஸ் என்ட்ரி கேட் (Service Entry Gate) இருக்கும். அந்த கேட்டுக்கு நேரெதிரே இருக்கும் சாலைக்குள் சென்றால் கோவிலுக்கு சென்றுவிடலாம்.)


    கோவிலையும் கோபுரத்தையும் பார்த்தவுடன் நண்பர் சிலிர்த்துவிட்டார். “இந்த இடத்துல இப்படி ஒரு கோவிலா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே…” என்று வியந்தார்.

    சென்னை கிண்டி கத்திபாராவுக்கு அப்புறமா மவுன்ட்-பூந்தமல்லி சாலையில் இருக்குற சென்னை டிரேட் சென்டருக்கு நீங்கள் எத்தனையோ முறை போயிட்டு வந்திருப்பீங்க. ஆனா, அங்கே டிரேட் சென்டருக்கு எதிர்ல கொஞ்சம் ஒரு பத்தடி நடந்து போனா, ஒரு அருமையான ஊரும், அந்த ஊர்ல நடுநாயகமா ஒரு பழமையான வைணவத் திருத்தலமும் இருக்கிறது தெரியுமா?

    கோவிலை சுற்றி தென்னை மரங்களும், பரபரப்பின்றி காணப்படும் தெருக்களும், நாம சிங்கார (?!) சென்னையில் தான் இருக்கோமான்னு உங்களுக்கு சந்தேகம் வந்துடும்.

    அத்துணை அழகான ஊர்… அந்த ஊருக்கு திலகம் மாதிரி கோவில் கோபுரம்… அடுத்த முறை டிரேட் செண்டர் போறவங்க..அவசியம் இந்த கோவிலுக்கு போங்க… (திறந்திருக்கும் நேரம் காலை 6.00 to 10.30 மாலை 5.00 to 8.00 pm)


    சீதையை தேடிக்கொண்டு இராமபிரான் தென்திசை வரும்போது, நந்தம்பாக்கம் என்று தற்போது அழைக்கப்படும் இந்தத் தலத்தில் பிருங்கி மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க தங்கினார். வால்மீகி ராமாயணத்தில் இந்த தலத்திற்கு பெயர் பிருந்தாரண்யம். கம்பராமாயணத்தில் ‘நந்தவனம்’. அதுவே நாளடைவில் மருவி, நந்தம்பாக்கம் ஆனது. இங்கிருந்து ஈக்காடுதாங்கல் வரை பரவியிருந்த காடு, ‘இக்காடு தங்கல்’ என்பது மருவி ஈக்காடுதாங்கல் ஆனதாம்.

    நாங்கள் சென்ற நேரம் கோவிலின் பிரதான வாசலில் ஒரு கதவு சாத்தியிருந்தது. சரி… நடை சாத்துற டயம் ஆயிடுச்சு போல என்று வேகமாக ஓடினோம்.


    வாசலில் தேங்காய், பூ, பழம், துளசி, உள்ளிட்ட பொருட்களை விற்கும் பெண்ணிடம் கேட்டோம். “சாத்தப் போறாங்க… சீக்கிரம் போங்க” என்றார்.

    உள்ளே ஓடினோம். நேரமாகிவிட்டபடியால் கூட்டம் அதிகமில்லை. வந்தவர்களும் கிளம்பிக்கொண்டிருந்தனர். அர்ச்சகர் கருடாழ்வார் சன்னதி அருகே கொடி மரம் முன்பாக நின்றுகொண்டிருந்தார். “அர்ச்சனை பண்ணமுடியுமா? முடியும்னா தேங்காய் பூ பழம் வாங்கிட்டு வந்துடுவேன்” என்றேன். “இல்லே… டயம் ஆயிடிச்சு… வேணும்னா சீக்கிரம் போய் சேவிச்சுக்கோங்க.” என்றார்.

    இதுவாவது கிடைச்சதே என்றெண்ணி… உள்ளே சென்றோம்.

    ஸ்ரீனிவாசப் பெருமாள் துளசி தளம் மற்றும் சாமந்தி மாலை சூடி திவ்ய அலங்காரத்தில் காட்சியளிக்க… பரவசத்துடன் சேவித்தோம். தீர்த்தம், சடாரி, குங்குமப் பிரசாதம் உள்ளிட்ட சம்பிரதாயங்கள் முடிந்து, அருகே இருந்த கோதண்டராமரையும் சேவித்துவிட்டு வெளியே வந்தோம்.

    கோபுரக் கலசம் இரவு நேரத்திலும் மின்னியது.

    விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் மாகாணப் பிரதிநிதியான சஞ்சீவ ராயரால் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் இது. சந்தன நிறத்தில் ஜொலிக்கும் 63.75 அடி உயரம் கொண்டது இக்கோவிலின் ராஜகோபுரம். தென்புறம் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்ட நிலையில் இருப்பதும் வடபுறம் நந்தவனத்துடன் கூடிய கோ சாலையும் இவ்வாலயத்தின் சிறப்பம்சங்கள். இராமர் சீதாபிராட்டியுடன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் பரதன், லட்சுமணன், சத்ருக்னனுடன் எழுந்தருளியிருப்பது இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சம்.

    ஸ்ரீனிவாசப் பெருமாள், கோதண்ட ராமர் தவிர, ஆனந்த ஆஞ்சநேயர், நந்தவனக் கண்ணன், சக்கரத்தாழ்வார், நாகம் ஆகியவை இங்கு காணப்படும் மற்ற சந்ததிகள். இந்தக் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் எங்கும் தவழும் சாந்தம் ஆலயத்திற்கு வரும் அனைத்து பக்தர்களையும் ஈர்க்கின்றன.

    இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆலயம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. விசாலமான பிரகாரம், சுற்றிலும் பசுமையான மரங்கள் மற்றும் திறந்தவெளி ஆகியவை கோவிலை மேலும் அழகாக்குகின்றன.

    கோவிலுக்கென்றே பிரத்யேக துளசி வனம் இருக்கிறது. அதையொட்டி கோ சாலை.

    மூலஸ்தானத்துக்கு முன்பாக ஒரு பெண்மணி நாங்கள் உள்ளே தரிசிக்க போகும்போதே நின்றுகொண்டிருந்தார். அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார். கோவிலில் இருப்பவர் போல… நடை சாத்தியவுடன் கிளம்பிவிடுவார் என்று நினைத்துக்கொண்டோம்.

    நாங்க வெளியே வரும்போது, எங்களை அழைத்தார். “எங்கேயிருந்து வர்றீங்க?” என்று கேட்க… நாம் விபரத்தை சொன்னோம்.

    “சுவாமிக்கு ஆலவட்டம் வீசுவாங்க… நீங்களும் இருந்து அந்த கைங்கர்யத்தை செஞ்சிட்டு போங்க. நானும் அதுக்காகத் தான் காத்துகிட்டிருக்கேன்” என்றார்.

    ஆலவட்டம்….? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்புறம் அவர் விளக்கிச் சொன்னபிறகு தான் புரிந்தது. ஆலவட்டம் என்றால் பெருமாளுக்கு வழங்கப்படும் விசிறி சேவை என்பது.

    எப்பேற்ப்பட்ட சேவைக்கு அன்றைக்கு எங்களை எம்பெருமான் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று எண்ணி பூரித்து அந்த பெண்மணிக்கு நன்றி சொன்னோம்.

    நடை சாத்துவதற்கு முன்னர் எம்பெருமானை ஊஞ்சலில் ஆவாகனம் செய்து, பள்ளிகொண்ட ரெங்கநாதராக பாவித்து, அவருக்கு ஆலவட்டம் வீசுவர். பெருமாள் அதன் பிறகு கண் அயர்வதாக ஐதீகம். (இது ஒரு ஐதீகம் தான். பகவானாவது உறங்குவதாவது? உழைத்து களைத்துப் போகும் நாம் உறங்க வேண்டியே அவன் உறங்குவது போல நடிக்கிறான். அவன் உறங்கினால் இந்த உலகம் தாங்குமா?)



    சிறிது நேரத்தில் அரங்கனுக்கு ஆலவட்டம் வீச எங்கள் ஒவ்வொருவரையாக அழைத்தார் அர்ச்சகர். பயபக்தியுடன் உள்ளுக்குள் கண்ணீர் மல்க ஆலவட்டம் வீசிவிட்டு வெளியே வந்தோம்.

    “நாயினும் கீழோனான என்னை தரணியாளும் நீ சாமரம் வீச தேர்ந்தெடுத்ததற்கு எப்படி நன்றி சொல்வேன் ஐயனே….?” உணர்ச்சி பெருக்கில் கண்களில் கண்ணீர் ததும்பியது. தியாகராஜர் பாடிய “தொரகுனா இடுவண்டி ஸேவா?” (கிடைக்குமா இது போன்றதொரு சேவை) என்ற பாடல் தான் அந்த நிலையில் என் மனதில் ஓடியது.

    நானாவது அந்த கோவிலுக்கு இதற்கு முன்பு இருமுறை வந்திருக்கிறேன். ஆனால் உடன் வந்த நண்பருக்கு அது தான் முதல் முறை. முதல் முறையே இப்படி ஒரு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி அவர் ஒரு கணம் நெகிழ்ந்துவிட்டார்.

    உணர்ச்சிபெருக்கில் எங்களை இந்த சேவைக்கு ஆளாக்கிய அந்த பெண்மணிக்கு திரும்ப திரும்ப நன்றி சொன்னோம். “நீங்கள் கூப்பிடலேன்னா இந்த பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்காதம்மா. அதுவும் தீபாவளி அன்னைக்கு!” என்றோம்.

    “ஏதோ உங்களை பார்த்ததும் அந்த நொடியில தோணிச்சு…. நான் இதே ஊர் தான். தினமும் இந்த கைங்கர்யத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறேன்” என்றார் அந்த பெண்.

    “மிகவும் கொடுத்து வைத்தவரம்மா நீங்கள்…!” என்றேன் சற்று பொறாமையுடன்.

    கொடிமரத்தின் கீழே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துவிட்டு வெளியே வந்தோம். நண்பர், “சுந்தர் இதே ஊர்ல (ராமாபுரம்) எட்டு வருஷமா நான் இருக்கேன். பக்கத்துல இப்படி ஒரு பிரமாதமான கோவில் இருக்கிறது தெரியவே தெரியாது. உங்களால எனக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைச்சது. அதுவும் முதல் முறை வரும்போதே…” என்றார்.

    “உங்க கூட வந்ததுனால தான் எனக்கு இன்னைக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைச்சது. ஏன்னா நான் ஏற்கனவே ரெண்டு முறை வந்திருக்கேன்” என்றேன்.

    ஆனால் அவரோ “இல்லை.. இல்லை… நீங்க தானே கோவிலுக்கு வாங்கன்னு கூப்பிட்டது. நீங்க கூபிடலேன்னா நான் வந்திருப்பேனா? இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குமா?” என்றார்.

    நான் சிரித்துக்கொண்டேன். “பாஸ்… ஒன்னு நாம நல்லவனா இருக்கணும். இல்லையா அட்லீஸ்ட் நல்லவங்க கூடவாவது இருக்கணும். ஏதோ உங்க புண்ணியத்துல நமக்கும் கொஞ்சம் இந்த பாக்கியம் கிடைச்சதன்னு தான் எனக்கு தோணுது. இதெல்லாம் அவன் விருப்பப்படி நடப்பது. அந்தமாவுக்கு இல்லேன்னா ஏன் உங்களை கூப்பிடனும்.. இது பத்தி சொல்லனும்னு அந்த நேரம் தோணிச்சு…?” என்றேன்.

    நான் திரும்ப திரும்ப சொல்வது படிப்பதும் சொல்வதும் இதைத் தான். தன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பவரிடம் ஆண்டவன் பல அடி எடுத்து வைக்கிறான். நாம் கோவிலுக்கு செல்வது சரீர ரீதியாக மட்டுமில்லாமல் ஆன்ம ரீதியாகவும் இருந்தால் இது போன்று மேலும் பல விஷயங்களை ஒவ்வொருவரும் உணரலாம்.

    கோவிலில் கருவறையில் இருப்பது விக்ரகம் அல்ல. சாட்சாத் எம்பெருமானே நேரில் நின்றுகொண்டிருக்கிறான் என்று எண்ணி, ஒவ்வொருவரும் ஆலயத்திற்கு செல்லுங்கள். இதென்ன இதை விட பல அற்புதங்களை அவன் நிகழ்த்துவான். உங்களுக்காகவே அவன் அங்கு காத்திருப்பதை உணர்த்துவான்.





    இதெல்லாம் அடிக்கடி சாத்தியப்படுகிற இதை படிக்கும் பரம பக்தர்கள் சிலருக்கு “நீங்க சொன்னதுல என்ன பிரமாதம்?” என்று தோன்றும்… பாராளும் பரந்தாமனுக்கு ஒரு சில வினாடிகள் ஆலவட்டம் விசிறும் பாக்கியம் கிடைத்ததை உண்மையில் நாங்கள் பிறவிப் பயனாக கருதுகிறோம். பசிக்கு விருந்து சாப்பிட போன பரம ஏழைக்கு விருந்து பரிமாறி பின்னர் வியாதிக்கு மருந்தும் கொடுத்தனுப்பினா எப்படி உணர்வானோ அப்படி உணர்ந்தேன் நான்.

    தவிர பாலைவனம் கடந்த எனக்கு பாதங்கள் ஆற கிடைத்த சோலையல்லவா இது!!

    மறுநாள் – புதன் காலை சீக்கிரமே சென்று அரங்கனை தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்து ஆலய தரிசனம் பகுதிக்காக புகைப்படங்கள் எடுத்தேன். அந்த படங்கள் தான் நீங்கள் பார்ப்பது!

    நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்

    குலம் தரும் செல்வம் தந்திடும்
    அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
    நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்(பு) அருளும்
    அருளொடு பெருநிலம் அளிக்கும்
    வலந்தரும் மற்றுந் தந்திடும்
    பெற்ற தாயினும் ஆயின செய்யும்
    நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
    நாராயணா வென்னும் நாமம். – திருமங்கையாழ்வார்

    ஆலய முகவரி :
    அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம்,
    கோதண்டராமஸ்வாமி சன்னதி தெரு, (சென்னை டிரேட் சென்டர் எதிரே),
    நந்தம்பாக்கம், சென்னை – 600 089.
    கோவில் நேரம் : காலை 6.00 to 10.30 | மாலை 5.00 to 8.00)

    —————————————————————————————————————————

    —————————————————————————————————————————
Working...
X