புறா


காலையிலேயே அந்த சாலையில், மக்கள் கூட்டம் முன்டியத்துக் கொண்டிருந்தது.....
இதை கவனித்த ஒரு பெண் புறா, தன் ஜோடியிடம் கேட்டது 'ஏன் மனிதர்கள் எப்போதும் ஒரே பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் ? ' என்று.
மனிதர்கள் தங்கள் வாழ்கையை தொலைத்து விட்டு, அதை எங்கெங்கோ தேடித்தான் இப்படி ஓடுகிறார்கள் என்றது, ஆண் புறா.....


'என்னது வாழ்கையைத் தொலைத்து விட்டு தேடுகிறார்களா' என்று அதிர்ச்சியுடன் கேட்டது பெண் புறா.
ஆமாம் என்பது போல் ஆமோதித்த ஆண் புறா, பெண் புறாவைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்டது.


முதலாவதாக, நமது இலக்கு என்ன? என்று பெண் புறாவிடம் கேட்டது.....
இலக்கு என்று ஏதுமில்லையே, என்றது பெண் புறா பொருமையாக.
நாம் பசியெடுத்தால் என்ன செய்வோம்? என்று கேட்டது ஆண் புறா....
இரை தேடி, உண்டு பசியாறுவோம் என்றது பெண் புறா.
மீண்டும் பசியெடுத்தால்?, என்று கேள்வியாகவே கேட்டது ஆண் புறா.....
மீண்டும் இரை தேடி பசியாறுவோம் என்றது பெண் புறா.
நமது குஞ்சுகள் எங்கே? என்று கேட்டது ஆண் புறா....
அவைகளுக்கு பறக்கவும், இரை தேடவும் கற்றுக் கொடுத்தோம், நமது கடமையை செவ்வனே செய்தோம்.
தங்களால் தனித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு, நம்மைவிட்டு சென்று விட்டன என்றது பெண் புறா.
நமது குஞ்சுகளுக்காக, உணவுப் பொருட்களை நாம் பதுக்கி வைத்திருக்கிறோமா? என்று கேட்டது, ஆண் புறா.....
இது என்ன மடத்தனமான கேள்வி, நாம் ஏன் பதுக்க வேண்டும், எல்லோருக்கும் என்ன விதிக்கப்பட்டதோ அதுதானே நமக்கும் என்றது பெண் புறா.


நமது குஞ்சுகளுக்கு சரியான ஜோடி தேடி, கல்யாணம் செய்து வைத்திருக்கிறோமா? என்று கேட்டது ஆண் புறா....
ஒரு பக்குவமான வயதை அடைந்தவர்கள், அவரவர் விருப்படி தமது ஜோடியை தேடிக் கொள்ள வேண்டியதுதான், இதில் தலையிட நமக்கென்ன உரிமை இருக்கிறது, என்றது பெண் புறா.


இரை தேடியது போக மீத நேரங்களில் நாம் என்ன செய்வோம்? என்று கேட்டது, ஆண் புறா....
இது என்ன கேள்வி, நம்மை மறந்து வானுயர பறந்து வானை அளப்பது, ஏரிக்கரை, சோலைகள் என்று சுற்றி வந்து, வாழ்வை ரசிப்பது......, என்றது பெண் புறா.


இது புரியாமல்தான், மனிதர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தான் வாழும் போதும், வாழ்ந்து முடித்த பின்னும் தனது ஆளுமை நிலைக்க வேண்டுமென்ற ஆசையிலும், அறியாமையிலும் வாழ்கையையே வாழ தவறிவிட்டனர்.


பொருளை இலக்கென்று நினைத்து, அதை தேடி தேடியே, தங்களையும் தங்களது வாழ்கையையும் தொலைத்து விடுகிறார்கள் , என்றது ஆண் புறா.


மனிதர்களின் பரிதாப நிலையை புரிந்து கொண்ட பெண் புறா, அவர்களுக்காக வருத்தம் கொண்டது.
பெண் புறாவிற்கு இது புரிவதாலோ, அது வருத்தம் கொள்வதாலோ என்ன ஆகிவிடப்போகிறது........