Announcement

Collapse
No announcement yet.

ஒரு பயணக் கதை -மாலன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒரு பயணக் கதை -மாலன்

    மலையில் உறங்கும் டிராகன்
    ‘இதில்தான் வரப்போகிறீர்களா?’ என்று கேட்டார் ஜெயா. அவர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் தயாரிப்பாளர் அறிவிப்பாளர். அவரும் சீன வானொலியில் பணி புரியும் மோகனும் என்னை சீனப் பெருஞ்சுவருக்கு அழைத்துப் போக வந்திருந்தார்கள். நான் அலுவலகம் செல்வதற்கு அணிவதைப் போல முழுக்கைச் சட்டையும், பேண்ட்டும் அணிந்திருந்தேன். ‘ஏன் இதற்கென்ன? ஏதாவது டிரஸ்கோட் இருக்கிறதா?’ என்றேன். ‘இல்லை, இல்லை. உயரமான மலைப்பகுதிக்குப் போகிறோம். ஒரு வேளை குளிரலாம்’ என்றார். எனக்கு சூட் அணிந்து கொள்வது அலுத்துப் போய்விட்டது. அலுப்பாக இருந்தது என்பதை விட சோம்பலாக இருந்தது. ஸ்வெட்டரும் இல்லாத, கோட்டும் இல்லாத ஒரு கையற்ற அரைக் கோட்டை அணிந்துகொண்டு டிராகனை சந்திக்கப் புறப்பட்டேன்.
    டிராகன்?
    படத்தில் பார்க்கும்போது, ஒரு மலை மீது நெளிந்து படுத்திருக்கும் டிராகனைப் போலத்தான் தோன்றுகிறது சீனப் பெருஞ்சுவர். சீனர்களுக்கு டிராகன் ஆற்றலின் அடையாளம். இந்தச் சுவரும்தான். பல லட்சக்கணக்கான படைவீரர்கள், விவசாயிகள், அடிமைகள், சாதாரணக் குடிமக்கள் என எளிய மக்களின் உழைப்பில் உருவான வலிய அரண் அந்தச் சுவர்.
    பெரிய கோயிலை ராஜராஜன் கட்டினார், தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினார், மதுரை மகாலை திருமலை நாயக்கர் கட்டினார் எனச் சொல்வதைப் போல, சீனப் பெருஞ்சுவரை இந்த அரசர், இந்த ஆண்டில் கட்டினார் எனச் சொல்லிவிட முடியாது. ஒரு காலத்தில் சீனமும் இந்தியா போல பல சிற்றரசுகளாக, சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது.அண்டை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு சிற்றரசும் தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்டன. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சின் சி ஹுவாங் என்ற ஓர் அரசர் ஆறு அரசுகளை ஒருங்கிணைத்து சீனப் பேரரசை உருவாக்கியபோது, தன்னுடைய தளபதியை அழைத்து சிற்றரசுக்களுக்கிடையே இருந்த சுவர்களில் சிலவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவற்றை இடித்துத் தள்ளிவிட்டு வடக்கு எல்லையில் சுவரை விரிவுபடுத்தச் சொன்னார். இரண்டு லட்சம் பேர் சேர்ந்து இந்த நெடுஞ்சுவரை உருவாக்கினார்கள். பின்னர் பல அரசர்கள் இதைப் புதுப்பித்து விரிவாக்கி, மராமத்து வேலைகள் செய்து பராமரித்து வந்திருக்கிறார்கள். எனவே இது ஒருவர் கட்டியதல்ல. என்னைப் பொறுத்தவரை மனித உழைப்பின் சின்னம். மனிதர்கள் ஒருங்கிணைந்து உழைத்தால் எத்தனை மகத்தான சாதனைகளை நிகழ்த்தலாம் என்பதன் அடையாளம். அதனால்தான் நான் அதைப் பார்க்க விரும்பினேன்.
    அது ஒருவகையில் அறிவின் அடையாளமும் கூட. கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் நெடும் மதில்கள் அமைக்கும் நுட்பத்தை அறிந்திருந்தார்கள். அந்த அறிவும், அனுபவம்தான் இந்த நெடுஞ்சுவரை உருவாகியிருக்கிறது.
    ஐரோப்பியர்கள் கருதியதைப் போல கீழைச் சமூகங்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்திருக்கவில்லை.
    8,851 கி.மீ. நீளத்திற்கு நீண்டு கிடக்கிறது இந்த நெடுமதில். அதாவது 5,000 மைலுக்கும் மேல். பண்டையச் சீனர்களின் அளவில் சொல்வதென்றால் பத்தாயிரம் லீ. அதனால் இதை சீனர்கள் முடிவில்லா சுவர்- வான் லீ சாங் செங்- எனச் சொல்லிப் பெருமிதம் கொள்கிறார்கள்.
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முடிவில்லா சுவரை வேடிக்கை பார்க்கக் கிளம்பினேன். சீனச் சுவரைப் பார்க்க வேண்டுமானால், பெய்ஜிங்கிலிருந்து 70 கி.மீ. பயணம் செய்து பதாலிங் என்ற இடத்திற்குப் போக வேண்டும்.
    நாங்கள் போய் இறங்கிய நேரம் நடுப்பகல். நடுக்கும் குளிர் இல்லை. ஆனால் சில்லென்று காற்று தலையை சிலுப்பிற்று. மனதிலும் ஒரு குளிர்ச்சி. எத்தனை தலைவர்கள் நடந்த இடம் நிக்சன், ரீகன், அரசி எலிசபெத், ஜப்பான் அரசர் அகிதோ, மண்டேலா, மார்கரெட் தாட்சர், புஷ், எல்ஸ்டின், புடின், சில ஆண்டுகளுக்கு முன் ஹிலாரி, அதன் பின் ஒபாமாவின் மனைவி மிஷேல் என உலகப் பிரபலங்கள் உலவிய இடம். 1957-இல்தான் சீனப் பெருஞ்சுவரைக் காண அந்நிய நாட்டுத் தலைவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கடந்த 57 ஆண்டுகளில் 500 தலைவர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். இதுவரைக்கும் 18 கோடி மக்கள் பார்வையிட்ட இடம்.
    என் பார்வையைச் சுழலவிட்டேன். கருங்கற்களைப் பரப்பி உருவான தளத்தில் கம்பீரமாக ஒரு தலைவாசல். அதனருகில் ஓர் அருங்காட்சியகம். இது போன்ற சுற்றுலாத்தலங்களுக்குப் போகும்போது அங்கிருக்கும் அருங்காட்சியகங்களைத் துருவினால் ஏதாவது விஷயம் கிடைக்கும். ஆனால், நம்மில் பலர் அருகிலிருக்கும் டீக்கடைக்குள் நுழைந்து விடுவோம்.
    அருங்காட்சியகத்தில் நுழைந்த என்னை, ‘வாங்க தோழர்!’ என வலக்கையை உயர்த்தி வரவேற்றார் சேர்மன் மாவோ. வெண்கலத்தில் அமைந்த முழு உருவச் சிலை, இன்னும் கொஞ்சம் வெளிச்சம் இருந்திருக்கலாம் என்னும் இடத்தில் நின்று கொண்டிருந்தது.
    மோகன், எங்கிருந்தோ, சிகப்பு பட்டுக் கயிற்றில் கோர்க்கப்பட்டிருந்த மரத்துண்டு ஒன்றைக் கொண்டு வந்தார். ‘இதில் உங்கள் விருப்பங்களை, கனவுகளை எழுதுங்கள். இங்கே தொங்கவிட்டால் அவை நிறைவேறும்’ என்றார். நான் திரும்பிப் பார்த்தேன். இதைப்போன்ற சிகப்புக் கயிற்றில் நெருக்கமாகத் தொங்கவிடப்பட்டிருந்த விருப்பங்கள் ஒரு திரைபோல தொங்கிக் கொண்டிருந்தது. ‘எழுதுங்க’ என்றார்.
    என் விருப்பம் என்ன? என்னையே கேட்டுக் கொண்டேன். எனக்கு உலகில் எங்கு போனாலும் தமிழ் இருக்க வேண்டும். சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு என்ன வேண்டும்? உலகம் முழுமைக்கும் என்ன வேண்டும்? அமைதி, வளம் என்ற இரு சொற்கள் இதயத்தில் நீந்தின. அந்த மரத்துண்டில் என் பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினேன். முதலில் தமிழில் அமைதி, வளம் என்று எழுதினேன்.
    அமைதியை விரும்புகிறோம் என்றால் அது அடுத்தவருக்கும் புரிய வேண்டுமல்லவா? அந்தச் சொற்களை ஆங்கிலத்திலும் எழுதினேன்.
    வாசல்படி போல் உயரம் குறைந்த படிகள், அதன் பின் ஒரு சாய் தளம், அதில் சிறிது தூரம் நடந்தால் பழனி போலப் படிகள். சுற்றிலும் விரிந்து கிடக்கும் மலைகளையும் சுகமான காற்றையும் ரசித்துக்கொண்டு படியேறலாம். திடீரென பாதை செங்குத்தாக உயர்கிறது. மெல்ல மூச்சு வாங்குகிறது. உட்கார்ந்துவிட்டுப் போகலாமா என்று ஒரு யோசனை மனதில் ஓடுகிறது. இன்னும் கொஞ்ச தூரம் போய்ப் பார்க்கலாம் என உள்ளம் சொல்கிறது. இன்னும் கொஞ்ச தூரம், இன்னும் கொஞ்சதூரம்தான் என ஏய்ப்புக் காட்டிக் கொண்டே ஈர்க்கிற வசீகரம் அந்தச் சுவர்களுக்கு இருக்கிறது.
    ஏதோ அங்கே பெரிதாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு ஏறினால் ஏமாந்து போவீர்கள். அந்தப் படிகள் உங்களை அழைத்துச் செல்வது காவல் மாடங்களுக்கு. பெரிய சாளரங்களோடு கூடிய கண்காணிப்பு மாடங்கள். ஏறத்தாழ எட்டுக்கு எட்டு அல்லது பத்துக்குப் பத்து என்ற அளவில் கருங்கற்களால் அமைந்துள்ள மாடங்கள். கற்களை கன்னாபின்னா என்று அடுக்காமல், கன நீள் சதுரங்களாக நறுக்கி அடுக்கியிருப்பது நயம்பட செய்ததற்கும் அயர்வின்றி உழைத்ததற்கும் அடையாளங்களாக காலம் கடந்து நிற்கின்றன. கை விரல்களால் நெருடிப் பார்த்தால், இந்தக் கற்கள் மீது காற்று நடந்து சென்றதன் காலடிகளைப் பார்க்கலாம். காலங்காலமாக வீசிய காற்று, கற்களை மெல்ல மெல்ல அரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கனமான பாறைகளில் சில இடங்களைக் குடைந்து சிறு சிறு துவாரங்கள் இட்டிருக்கிறார்கள். மறைந்திருந்து அம்பு செலுத்த அப்படி ஓர் ஏற்பாடு. வெளியே எட்டிப் பார்த்தால் கிடுகிடு பாதாளம். 70 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் பெய்ஜிங்கின் விளிம்புகளைப் பார்க்க முடிகிறது.
    இதைப் போன்று மதில் நெடுக 25 மாடங்கள் இருக்கின்றன.என்றார்கள். அவற்றில் ஒரு காலத்தில் இரண்டு லட்சம் வீரர்கள் தங்கியிருந்திருக்கிறார்கள். மங்கோலியாவிலிருந்து படையெடுத்து வருபவர்களை மறித்து நிறுத்துவது நோக்கம். தொலைவில் எதிரிப்படைகளைப் பார்த்ததும் கண்காணிப்பு மாடங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கைக் சமிக்ஞைகளை அனுப்புவார்கள். இணையம் இல்லாத காலத்தில் எப்படித் தெரிவிப்பது? புகைதான் சிக்னல். ஒரு முறை புகை போட்டு ஒரு வெடியும் போட்டால் 100 பேர் கொண்ட படை வருகிறது என்று அர்த்தம். இருமுறை புகை, இரு வெடிகள் 500 பேர். மூன்று புகை, மூன்று வெடிகள் ஆயிரம் பேருக்கு மேல்.
    இன்று பகை இல்லை என்பதால் புகை இல்லை. காவல் வீரர்களின் கண்காணிப்பும் குதிரைகளின் குளம்பொலியும் கடந்தகாலக் கதைகளாகிவிட்டன. இன்று இது புன்னகையும் நட்பும் பூக்கும் பூமியாகிவிட்டது. என் பெருஞ்சுவரைப் பயணத்தை சீன வானொலிக்காக வீடியோ படம் எடுக்க வந்திருந்த நண்பரிடம் புகைப்படம் எடுத்துத் தரும்படி எத்தனையோ பேர் கேட்டுக் கொண்டே வந்தார்கள். அவர் புன்னகையோடு மறுத்துக் கொண்டிருந்தார் (சீன வானொலி இணையதளத்தில் என் நெடுஞ்சுவர்ப் பயணம் பற்றிய காணொளி இருக்கிறது. அதன் வழியே நீங்களும் நெடுஞ்சுவரைப் பார்க்கலாம். இணயதள முகவரி: http://tamil.cri.cn/301/2014/04/23/1s139252.htm
    ‘நீங்கள் இங்கே நிச்சயம் நிழற்படம் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும்’ என்றார் ஜெயா, ஒரு சலவைக் கல்லால் ஆன சிறு தூணைக் காட்டி. ‘என்ன விசேஷம்?’ எனக் கேட்டேன். சீனப் பெருஞ் சுவருக்குச் செல்லாதவன் வீரனே கிடையாது என்று மாவோ ஒருமுறை சொன்னார். நீங்கள் சீனப் பெருஞ்சுவருக்கு வந்திருப்பதால் உங்களுக்கு வீரன் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்’ என ஒன்றை எடுத்து நீட்டினார்.
    இன்று சீனப் பெருஞ்சுவருக்குச் செல்ல வீரம் தேவையில்லை. சிறு முயற்சி போதும். முயற்சி இருந்தால் நிலவுக்கே போய்விடக் கூடிய காலம் இது.
    நிலவிலிருந்து பார்த்தால் பூமியில் தெரியும் மனிதன் உருவாக்கிய ஒரே கட்டிடம் சீனப் பெருஞ்சுவர்தான் என்கிறார்களே நிஜம்தானா? இல்லை. மனிதர்களின் கற்பனை நிலவையும் தாண்டி நீள்வதல்லவா? 1754-இல் வில்லியம் ஸ்டுகேலே என்ற தொல்லியல் அறிஞர் ஒரு கடிதத்தில் நிலவிலிருந்தும் இது தெரியக் கூடும் என்று குறிப்பிட்டிருந்தார். வியப்பில் விளைந்த வாக்கியம் அது. ஏனெனில் அப்போது மனிதன் நிலவுக்குப் போவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. பின்னால் 1895-இல் ஹென்றி நார்மன் என்ற பத்திரிகையாளர் அந்த வாக்கியத்தை மேற்கோளாக எடுத்தாள, அது பிரபலமாயிற்று. அப்போதும் கூட அம்புலிப் பயணம் கற்பனையாகவே இருந்தது.
    சரி, நிலவிற்குப் போய் வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? நிலவிலிருந்து பார்த்தால், பூமியிலிருந்து பார்த்தால் எந்தக் கட்டுமானமும் தெரியவில்லை என்று நீல் ஆம்ஸ்ட்ராங் அடித்துச் சொல்லிவிட்டார். 2003-இல் விண்வெளிக்குச் சென்ற சீன விண்வெளி வீரர் யாங் லீவேயும் அங்கிருந்து எதுவும் தெரியவில்லை என்கிறார். சீனப் பாடப்புத்தகங்களில் கூட அந்தக் கருத்தை
    நீக்கிவிட்டார்கள்.
    கருத்தை நீக்கிவிடலாம். கற்பனைகளை நீக்கிவிட முடியுமா?
Working...
X