Announcement

Collapse
No announcement yet.

நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ண

    நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்! –
    சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவரின் மகனுக்கு நடைபெற்ற உபநயனத்தில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தோம். சேலம் வியாசராஜ மடத்தில் நடைபெற்ற சமஷ்டி உபநயனம் அது. உபநயனத்தில் ஒரு அங்கமாக முந்தைய தினம் மாலை ‘நாம சங்கீர்த்தனம்’ நடைபெற்றது. இது போன்ற ஒரு நாம சங்கீர்த்தனத்தை இதுவரை நாம் கண்டதில்லை, ரசித்ததில்லை இனியும் காணப்போவதில்லை என்னுமளவிற்கு மிக மிகப் பிரமாதமாக இருந்தது. –


    நம் வீட்டு சுபநிகழ்ச்சிகளின் போது ஒன்றுக்கும் பயனற்ற விஷயங்களில் பணத்தை வாரி இறைப்பதைவிட, நாம சங்கீர்த்தனம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். வசதியும் வாய்ப்பும் உள்ள அன்பர்கள் மற்றும் நண்பர்கள், தங்கள் வீட்டு விசேஷங்களின் போது நாம சங்கீர்த்தனத்தையும் நிகழ்ச்சி நிரலில் சேர்த்து தங்களுக்கும் புண்ணியம் சேர்த்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் புண்ணியம் சேர்க்க உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
    நாம சங்கீர்த்தனம் மூலம் பெறும் புண்ணியம் உங்கள் தலைமுறைகளை சுபிக்ஷமாக வாழவைக்கும்.
    நாம சங்கீர்த்தனம் என்பது அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் நாம சங்கீர்த்தனம் செய்யலாம். திருமால் அடியவர்களின் திவ்ய சரிதங்களை கூறும் ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் வரும் அடியவர்கள் பலர் சமூகத்தில் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். நாம சங்கீர்த்தனம் என்ற ஒன்றின் மூலமே அவன் அருளை பெற்றவர்கள் அவர்கள்.
    நாம சங்கீர்த்தனத்தின் மகத்துவம் பற்றியும் அதன் அருமைகளை பற்றியும் மேற்கூறிய சேலம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சொற்பொழிவாளர் ஒருவர் அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இந்த பதிவுக்கு அடிப்படையே அது தான். அவர் கூறிய தகவல்களுடன் மேற்கொண்டு நாம் தகவல்களை திரட்டிய இந்த பதிவை தயார் செய்துள்ளோம்.
    வீட்டில் இன்னும் BROADBAND சரியாகவில்லை. எனவே இப்போதைக்கு இந்த பதிவை அளிக்கிறோம். வழக்கமான பதிவுகள், மற்றும் ரோல் மாடல் சந்திப்பு என நாளை முதல் தூள் கிளப்பலாம்.
    ‘நானில்லை… என் கோவிந்த நாமம் திரௌபதியை ரக்ஷித்தது!
    பரம்பொருளான இறைவனை அடைய அவனிடம் பக்தி செலுத்த பல வகைகள் உண்டு. அவற்றுள் முக்கியமான வழி, இறைவனின் திருநாமத்தைச் சொல்லிப் பாடுவது. இதை “திவ்ய நாம சங்கீர்த்தனம்’ என்பர். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே மிகச்சிறந்த வழி. “நாம சங்கீர்த்தனம் பெரிய பயன்கள் அளிக்க வல்லது; நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது’ என்பர்.
    “இறைவனிடம் மனம் ஒன்றாமல் சிதறுமானால் அதை அடக்க ஒரு வழி இருக்கிறது. அது கைகளைத் தட்டியபடி இறைவன் திருநாமங்களைப் பாடல்களாகப் பாடுவது. ஒரு மரத்தின் அடியிலிருந்து கைதட்டினால், அம்மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள் நாலாப் பக்கங்களிலும் சிதறி, சிறகடித்துப் பறந்து போவதைப் போல இறைவனின் லீலைகளையும் அவனது பெருங் கருணையையும் பாடலாகப் பாடி, கைத்தட்டியபடி நாம சங்கீர்த்தனம் செய்தால், நம் உள்மனத்திலுள்ள தீய சிந்தனைகள் எல்லாம் அகன்றோடிவிடும். கைகளால் தாளம் போட்டுக்கொண்டே இறை நாம சங்கீர்த்தனம் செய். அப்போது உனக்கு ஏகாந்த சிந்தி உண்டாகும்’ என்று தன் சீடர்களிடம் கூறினாராம் ஒரு குருநாதர்.
    மேலும், பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், “யஞ்ஞானாம் ஜப யஞ்ஞோஸ்மி” அதாவது, அனைத்து வகை யஞ்ஞங்களிலும் நான் ஜப (நாம சங்கீர்த்தனம்) யஞ்ஞமாக இருக்கிறேன் என்கிறார்.



    ஸ்ரீவிஷ்ணு புராணம், கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதாயுகத்தில் யஞ்ஞங்களாலும், துவாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்கிரஹம்) கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்திலேயே எளிதில் கிடைத்துவிடும் என்கிறது.
    “ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம், கலெü நாஸ்தியேவ நாஸ்தியேவ நாஸ்தியேவ கதிர் அன்யதா” – ஹரிநாம சங்கீர்த்தனமே, ஹரிநாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே எனது ஜீவனம். கலியுகத்தில் வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது என்கிறது பிருஹத் நாரதீய புராணம்.
    “கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்” – பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யம தூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர். இதனால் நமது துயர்கள் அனைத்தும் விலகும் என்கிறார் நம்மாழ்வார். “”நலம் தரும் நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்” என்றுள்ளார் திருமங்கையாழ்வார். இப்படி ஸ்ரீகிருஷ்ணன் முதல், பல ஆச்சார்யார்களும், பல அருளாளர்களும் இறைவனின் திவ்ய நாம சங்கீர்த்தனத்தைப் போற்றியுள்ளனர்.
    க்ருஷ்ண க்ருஷ்ணேதி ராமேதி ஸஞ்ஜபன் ஹரிதத்பர
    ராஜஸூயஸஹஸ்ராணாம் பலமாப்னோதி மானவ;”
    க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்று ஹரிநாம கீர்த்தனம் செய்வானானால் ஆயிரம் ராஜஸூயங்கள் செய்த பலனை அடைவான் என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி கூறுகிறது.
    விஸருதாநி பஹூன்யேவ தீர்த்தானி விவிதானி ச|
    கோட்யம்ஸேனாபி துல்யானி ஹரேர்நாம ஜபேன வை
    கணக்கு வழக்கற்ற புண்ய தீர்த்தங்களைக் கேள்விப் படுகிறோம். அவை ஹரிநாம ஜபத்தின் மஹிமையில் கோடியில் ஒரு பங்குகூட ஆகாது என்று விச்வாமித்ர ஸ்ம்ருதி கூறுகிறது.
    ஸர்வபாப யுதோ யஸ்து ந்ருஹரேர் நாம கீர்த்தனாத்
    விமுச்ய ஸர்வதுர்காணி யாதி ப்ரும்ம ஸனாதனம்
    ஸகல பாபங்களையும் செய்தவனாயினும் நரஸிம்ம நாமத்தைக் கீர்த்தனம் செய்பவன் ஸகல கஷ்டங்களையும் தாண்டி ஸனாதனமான ப்ரும்மத்தை அடைகிறான் என்று காலவ ஸ்ம்ருதி கூறுகிறது.
    இவ்வாறு கணக்கு வழக்கற்ற ஸ்ம்ருதிகள் பகவந்நாம கீர்த்தன வைபவத்தைச் சொல்லுகின்றன.
    வேதத்திலே… திருநாம வைபவம் பற்றிச் சொல்லியிருக்கிறதா..? திவ்யமாய்ச் சொல்லியிருக்கிறது! நம்மைப் பார்த்து ரொம்ப ஆதரவாக அந்த வேதம் சொல்கிறது.
    பகவான் கட்டிப் பொன் போலே… அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே…
    கட்டிப் பொன் மிக உசத்தியானதுதான். ஆனால் அதைத் தலையில் வைச்சுக்க முடியுமா? கழுத்திலே போட்டுக்க முடியுமா? அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா?
    ஆனால் பகவானின் திருநாமங்களோ உடனே எடுத்தாளக் கூடிய ஆபரணங்கள். அணிந்தும், அணியச் செய்தும் மகிழலாம்; அழகு பார்க்கலாம்.



    பாரதத்தில் வஸ்திர அபஹரணம் நடக்கும் போது திரௌபதி கூப்பிட்டாள்: ‘ஹே கிருஷ்ணா… ரக்ஷமாம் சரணாகதாம்…’ என்று. ஆனால் பகவான் அவளை ரக்ஷிக்கவில்லை. இதை அந்த பகவானே சொல்கிறார்;
    “ஒவ்வோர் அவதாரத்திலும் ஒரு குறை உண்டு. கிருஷ்ணாவதாரத்திலே திரௌபதியை உடனடியாக ரக்ஷிக்காதது என் குறை…” என்கிறார்.
    ‘திரௌபதிக்கு ஆடை சுரந்ததே… உன்னாலன்றி வேறு யாரால் அது சாத்தியமானதாம்…?’ என்று கேட்டால் பகவான் சொல்கிறார்:
    ‘நானில்லை; என் கோவிந்த நாமம் அவளை ரக்ஷித்தது…’
    பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும். அவனை விட நம்மிடம் அதிகப் பரிவுடையது அவன் நாமம்.
    பாண்டித்யம் இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம். ஆனால் அதை இடைவிடாது சங்கீர்த்தனம் பண்ணணும்.
    இதற்குத்தான் நாம சங்கீர்த்தனத்தை நமக்கு வாழ்க்கை முறையாகவே வைத்திருக்கிறது.



    பெருமாளை எழுந்தருளப் பண்ணுகிறவர்களுக்குத் தோளிலே காய்த்துப் போயிருக்கும். அதுபோல நாம சங்கீர்த்தனத்தைப் பழக்கமாகப் பண்ணிக் கொள்ளணும். ‘நாவிலேயே தழும்பு ஏற்பட்டுப்போகும் அளவுக்கு திருநாமத்தை உச்சாடணம் பண்ணணும்; எத்தனை முறைன்னு கேட்கக் கூடாது’ என்கிறார், திருமங்கையாழ்வார்.
    தழும்பு எப்படி உண்டாகும்? மீண்டும் மீண்டும் சொல்வதால். அதற்குத்தான் நியமம் ஏற்பட்டிருக்கிறது.
    எழுந்திருக்கும் போது – துயிலெழும்போது; ‘ஹரிர் ஹரி:, ஹரிர் ஹரி:’ என்று ஏழு முறை சொல்ல வேண்டும்.
    உரக்க, பெரிசாச் சொல்லணுமா? மனசுக்குள்ளே சொன்னால் போதாதா? மனசுக்குள்ளே சொன்னால் பலன் நமக்கு மட்டும். பெரிசா சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்ட படி எழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும் இருக்கும்.
    வெளியிலே கிளம்பிப் போகும்போது ‘கேசவா’ என்று உச்சரிக்கணும்.
    திருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து நம்மாழ்வார் பாடுகிறார்.
    ‘கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன..’
    ‘கேசவா’ என்று சொன்னால் இடர்களெல்லாம் கெடுமாம். அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும்போது ‘கேசவா’ என்று அழைப்பது.
    ஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்.
    “கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
    தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்…”
    என்கிறது திருப்பாவை. ‘கேசவா கேசவா’ என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம். நீ அதைக் கேட்டும் கிடந்துறங்குகிறாயே..’ என்று துயிலெழுப்புகிறார்.
    அடுத்தது உணவு கொள்வதற்கு முன்னால் கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவனை இப்படி அழைப்பதன் மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.
    சிரமம் இல்லை, கஷ்டமான நியமமில்லை. ஹரீ, கேசவா,கோவிந்தா, மாதவா என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து விட்டிருக்கறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியுமில்லாமலே நாம சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது.
    ஆனால் சொல்கிற அந்த நேரத்திலே மனசு அளவு கடந்த பக்தியிலே நிரம்பியிருக்கணும். ‘சொல்லிப் பார்ப்போமே, பலனிருக்கிறதாவென்று…” அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக் கூடாது.
    காரணம் அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை: “சர்வோத்தமஸ்ய கிருபையா…” சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மை உச்சரிக்க வைப்பதும் அவனுடைய கிருபைதான்… கருணைதான்!
    முதலிலே இந்த நித்ய காரியங்களுடனான நாம உச்சாடனத்தைப் பழகிக் கொண்டு விட்டால் மனசு மேலும் மேலும் அந்த சத்அனுபவத்தைக் கேட்கும். அந்த மனசுக்கு தெய்வானுபவம் தரக்கூடியதாய் அமையப் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
    சஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் நாமங்கள் – திருப்பெயர்கள். பகவானுக்கு வெறும் ஆயிரம் பெயர்கள் தானா…?
    ஆயிரம் நாமங்கள் என்று வெறும் எண்ணிக்கையிலே மட்டும் சொல்ல வந்ததன்று. சஹஸ்ரம் என்பதற்கு ‘பலபல’ என்றும் பொருள் உண்டு.
    ‘பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே’ என்று ஆழ்வார் சொல்கிறார்.
    எல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
    ‘சஹஸ்ரநாமம்’ என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.
    ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம்.
    அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்… அது விஷ்ணு சஹஸ்ரநாமம். “நான் இதைக் கேட்கலையே…நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..? நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே…” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது! அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார்.
    “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன…?”
    ‘சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு; இதை எடுத்துண்டுபோ’ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்…?” என்றார் சிஷ்யர்.
    அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்: அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்…
    அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் (உரை எழுதுவது) பண்ணினார் பகவத்பாதர்.
    இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது. எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான். ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.
    ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்…? அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே…? ஞானிகளுடன் அக்ரகண்யரான பீஷ்மரால்.. பீஷ்மர் என்றாலே பயப்படத் தக்கவர் என்று அர்த்தம்.
    அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர். “அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்…? போ! அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.
    ‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே – தர்மத்தைச் சொல்ல…?’ என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.
    பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்! இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான். அவன் சொன்னது கீதை; கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு.



    பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார். பகவத் குண தர்ப்பணம் என்று அதற்குப் பெயர். ‘பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி’ என்று பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும்போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்… அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்!
    சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..? அதைப் போலே சர்வ வியாபகனானவனை அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
    இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.
    நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது… நம் சித்தத்திலும் நுழையாது.
    ஸ்ரீ மஹாபெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்கும் முன், அங்கிருக்கும் சிஷ்யர்களை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை சொல்லும்படி சமிக்ஞை செய்வார்கள். [தலையில் கையினால் குட்டிக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள்; “சுக்லாம்பரதரம்” என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம் ]. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்.
    கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா என்று கேட்டால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம். பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.
    வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்…,
    கலியுகத்திலே கடும் அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து யக்ஞமெல்லாம் பண்ண முடியாதுன்னு வேதத்துக்கே தெரியும்!
    கீதையின் கடைசிப் பேச்சாக வருவதை சரம ஸ்லோகம்னு சொல்றது. மகா மந்திரம் அது. அது என்ன சொல்கிறது தெரியுமா…? ‘எல்லா தர்மங்களையும் நன்றாக விட்டு, என்னையே சரணமடைவாய்…’ என்கிறது.
    தர்மங்களை விடுவது என்பது நித்ய கடமைகளான சந்தியாவந்தனம், மாத்யானிகம் போன்றவற்றை விட்டு விடுவதல்ல… நியமத்தோடு பண்ண முடியாத பெரிய யக்ஞங்களை விட்டு விடலாம் என்று அர்த்தம்.
    இதற்கு இன்னொரு வியாக்யானமும் சொல்வதுண்டு… கலியுகத்திலே எல்லா தர்மங்களும் நம்மை விட்டு தூர, தள்ளி அகன்று போய்விடுகின்றன…! ‘இவனாலே யக்ஞமெல்லாம் முறைப்படி பண்ண முடியாது ‘ என்று அவற்றுக்குத் தெரியுமாம்! அதனால்தான் நம் மேலே பரிவு கொண்டு, வீணான விஷயங்களிலே நாம் காலத்தைக் கழித்துவிட அனுமதிக்காமல் மாற்றுவழி சொல்லியிருக்கிறது. யக்ஞம் பண்ணினால் என்ன திருப்தியை பகவான் அடைவானோ, அதே திருப்தியை அவன் திருநாமத்தைச் சொன்னால் அடைஞ்சுடுவான். எம்பெருமான் நாமங்களால் சமஸ்த யக்ஞ பலனும் நமக்குக் கிடைக்கும்.
    பகவான் நாமத்தை யாருடைய நாக்கு மறவாமல் உச்சரித்துக் கொண்டு இருக்கிறதோ அவன் சாஸ்திரங்களை அறிந்தவனாயினும் அறியாதவனாயினும் சுத்தனாயினும், அசுத்தனாயினும், எக்குலத்தில் பிறந்தவனாயினும், சத்திய ரூபத்தை அடைகிறான். பகவானுடைய நாமத்திற்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது. நாம சங்கீர்த்தனம் செய்பவன் பதிதைகளான பெண்டிர், லோபிகள் பாஷாண்டிகள் நடுவில் இருந்தபோதிலும் சீக்கிரமே விடுதலையடைந்து விடுகிறார்கள். எல்லாவிதமான அசுத்தங்களையும் அகற்றி அபாரதங்களிலிருந்து நிவாரணம் அளிப்பதும் அசுபங்களிலிருந்து மீட்டு சுகத்தை உண்டாக்குவதும் பகவானுடைய நாமம் மட்டுமே என்று பகவானின் நாமமகிமைகளை, பத்ம புராணம் நமக்குக் கூறுகிறது.
    - See more at: http://rightmantra.com/?p=11398#sthash.5zJxiwCY.dpuf
Working...
X