Announcement

Collapse
No announcement yet.

உள்ளத்தில் இடம் கொடுப்போம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உள்ளத்தில் இடம் கொடுப்போம்!

    உபசரிப்பு, விருந்தோம்பல் மற்றும் அன்னதானம் பற்றி வேதங்களும், பல்வேறு நூல்களும் விரிவாகவே கூறுகின்றன. அதேசமயம், 'பாத்திரம் அறிந்து பிச்சை இடு' என்ற பழமொழியும் உண்டு. அப்படி பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதில் உள்ள உயர்வு குறித்து,
    'பகரும் ஞானி பகல் ஊண் பலத்திற்கு நிகரில்லை என்பது நிச்சயம் தானே...' என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார் திருமூலர்.
    அதை விளக்கும் கதை இது:
    ஆகுகன் - ஆகுகி எனும் வேடுவ தம்பதி, மலை அடிவாரத்தில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தனர். அவர்கள், அவ்வழியாக வருபவர்களை வரவேற்று உபசரிப்பதும், அருகில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
    ஒருநாள், அந்தி சாயும் நேரத்தில், சிவயோகி ஒருவர் அவ்வழியே வந்தார். அவரை வரவேற்று உபசரித்தனர். பின், ஆகுகனிடம், சிவயோகி, 'அப்பனே... இன்று இரவு தங்குவதற்கு இடம் தர வேண்டும்...' என்றார்.
    அந்த வேடனின் குடிசையிலோ இருவர் மட்டுமே தங்க முடியும்; மூன்றாவது நபருக்கு இடம் இல்லை. ஆனால், எதைப் பற்றியும் யோசிக்காமல், சிவயோகியையும், தன் மனைவியையும் குடிசைக்குள் தூங்கச் சொல்லிவிட்டு, காட்டு விலங்குகள் உலவும் அந்த இரவில், குடிசைக்கு வெளியே கையில் வில்லுடன் காவலுக்கு நின்றான் ஆகுகன்.
    அப்போது, அங்கு வந்த புலி ஒன்று, ஆகுகனை தாக்கிக் கொன்றது.
    பொழுது விடிந்ததும், கணவனைக் காணாமல் திகைத்த ஆகுகி, சிறிது தொலைவில், சிதைந்த நிலையில் கணவனின் உடலைக் கண்டு, விவரமறிந்தாள். உடனே, தீயை மூட்டி கணவரின் சிதைந்த உடற்கூறுகளை அதில் போட்டு, தானும் உயிர் துறக்க துணிந்தாள்.
    அப்போது, சிவபெருமான் அவளுக்கு காட்சியளித்து, 'பெண்ணே... நீயும், உன் கணவனும் ஒரு சிவயோகிக்கு உணவும், அடைக்கலமும் கொடுத்து உபசரித்ததால், நீ, அடுத்த பிறவியில் விதர்ப்ப நாட்டு மன்னன் மகளாக பிறந்து, தமயந்தி எனும் பெயர் பெறுவாய்; உன் கணவன் நிடத நாட்டு மன்னன் வீரசேனன் மகனாக பிறந்து, நளன் எனும் பெயர் பெறுவான். உங்கள் இருவரின் இந்த முடிவிற்கு காரணமான சிவயோகி, அன்னப் பறவையாக பிறந்து, உங்கள் இருவரையும் சேர்த்து வைப்பான்...' என்று கூறி மறைந்தார்.
    நளனையும், தமயந்தியையும் அன்னப்பறவை சேர்த்து வைத்த கதையை, 'நள உபாக்யானம்' என்ற நூல் விரிவாகவே கூறுகிறது.
    கடவுள் பற்றும், தர்ம சிந்தனையும், சுயநலமற்ற உபகாரமும் என்றுமே அர்த்தமற்று போய் விடாது என்பதற்கு ஆகுகன் - ஆகுகி கதையே சான்று! அதனால், இத்தகைய நல்ல பண்புகளுக்கு உள்ளத்தில் இடம் கொடுப்போம் என, உறுதி எடுப்போம்.


    பி.என்.பரசுராமன்


    விதுர நீதி!: ஒருவன் கொடிய மனம் உடையவனாகவும், சரியான படிப்போ, பயிற்சியோ பெறாதவனாகவும் இருந்தால், அவனுடன் அறிவாளி நட்புக் கொள்வதை தவிர்ப்பான். தண்ணீரை மறைத்து பாசி படிந்துள்ள கிணற்றைப் போல, மனம் விட்டு பேசாமல், மூடி மறைத்து பேசுகிறவனையும், நண்பனாக்கிக் கொள்வதை அறிவாளி தவிர்ப்பான். ஏனெனில், இத்தகையவர்களுடன் ஏற்படும் நட்பு நீடிக்காது.
    — என்.ஸ்ரீதரன்.
Working...
X