Announcement

Collapse
No announcement yet.

கைப்பற்றப்பட வேண்டும் கருப்பு பணம்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • கைப்பற்றப்பட வேண்டும் கருப்பு பணம்

  இந்தியாவை சூறையாட வேண்டும் என்ற வெறி, பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. ஐரோப்பி யர்களின் வருகைக்கு முன்பே, அரேபிய மன்னர்கள் இந்தியாவை கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினர்.கி.பி., 711ல் அரேபிய காலிபா வாலித் ஆணைப்படி, முகமது பின் காசிம், சிந்து மீது படையெடுத்தான். இதில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்து விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. எனினும், இந்தியர்களின் கணிதம், வானவியல், மருத்துவம் போன்ற கலைகள் அரேபியாவில் பரவி, அங்கிருந்து ஐரோப்பாவிற்கு பரவியதால், ஐரோப்பியர்களையும், இந்திய மோகம் பற்றிக் கொண்டது.

  கி.பி., 1000 முதல் 1027 வரை, இந்தியாவின் மீது, 17 முறை படையெடுத்து, ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான பொக்கிஷங்களை கொண்டு சென்றான் முகமது கஜினி என்னும், கஜினி முகம்மது. 1025ல் 'சோமநாதர்' கோவில் சூறையாடப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டது. கோடிக்கணக்கான கோவில் செல்வங்கள் அரேபியாவிற்கு சென்றன. கஜினி முகம்மதுவிடம் பண வெறிதான் அதிகமிருந்தது.கி.பி., 1857 முதல் 1947 வரை, இந்தியாவின் மீது நேரடி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் கொள்ளை, ௧௭ம் நுாற்றாண்டில் வியாபாரம் துவங்கிய போதே ஆரம்பித்துவிட்டது.கி.பி., 1498ல், இந்தியாவிற்கு கடல்வழி கண்டறிந்த போர்ச்சுக்கீசியர், வாஸ்கோடகாமாவும் இந்தியாவை கொள்ளையடிப்பதில் வல்லுனராகத்தான் இருந்தார். சுதந்திரம் என்னும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அன்னியரை விரட்டிய உள்ளூர் தலைவர்கள், நாட்டில் உள்ள மீதியை சூறையாட துவங்கினர்.

  கடந்த 1960ல் இருந்தே வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக, 'சுவிஸ்' நாட்டு வங்கியில், இந்தியாவின் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
  'கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவோம்' என்று, ௨௦௦௯ல் வாக்குறுதி அளித்த பா.ஜ., கட்சி, ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.எனவே, 2009ல் முன்னாள் சட்ட அமைச்சரும், பா.ஜ., முக்கிய பிரமுகரும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி, உச்ச நீதிமன்றத்தில், 'வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வரவேண்டும்' என்று, வழக்குத் தொடுத்தார்.இந்தியாவின் எல்லை நாடுகள் வழியாக, 'ஹவாலா' என்னும் முறையில், கருப்பு பணம் செல்கிறது. குறிப்பாக நேபாளம், வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வழியாக கருப்பு பணம் செல்கிறது.

  நம் ஏற்றுமதியிலும், இறக்குமதியிலும் ஆண்டுக்கு, 1 சதவீதம் கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிக்கு செல்கிறது என, வைத்து கொண்டால் கூட, 100 லட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாடு சென்று உள்ளது. 'ஒன்றுக்கு பின், 14 பூஜ்யம் வரவேண்டும். தலை சுற்றுகின்றதா? இதில் செலவு செய்தது போக தற்போது நிச்சயம், 50௦ லட்சம் கோடி பணமாவது, சுவிஸ் வங்கிகளில் இருக்க வேண்டும்.கடந்த 2009ல், ராம்ஜெத் மலானித் தொடுத்த வழக்கில், 'சிறப்பு புலனாய்வுக்குழுவை, மத்திய அரசு அமைத்து, கருப்பு பணத்தை வெளியே கொண்டுவர வேண்டும்' என்று, 2011, ஜூலை 4ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 'சிறப்பு புலனாய்வுத் துறை தலைவராக, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி இருக்க வேண்டும் என்று கூறியதோடு, ஜெர்மனியின் எல்.ஜி.டி., வங்கி தந்த, 26 பேரின் பெயரையும் வெளியிட வேண்டும்' என்று கூறியது.

  ஆனால், சோனியாவின் வழிக்காட்டுதலில் இயங்கிய, மன்மோகன் சிங் தலைமையிலான காங்., அரசு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விஷயத்திலும் மவுனம் சாதித்தது. கருப்பு ஆடுகளை கண்டறியாமல், காங்., அரசு ஏன் காலம் கடத்தியது என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இதில், இன்னொரு அதிர்ச்சியான செய்தி, 2011ல், கருப்பு பண பட்டியலை தர, சுவிஸ் வங்கி முன் வந்தது. ஆனால், அதைப்பெறவும், மன்மோகன் அரசு அக்கறைக் காட்டவில்லை.கடந்த 2011, ஜூலை 4, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்காமல், உச்ச நீதிமன்ற உத்தரவை திருத்தம் செய்ய வேண்டி, மன்மோகன் அரசு, உச்ச நீதிமன்றத்திடமே மனு செய்து, கால தாமதம் செய்தது. 2014, மே 1ல், அந்த மனுவையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 2014, மே 4ம் தேதி, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, எம்.பி.ஷா தலைமையில், மூன்று வாரத்திற்குள், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. கடைசி வரை, உச்ச நீதிமன்ற உத்தரவை, காலம் கடத்திய காங்., இந்த தேர்தலில் காணாமல் போனது.

  தன் முதல் வேலையாக, சிறப்பு புலனாய்வு குழுவை, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கும் வாய்ப்பு, மோடிக்கு கிடைத்து விட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில், பல்துறையை சேர்ந்த நபர்கள் உள்ளனர்.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர், தலைவர் மற்றும் துணைத் தலைவராக இருப்பர் மற்றும் மத்திய வங்கியில் துணை கவர்னர், நேரடி வரி வருவாய் ஆணையத்தின் தலைவர், ஐ.பி.,யின் டி.ஜி.பி., அமலாக்கத் துறை இயக்குனர், மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர், வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனர், நிதித் துறை புலனாய்வுத் துறை தலைவர், 'ரா' எனப்படும் உளவுப்பிரிவின் தலைவர் என, பலர் உறுப்பினர்களாக இருப்பர். எனவே, இது மிக திறமையுள்ள குழுவாக இருக்கும் என, கருதப்படுகிறது.

  கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கியில் வைத்திருப்போருக்கு, வட்டி கிடையாது. கருப்பு பணத்தை ரகசிய பெட்டகத்தில் வைப்பதாலும், பராமரிப்பு செலவிற்கும், ஆண்டுதோறும் இவர்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி இவர்கள் செலுத்தும் கட்டணத்தில் தான், சுவிஸ் வங்கிகள் பல இயங்கு கின்றன.
  உலகில், ஏழை நாடு என, பெயர் பெற்ற இந்தியா, ஊழலிலும் கருப்பு பணத்திலும் முதலிடம் பெற்று உள்ளது. இந்த கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் எல்லாம், சுப்பனும், குப்பனும் இல்லை. ஒரு நாட்டின் ஆட்சியையே மாற்றிவிடும், பெரிய நீலத் திமிங்கலம்.அப்படிப்பட்ட சில திமிங்கலங்கள் தான், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை அள்ளித் தருகின்றன. எல்லா அரசியல் கட்சிகளும், தங்கள் வருவாயை காட்டினாலே, பல கோடி கருப்பு பணமும், அரசியல் கட்சியையும் அதன் தலைவரையும் வழிநடத்தும் நிறுவனங்கள் பெயர் தெரிந்துவிடும். ஆனால், சொந்த காசில் சூனியம் வைக்க, இவர்கள் என்ன முட்டாளா?

  நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் கருப்பு பண முதலைகள் பட்டியலை வெளியிட்ட, 'விக்கி லீக்ஸ்' இணைய தளத்தின் தகவல்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.'என் தலைமையில் ஆட்சி அமைந்தால், கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவோம். அதை ஏழை, எளிய மக்களின் நலனுக்காக செலவு செய்வோம்...' என்று, நரேந்திர மோடி, தன் தேர்தல் பிரசாரத்தில் கூறி இருந்தார். கருப்பு பணம் மீட்கப்பட்டு, அதில் குறைந்த அளவு பணம், இந்திய நதிநீர் இணைப்புக்கு செலவிடப்பட்டாலே போதும், மக்கள் மகிழ்வர்.சுவிஸ் வங்கி உட்பட, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை, நாம் எளிதில் பெற முடியாது எனினும், இந்த போராட்டம் சரியான பாதையில் செல்லும் முதல் அடி என்று சொல்லாம்.கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவது மட்டுமின்றி, இனியும் கருப்பு பணம் வெளிநாடு செல்லாதவாறு, கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும்.அன்று அன்னியர்கள் இந்தியாவை சூறையாடினர்; இன்று, மண்ணின் மைந்தர்கள் சூறையாடி கொண்டு இருக்கின்றனர். அதற்கு மோடி அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
  'இ-மெயில்': asussusi@gmail.com

  - எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி -
  வழக்கறிஞர்
Working...
X