Announcement

Collapse
No announcement yet.

நிரந்தர இன்பம் வேண்டுமா?

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • நிரந்தர இன்பம் வேண்டுமா?

  நிரந்தர இன்பம் வேண்டுமா?
  டிச., 17 மார்கழி மாதப் பிறப்பு


  இந்த உலக வாழ்வு நிரந்தரமானது என நினைத்து, ஓடி ஓடி உழைத்து, பெரும் பணத்தைச் சேர்க்கின்றனர் மனிதர்கள். இதற்கு முன், இப்பூமியில் வாழ்ந்து, மறைந்தவர்கள், குண்டூசியைக் கூட எடுத்துச் செல்லவில்லை என்பது தெரிந்திருந்த போதும், மாயையில் சிக்கி மயங்கி நிற்கின்றனர்.
  இந்த மயக்கத்தில் இருந்து மீண்டு, நிரந்தர இன்பம் பெற வேண்டுமானால், ஆண்டாளின் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம்.
  'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே; அந்த பலன்கள் நல்லதோ, கெட்டதோ என்னிடம் அர்ப்பணித்து விடு' என்பது கீதையின் சாரம்!
  வேதங்களில் கூறியுள்ளபடி வாழ்வதன் மூலமே மனிதன், தன் பிறவிக் கடலை கடக்க முடியும். ஆனால், அது, அனைவருக்கும் புரியாது; அதைப் படிப்பதும் சுலபான விஷயமல்ல. எனவே, கிருஷ்ணாவதாரத்தில், வேதத்தின் சாரத்தை, கீதையாக சொன்னான் கண்ணன். அதுவும் எல்லாருக்கும் பிடிபடவில்லை. பண்டிதர்கள் அதைப் புரிந்து கொண்டாலும், அதை கடைபிடிக்கவோ, பாமரர்களுக்கு கொண்டு போய் சேர்க்கவோ இல்லை. அதனால், மீண்டும் பிறப்பெடுக்க நினைத்தார் பகவான். ஆனால், அவருக்கு லட்சுமியைப் பிரிய மனமில்லை.
  அதனால், 'தேவி... உலக மக்கள் மாயையில் அகப்பட்டு, தர்மநெறி பிறழ்ந்து நடக்கின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்டு, நம்மோடு ஐக்கியமாக்க வேண்டும். அதற்கு, வேதத்தின் சாரத்தை, அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். எனவே, நான் பூலோகம் செல்கிறேன்; நீயும் என்னுடன் வா...' என்றார்.
  'ஐயனே... உம்முடன் ராமாவதாரத்தில் சீதையாக உடன் வந்தேன்; என்னைக் கொடிய ராவணனிடம் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தீர். கிருஷ்ணாவதாரத்தில் ருக்மணியாக வந்தேன்; பாமாவுடன் ஜோடி சேர்ந்தீர், கோபியர்களுடன் கொஞ்சினீர். மீண்டும் மானிடப் பிறப்பெடுத்து, அவதிப்பட நான் தயாராக இல்லை. நான் உம்முடன் வரவில்லை...' என்று கூறி விட்டாள்.
  பகவான், உடனே பூமாதேவியின் பக்கமாக திரும்பினார். 'எப்போதடா நம்மை அழைப்பார்...' என்று காத்திருந்தது போல, உடனே, சம்மதம் தெரிவித்து விட்டாள் பூமாதேவி.
  அச்சமயத்தில், பூமாதேவியை, தன் மகள் போல பாவித்து, வணங்கி வந்தார், ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் எனும் பக்தர். அவர், அங்குள்ள வடபத்ரசாயி கோவிலில், புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார். அவரது திருமகளாக, பூமாதேவி தாயார், துளசிவனத்தில் அவதரித்தாள். அவளுக்கு, கோதை என பெயர் சூட்டினார், விஷ்ணுசித்தர்.
  'கோதை' என்னும் சொல்லுக்கு, நல்வாக்கு அருள்பவள் என்று பொருள். அவள் தன் பெயருக்கேற்ப, வேதத்தின் சாரத்தை, 'திருப்பாவை' எனும், 30 பாடல்களில் வடித்தாள். இந்த பாடல்கள் மூலம், உலக வாழ்வு தற்காலிகமானது என்றும், இறைவனை அடைவது ஒன்றே, பிறப்பில் இருந்து உய்ய வழி என்றும் உலகுக்கு எடுத்துச் சொன்னாள்.
  மேலும், பெருமாளை மட்டுமே மணம் முடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து, அதை செயல்படுத்தியும் காட்டினாள்.
  அவள் பாடிய பாடல்கள், வீட்டுக்கு வீடு இன்று வரை ஒலிக்கிறது. மார்கழி மாதத்தின், 30 நாட்களும், தினமும் ஒரு பாடலை பொருள் உணர்ந்து படித்து, ஆண்டாள் மற்றும் திருமாலுடனும் ஐக்கியமாக நிரந்தர இன்பம் தேடும் வழியைத் தேடுவோம்!


  தி.செல்லப்பா
  source: Dinamalar
Working...
X