பதிவு செய்த நாள்
05 ஏப்
2014
20:06'மகராஜன், புண்ணியவான்... நல்லா இருக்கட்டும்!' என, தொழிலதிபர்களும், வர்த்தகர்களும் ஒருவரை வாழ்த்துகின்றனர். புதிதாகப் பதவியேற்கப் போகும் நபர் அல்ல அவர்; பதவியில் இனி தொடர மாட்டார் என்ற நம்பிக்கையால் வாழ்த்துக்களைப் பெறுகிறார்.

notice

Notice

அது ஒரு, ஆலய நகரப் பல்கலைக் கழகம். அங்கே, ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர், ஒரு ஆங்கிலேயர். ஓய்வு பெறும் அவருக்கு, வழியனுப்பும் விழா நடத்த, கல்லுாரிகளின் ஆங்கில ஆசிரியர்கள், ஆளுக்கு ஐந்து ரூபாய் பணம் திரட்டினர். ஒரு இணை பேராசிரியர், 'பத்து ரூபாயாகத் தருகிறேன். அந்த மனுஷனைத் திரும்பி வரச் சொல்லாதே' என்றார். 'ஏன் சார்?' என்று கேட்டதற்கு, ஷேக்ஸ்பியரின், 'ஜூலியஸ் சீசர்' நாடகத்தின் முக்கிய வசனமான, 'மனிதன் செய்யும் கேடுகள், அவன் காலத்திற்குப் பிறகும் தொடர்கின்றன' என்பதை, எடுத்துச் சொன்னார்.

information

Information

தமிழகத்தில், ஒரு ஜாதியினர் கணக்கு வழக்கு வைத்திருக்கும் முறையை, 'ஐந்தொகை' என்பர். கணக்காயர்கள் சொல்லும், 'புக் கீப்பீங், பேலன்ஸ் ஷீட்' எல்லாம் இதில் அடங்கும். மிகச் சரியான பற்று வரவுக் கணக்கு முறை. அந்தப் பின்னணியில் வந்த நம்மூர் மகராஜனுக்கு, கணக்கு வழக்கு புரியாமல் போகுமா? கணக்கு புரியும்; வழக்கும் புரியும்... வக்கீல் அல்லவா?அவர் சொல்லிக் கொள்ளாத சாதனைகளை, கேள்விகளாக பிட்டுப்பிட்டு வைத்து விட்டார், அவருக்கு முன் பா.ஜ., ஆட்சியில், நிதி அமைச்சராக இருந்த, மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி யஷ்வந்த் சின்கா. உடனே, 'சின்காவின் கேள்விகள் அசட்டுத்தனமானவை. அவ்வையார் காலத்து ஆசாமிக்கு, அம்மையார் காலப் பொருளாதாரம் புரியாது' என்றபடி மேலும், என்னென்னவோ சொன்னார். அதனாலென்ன... அவற்றை அலசிப் பார்க்க வேண்டியது யஷ்வந்த் சின்காவின் வேலை.பின் ஏன் நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சொதப்பினார்? இப்போது புரிந்ததா, நான் யாரைச் சொல்கிறேன் என்று? ஆம்... ப.சிதம்பரம் தான்!

இதோ, நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள்.


*நீங்கள் முதல் முறையாக நிதிஅமைச்சரானது, 1996ல். அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.5 சதவீதமாகக் குறைந்து போனது. இதற்கு நீங்கள் காரணமில்லையா?
*ஐ.மு.கூ.,வின் முதல் ஆட்சிக் காலத்திலும் (2004-2009) நிதியமைச்சராக இருந்தீர்கள். நீங்கள் பொறுப்பேற்ற போது, 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, ஏன் மந்தமானது?
*பார்லிமென்டில், பொருளாதார ஆய்வறிக்கையை, 2004 ஜூலை சமர்பித்த போது, 'நாட்டின் பொருளாதாரம் வளமாக இருப்பது போல் தோன்றுகிறது' என்றீர்களே... அந்த வளமான வளர்ச்சி, அப்புறம் ஏன் காணாமல் போனது.
*நீங்கள் பதவியேற்பதற்கு முன், 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, ஏன் உங்கள் காலத்தில், 5 சதவீதத்திற்கும் குறைவாக தளர்ந்தது?
*ஐ.மு.கூ.,வின் முதலாட்சி துவங்கிய போது, நீங்கள் பெருமையாக பேசிக் கொண்ட பொருளாதார வலிமை, உங்களுக்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் செய்து தந்தது புரிகிறதா? இதை ஒப்புக் கொள்வீர்களா?
*உங்கள் நிதியமைச்சர் காலத்தில், வெட்டிச் செலவுகளினாலும், பொறுப்பற்ற செயல்பாடுகளினாலும் பட்ஜெட்டில் ஓட்டை விழுந்ததே, அது பற்றி கவலைப்பட்டீர்களா?
*துண்டு விழும் தொகை அதிகமாக கூடாது என்பதற்காக, வளர்ச்சி திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்தீர்களே இது சரியா?
*தங்கள் ஐ.மு.கூ., முதல் ஆட்சிக் காலத்தில் துவங்கிய பண வீக்கம், சென்ற ஆண்டு வரை, சராசரியாக, 10 சதவீதமாக தொடர்ந்ததே... அதைக் கட்டுப்படுத்த, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
*தொடரும் பணவீக்கம் காரணமாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை இறுக்கியது, சமுதாயத்தின் பல பிரிவுகளை பாதித்ததே. அதற்கு நீங்கள் காரணமில்லையா?
*உங்கள் ஆட்சிக் காலத்தில், நாட்டின் அன்னியக் கடன், மூன்று மடங்கு உயர்ந்ததே. மக்கள் தலையில், இவ்வளவு கடனைச் சுமத்துவதற்காக, நீங்கள் கவலைப்படவில்லையா?
*சர்வதேச நிதியம், இந்தியாவின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது என்று அறிக்கை அளித்ததே. இது நமக்குத் தலைகுனிவு அல்லவா? இதற்காக வெட்கப்பட்டீர்களா?*பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்று, 'அசோசெம்' என்ற தொழில் வர்த்தக சங்கம் சொன்னதே. அந்த வங்கிகள் உங்கள் நிர்வாகத்தில் தானே இருக்கின்றன?
*நிதி அமைச்சகத்தின் இணைச் செயலர் தந்துள்ள தகவலின்படி அதீதமான ஊழல்கள், முறைகேடுகள், கொள்கைக் குழப்பங்கள், தில்லுமுல்லுகள், நிர்வாக மெத்தனம் காரணமாக மின்சாரம், எக்கு, நிலக்கரி, பெட்ரோலியம் ஆகிய முக்கிய துறைகளின் வளர்ச்சிக்காகத் தீட்டப்பட்ட, 17.86 லட்சம் கோடி ரூபாய், உத்தேச முதலீடு கிடப்பில் போடப்பட்டதே. அது பற்றிக் கவலைப்பட்டீர்களா?
*இரண்டாம் முறை ஐ.மு., கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றதும், தினமும், 22 கி.மீ., தொலைவுக்கு தேசியச் சாலைகள் போடப்படும் என்றீர்களே. உங்களால் முடிந்தது தினமும், 1.5 கி.மீ., தானே. விரைந்து செயல்பட முடியாமல் போனதற்கு, அரசே காரணம் என்று, அந்தத்துறை அதிகாரிகள் சொல்கிறார்களே, ஏன் நீங்கள் விரைந்து செயல்படவில்லை?
*முந்திய ஆட்சியில், (2000-2004) உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் ஆறு கோடி. உங்கள் ஆட்சிக் காலத்தில், அது ஏன் ஒன்றரைக் கோடியாக சுருங்கியது? வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள், உங்கள் கண்களில் படவில்லையா?
*விளைச்சல் இருந்தும், விவசாயத் துறை நலிந்தது. சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனரே, ஏன்?


*மூன்று முறை நிதி அமைச்சராக இருந்தீர்களே... ஒவ்வொரு முறையும் முன்பைவிட மோசம் என்ற அளவுக்கு, நிதி நிலைமை பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு, நீங்களே காரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? நீங்கள் இல்லையென்றால் வேறு யார்? கடைசியாக யஷ்வந்த் சின்கா கேட்டது, அதாவது 18வது கேள்வி, ஒரு கேள்வி அல்ல, அது கிண்டல் கலந்த நிஜம்.
*நீங்கள் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்பது தெரிந்ததுமே, பங்குச் சந்தை உற்சாகம் பெற்றது. பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. நீங்கள் பொறுப்பில் இல்லாவிட்டால், நிலைமை சீராகும் என்றால், நீங்கள் பொறுப்பில் இருந்து என்ன பயன்?இப்படிப் பொட்டில் அறைந்தால்போல் கேட்டிருக்கிறார், யஷ்வந்த் சின்கா.


ப.சிதம்பரம் பதவியில் இருந்தால் தளர்ச்சி; அவர் இல்லாவிட்டால் வளர்ச்சி என்ற வினோத நிலையை, நாடு எதிர்க்கொள்ளும்போது, அவர் எப்படி பதில் சொல்வார்? ஆனால், தேசம் அவருக்கு பதில் சொல்லும்.

E-mail: hindunatarajan@hotmail.com

ஆர்.நடராஜன்கட்டுரையாளர், அமெரிக்கத் துாதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்