PDA

View Full Version : ச்ராத்தம்-தர்பணம் பித்ருக்களை எப்படிச் &bmbcAdmin
17-09-2014, 04:35 PM
ஶ்ரீ:
கீழ்கண்ட கேள்வி பதில் நம் போரத்தில் மெஸேஜ் வாயிலாக பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைவரும் அறியவேண்டும் என்பதற்காக இதை இங்கே எடுத்து வெளியிட்டு அடியேன் கருத்தினையும் தெரிவித்துள்ளேன்.

கேள்வி:
Sri ********************* Anna,
pl clear my doubt how after athma taking rebirth can come to us to take our darpanam at our houses?
If they are born elsewhere how they can come to us?
Pl tell me in Tamil sir


பதில்:
ஸ்ரீ ******************************* அவர்களுக்கு,
தங்கள் கேள்விக்கு பலகோணங்களில் பதிலளிக்கவேண்டியுள்ளது. இறப்பிற்கு பின் வாழ்க்கை இது மிகப்பெரிய விஷயம்.
பொதுவாக புனரபி ஜனனம் புனரபி மரணம் இந்த சைக்கிளிலிருந்து விடுபடத்தான் பகவத் பாத சரணம் பாகவத் பாத சரணம் எல்லாமே பிரவிக் கடலிலிருந்து விடுபட்டாலும் பலபடிகளைக் கடந்துதான் அவன் சந்நிதியை அடையமுடியும் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில்
தான் நம் தர்பணங்கள் சிரார்த்தங்கள் அவர்களுக்கு உதவியாயிருக்கிறது உதாரணம் பகீரதனின் ப்ரயத்தனம். தங்கள் கேள்வி நாம் செய்யும் தர்பணம் அவர்களை எவ்வாறு சென்றடைகின்றன?.
திருவண்ணாமலை தீபக்காட்சியை நம் வீட்டிலிருந்தே காண்கிறோம் டிவி மூலம் உலகின் ஏதோ ஒருமூலையில் நடக்கும் நிகழ்ச்சியை நம் வீட்டிலிருந்தே காண்பது போலத்தான் நமது அர்க்யங்களின் பலன் நமது பித்ருக்களை சென்றடைகிறது.இந்த காலகட்டங்களில் பித்ருக்களே நம்மைத்தேடி வருவதாக ஐதீகம்


அடியேன் கருத்து:

இறந்தவர்கள் அடுத்த கணமே மறுபிறவி எடுத்துவிடுவதில்லை. அடுத்த பிறவிக்கு பலப்பல ஆண்டுகள் காத்திருக்க நேரலாம்.
காரணம், இந்த ஆன்மாவின் பாப புண்ணிய பலன்களும், இந்த ஆன்மா யாருக்குப்பிறக்கவேண்டுமோ அந்தப்பெற்றோருக்கு இதே அளவு புண்ணியு-பாபங்கள்
உள்ள குழந்தை பிறக்கவேண்டும் என்கிற பலனும் ஒத்துப்போகவேண்டும். இதற்கு வெகுகாலம் பிடிக்கலாம்.
மிகுந்த புண்ணியம் செய்தவர்களுக்கும், மிகுந்த பாபம் செய்தவர்களுக்கும் பிறவி கிடைப்பதற்கு மிக நீண்ட காலம் பிடிக்கும்.
சராசரியாக உள்ளவர்களுக்கு விரைவில் பிறவி கிடைக்கும்.
ப்ராஹ்மணனாக மறித்து, புத்ரர்களால் சரியானபடி ஸம்ஸ்காரம் பண்ணப்பட்டவர்கள் வசு, ருத்ர, ஆதித்ய என்னும் பித்ரு லோக வாஸத்தை அனுபவித்தபின்
புண்ணியம் எஞ்சியிருந்தால் அதை அநுபவிக்க ஸ்வர்க்கலோகத்திற்குச்சென்று அந்த பலன் தீர்ந்ததும் மீண்டும் பூமியில் பிறவி எடுப்பர்.
எனவே, நெறிப்படி ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட ப்ராஹ்மணன் ஆன்மா அவன் பிள்ளையின் காலத்திற்குள் மறுபிறவி எடுக்க வாய்ப்பில்லை.

இந்த விஷயம் ஶ்ரீவைஷ்ணவர்களுக்குப் பொருந்தாது. வைணவன் ஆன்மா அடுத்தக் கணமே ஆதிவாகிகர்களால் வைகுண்டத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுவிடும்.
ஆயினும், புத்ரர்களின் கர்மாவை பூர்த்திசெய்வதற்காக, பகவான் தானே பித்ரு ரூபியாக இருந்து பெற்றுக்கொண்டு பலன் அளிக்கிறான் என்பது ஸம்ப்ரதாயம்.
********

பித்ருக்களைக் குறித்துச் செய்யப்படும் ச்ராத்தங்கள், தர்பணங்கள் இவை அவர்களுக்கு (பித்ருக்களுக்கு) உதவுவதற்காக என்ற கோணத்திலேயே பெரும்பாலோர் சிந்திக்கின்றனர்.
உண்மையில் அவை செய்யும் கர்த்தாவின் பலனுக்காகவேயன்றி பித்ருக்களுக்காக அல்ல என்பதை உணரவேண்டும்.

ஒரு வயலில் நெல்போன்ற தான்யத்தை விதைத்து, அதற்கு நீரும், உரமும் இட்டு பாதுகாத்து வருவது யாருடைய பலனுக்காக?
பயிர் வளர்ந்து விளைவதற்கு மனிதனின் முயற்சி தேவை, ஆனால் விளைந்தபின் அதன் பலனை அருவடை செய்வது அந்த மனிதனே அன்றோ?!

அதுபோல் ஶ்ரீசுதர்ஸன பகவானை ஆவாஹனம் செய்து, பல ப்ரசாதங்களை ஹோமம் வாயிலாக கொடுத்து ஒருவன் ஆராதிக்கிறான் எதற்காக?
தினமும் இல்லத்தில் தளிகை செய்து, இல்லத்தில் உள்ள பெருமாளுக்கு அந்த தளிகையை அமிசைசெய்து வைக்கிறான் எதற்காக?
இவன் தளிகை ஸமர்ப்பிக்காவிட்டால் பெருமாள் பட்டினி கிடப்பாரா? (இன்னமும் அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்கள் பலர் உள்ளனர் என்பதுதான் வியப்பு).
சுதர்சனரிடமும், பகவானிடமும் பல அருளாசிகளைப் பெறுவதற்காகத்தான் அவர்களை மனிதன் ஆராதிக்கிறான்.
அதுபோலவே, தர்பணம், ச்ராத்தம் என்பதும் பித்ரு ஆராதனம்தான்.
"ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபிர்பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் ததோ ரயிஞ்சா தீர்க்காயுத்வஞ்சா சதஸாரதஞ்சா"
என்ற மந்திரத்தால் பித்ருக்களை ஆவாஹனம் செய்கிறோம், அம்மந்திரத்தின் பொருள்:
"பித்ருக்களே முன்னோர் பதித்த வழித்தடத்தில் கம்பீரமாக வாருங்கள்,
தீர்காயுளுடன், நூறுவருடம் வாழக்கூடிய தேஜசுடன் கூடிய ப்ரஜைகளை (வாரிசுகளை) வழங்க ஆசீர்வதிக்க வாருங்கள்".
என்றே வரவழைக்கிறோம்.
'விச்வேதேவ ஸ்வரூபி, பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ ஸ்வரூபி, விஷ்ணு ஸ்வரூபி என ஸர்வாகார: ( எல்லா ரூபமாகவும் இருக்கும்) பகவான்
ஶ்ரீஜனார்தனனிடத்திலேயே நம் (ச்ராத்தங்கள், தர்பணங்களை) வஸ்துக்களை ஸமர்ப்பிக்கிறோம்.
"ஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதி சாகரம்
ஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி" - என்பதுபோல,
எப்படி ஒரு பெரிய ஆலமரத்தின் வேரில் சொரியப்படும் நீரானது, அதன் - தண்டு, கிளைகள், இலைகள், காய்கள், கனிகள் என அனைத்து பாகங்களையும்
சென்றடைகிறதோ, ஜனார்தனனாகிய மூலததில் நாம் சேர்க்கும் வஸ்துவானது, அவனுடைய அங்கங்களாக வ்யாபித்திருக்கும் எந்த ஜீவனுக்கும்
எங்கிருந்தாலும் அங்கே எளிமையாகச் சென்றடையும் என்பதில் மாற்றில்லை.

ஒரு போஸ்ட் ஆபீஸில் மணியார்டர் அனுப்பும்போது நாம் கொடுத்த அதே பணம் நாம் யாருக்கு அனுப்புகிறோமோ அவருக்குச் சென்றடைவதில்லை,
சென்றடையவேண்டிய இடத்தில் அதே மதிப்புடைய வேறு பணம் அவர்களைச் சென்றடைகிறது.
அதுபோல் நாம் ஸமர்ப்பிக்கும் வஸ்து, அவர்களைச் சென்றடையத் தேவையில்லை,
அதன் மதிப்பு அவர்களுக்குச் சென்றடைந்தால் போதுமானது, அதற்குத் தக்க ஆசீர்வாதம் அவர்களிடமிருந்து
நமக்குக் கிட்டும் என்பதில் ஐயம்கொள்ளத் தேவையில்லை.
என்.வி.எஸ்