Announcement

Collapse
No announcement yet.

ஒரு கைதியின் தீர்ப்பு!

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • ஒரு கைதியின் தீர்ப்பு!  தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த அந்த வித்தியாசமான நிகழ்ச்சியை, கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார் ராஜசேகர்.
  ''என்ன நிகழ்ச்சி இது... இவ்வளவு ஆர்வமா பாத்துக்கிட்டிருக்கீங்க?'' என, கேட்டபடியே அவரருகில் வந்து அமர்ந்தார், அவர் மனைவி சுபத்ரா.
  ''உண்மையிலேயே, இந்த நிகழ்ச்சி வித்தியாசமாகத்தான் இருக்கு சுபத்ரா. ஜெயிலுக்கு நேரடியா போயி, கொலைக் குற்றவாளிகளை சந்திச்சு, அவங்க ஏன் கொலை செஞ்சாங்க, செய்த குற்றத்துக்காக இப்ப வருத்தப்படறாங்களா இல்லை இன்னமும் தாம் செஞ்சது சரிதான்னு பிடிவாதமா இருக்காங்களான்னு அவங்க வாயாலேயே சொல்ல வெச்சு எடுத்திருக்காங்க... ரியலி குட். சில நிகழ்வுகள், நெஞ்சை உலுக்குது சுபத்ரா.''
  ''அப்படியா?'' என்று கேட்டவள், தானும் சீரியசாகி, அதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
  திரையில் தோன்றிய, ஒரு கொலைக் குற்றவாளிக்கு, கிட்டத்தட்ட முப்பத்தி ஏழு, முப்பத்தியெட்டு வயசிருக்கும். மனைவியைக் கொலை செய்து, சிறையில் இருக்கும், அவன், தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்...
  ''என் பேரு திவாகர்; மூணு ஆண்டுகளுக்கு முன், என் மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக, ஆயுள் தண்டனை தீர்ப்பாகி, இங்க வந்திருக்கேன். ஆனா, இப்பவும் சொல்றேன்... என் மனைவிய நான் கொன்னது குத்தமேயில்ல! அவ செஞ்ச தப்புக்கு, நான் குடுத்த தண்டனை அது, அவ்வளவு தான்...'' ஆணித்தரமாக அடித்துப் பேசிய அவனை, இடைமறித்தாள் பேட்டிக்கண்ட பெண்.
  ''நீங்களே கொல செய்தேன்னு சொல்றீங்க... அப்புறம், எப்படி அது குற்றமில்லன்னு சொல்றீங்க?''
  ''அவ செஞ்ச காரியத்துக்கு, யாராகயிருந்தாலும் அதத்தான் செஞ்சிருப்பாங்க.''
  ''ஓ... அப்படி என்ன காரியம் செஞ்சுட்டாங்க... உங்களுக்கு துரோகம் செய்திட்டாங்களா?'' பேட்டியாளர் நாசுக்காக, விஷயங்களை கறக்க ஆரம்பித்தாள்.
  ''அப்படி செய்திருந்தாக் கூட, மன்னிச்சுருப்பேன். ஆனா, அவ செஞ்சது அதை விட, மகா கொடுமையான காரியம்.''
  'டிவி' பெண், விழிகளை விரித்து அவனைப் பார்க்க, ''நானும், என் மனைவி ஜோதியும் காதலிச்சு, ரெண்டு வீட்டு எதிர்ப்பயும் மீறிதான் கல்யாணம் செய்துக்கிட்டோம். கல்யாணமான பிறகுதான் தெரிஞ்சுது, அவ பணத்தாசை பிடிச்ச பேய்ன்னு. எப்பப் பாத்தாலும் பணம் பணம்ன்னு, என்னைப் போட்டு புடுங்குவா. அவளுக்கு ஆடம்பரமா செலவழிச்சு, ஜாலியா வாழணும்; அதுக்கு நிறைய பணம் வேணும்.''
  ''ம்ம்ம்... நீங்க பக்குவமா எடுத்துச் சொல்லியிருக்கலாமே,'' என்று பேட்டியாளர், அவன் வாயைக் கிளறும் விதமாய் கேட்டாள்.
  ''நான் எவ்வளவோ அறிவுரைகளைச் சொல்லி திருத்தப் பாத்தேன். இதனாலயே என்ன வெறுக்க ஆரம்பிச்சா. எங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை; ஒரு வயசு வரைக்கும், நல்ல ஆரோக்கியமா புஷ்டியா இருந்த குழந்தை, திடீர்ன்னு ரொம்ப நோஞ்சானா ஆயிடுச்சு. நானும், என்னால முடிஞ்ச அளவுக்கு, ஹார்லிக்ஸ், காம்ப்ளான், ஊட்டச்சத்து டானிக்குன்னு வாங்கிக் குவிச்சேன். ம்ஹூம் ஒண்ணும் பிரயோஜனமில்ல. என் குழந்தை, நாளுக்கு நாள் எலும்பும் தோலுமாகி, பஞ்சத்துல அடிப்பட்ட குழந்தையாட்டம் ஆயிடுச்சு. நான் கவலைல வெந்து துடிச்சேன். ஆனா, என் மனைவி அதப் பத்தி கொஞ்சம் கூடக் கவலைப்பட்ட மாதிரியே தெரியல. ஒருநாள்...'' எனச் சொல்லி, நிறுத்தினான்.
  ''ஒரு நாள்... என்னாச்சு மிஸ்டர் திவாகர்?''
  ''காலைல வேலைக்குப் போயிருந்த நான், பவர்கட் காரணமா வேலையில்லாமத் திரும்பி வீட்டுக்கு வந்த போது, என் மனைவி, யாரோ ஒரு பொம்பளையோட பேசிட்டிருந்தா. அந்த பொம்பளையோட தோற்றமும், முக பாவமும் அவ சரியில்லன்னு என் உள்மனசு எச்சரிக்கவே, நான் ஒளிஞ்சு நின்னு அவங்க பேசறதக் கேட்டேன். அப்ப என் மளைவி அந்த பொம்பளகிட்ட, 'த பாரு... அஞ்சு மணி வரைதான் டைம்... அதுக்குள்ளார குழந்தைய கொண்டாந்து குடுத்திடணும். ஏன்னா அஞ்சரைக்கு, என் புருஷன் வந்துடுவான்; அப்பறம் சிக்கலாயிடும்...' என்றாள்.
  ''அதற்கு அந்த பொம்பள, 'நீ கவலைப்படாதே... நாலே முக்காலுக்கே, குழந்தைய கொண்டாந்து குடுத்துடறேன்...' என்று சொல்லி, என் மனைவியிடம், சில ரூபாய் நோட்டுகளை தர, அவள் அதை வாங்கிக் கொண்டு, குழந்தையை அப்பெண்ணிடம் தந்தாள்.
  ''ஒளிந்திருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த, எனக்கு எதுவுமே புரியல. அந்த பொம்பள, என் குழந்தைய எடுத்துச் செல்வதையே, குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்தேன்.
  ''ஏதோ ஒரு உள் உணர்வு, என்னை உந்த, அந்தப் பொம்பளய பின் தொடர்ந்து போனேன். அவ மக்கள் கூட்டம் அதிகமுள்ள, ஒரு நாற்சந்தியில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தவள், சாலையோர பிளாட்பாரத்திற்கு சென்று அமர்ந்தாள். பின், தன் கையிலிருந்த குழந்தைய, தனக்கு எதிரே தரையில் கிடத்தினாள். அப்போது, என் குழந்தை, வீறிட்டு அழ ஆரம்பித்ததில், எனக்கு இதயமே நின்று விடுவது போலானது. அதை விட அடுத்து அவ செஞ்ச காரியத்தில, என் மொத்த உடம்புமே ஆடிப் போயிடுச்சு. 'அம்மா... தாயி... கொழந்த பசியால துடிக்குது தாயி... அதுக்கு பால் வாங்க, பிச்சை போடுங்க தாயி...' என, அவ என் குழந்தையக் காட்டி, போவோர் வருவோரிடமெல்லாம் பிச்சையெடுக்க ஆரம்பித்தாள்.''
  ''கடவுளே இதென்ன கொடுமை! இப்படிக் கூடவா நடக்கும்?'' பேட்டியாளர் பெண்ணே அங்கலாய்த்தாள்.
  ''அதைத் தாங்க மாட்டாத நான், நேரே அந்தப் பெண்ணிடம் போய் சண்டை போட்டேன். என் குழந்தையைக் குடுடின்னு கத்தினேன். அதுக்கு, அவ, 'ஒரு நாள் கூலியா... நூறு ரூபாயை உன் பொண்டாட்டிகிட்ட குடுத்துட்டு வந்திருக்கேன். அதைத் குடுத்திட்டு, எடுத்திட்டு போ'ன்னா... நூறு ரூபாயைத் தூக்கி அவ மூஞ்சில விட்டெறிஞ்சி, குழந்தையை பிடுங்கிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து, என் பொண்டாட்டி கிட்டக் கேட்டா, பதிலே பேசாம அலட்சியமா எங்கோ பாக்கறா. அப்ப வாசல்ல யாரோ கூப்புடுற சத்தம் கேட்க, போய்ப் பார்த்தேன்.''
  ''மறுபடியும் அந்தப் பொம்பள வந்தாளா?'' என்று கேட்டாள் பேட்டியாளர் பெண்.
  ''இல்ல; வந்தது பக்கத்துத் தெரு, மளிகைகடைக்காரன். என்ன வேணும்ன்னு கேட்டேன்.... 'அம்மா ஹார்லிக்ஸ், டானிக்கெல்லாம் வெலைக்கு குடுப்பாங்க... அதான் ஏதாவது இருக்கான்னு கேட்டுட்டு, போக வந்தேன்...'' என்றான்.
  ''அப்படின்னா?''
  ''என்னம்மா... இது கூடவா புரியல... குழந்தை ரொம்ப நோஞ்சானா, ஒல்லியா இருந்தா தான், நிறைய பிச்சை விழுகும்கறதுக்காக, நான், என் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கற ஹார்லிக்ஸ், ஊட்டச்சத்து டானிக்கையெல்லாம், குழந்தைக்கு குடுக்காம, அதுகளையெல்லாம் கடைல வித்து, காசாக்கியிருக்கா.''
  ''அடப்பாவமே!''
  ''அதுலதான், என் கோபம் எல்லை மீறி, ஒரே ஒரு அறைதான் அறைஞ்சேன்... அந்தப் பேயறைல, அவ எகிறிப் போய் விழுந்ததுல, மேசை முனை பொட்டுல பட்டு, பொட்டுன்னு போய் சேர்ந்துட்டா. இப்ப சொல்லுங்க மேடம்... நான் செஞ்சது குத்தமா?''
  'நான் செய்தது குத்தமா?'
  ஆடியன்சைப் பார்த்து, அந்த திவாகர் கேட்பது போல், 'குளோஸ் அப் ஷாட்' வர, காட்சி மாறியது.
  நிகழ்ச்சி அமைப்பாளர், திரையில் தோன்றி. ''இது போன்ற பல சோக கதைகள், நம்ப முடியாத நிகழ்வுகள், ஒவ்வொரு கைதியின் பின்னாலும், இருப்பதுதான் நிதர்சனம். அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்பது, ஒரே கேள்வி, 'நாங்க செஞ்சது தப்பா...' என்பதுதான். சட்டம் தப்பு என்று தீர்ப்புச் சொல்லி, தண்டனை குடுத்திருந்தாலும், மனசாட்சி ஏனோ அதை, ஏற்க மறுக்கிறது. மீண்டும் அடுத்த வாரம், இதே போன்று, வேறொரு கைதியின் கதையைக் கேட்கலாம்...''
  தொலைக்காட்சியை நிறுத்திய ராஜசேகர், ''சுபத்ரா, நாளைக்கு அந்த டைரக்டர் அக்ரிமென்ட் கொண்டு வருவார். அவர்கிட்ட, 'எங்க மகள நடிக்க வைக்க, எங்களுக்கு விருப்பமில்ல'ன்னு சொல்லி, திருப்பியனுப்பிடப் போறேன்,'' என்றார்.
  ''அய்யய்யோ... என்னங்க திடீர்ன்னு இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடுறீங்க? நம்ம மகள் நீத்துவ, பெரிய சினிமா ஸ்டார் ஆக்கணும்கறது, நம்மோட பல வருஷத்துக் கனவுங்க. ஏதோ இப்பத்தான், ஒரு டைரக்டர் அவளை ஓ.கே., செய்திருக்கிறார். அதுக்காக கடந்த மூணு மாசமா, அவளுக்கு எப்படியெல்லாம், நான் பயிற்சி குடுத்திருக்கேன் தெரியுமா?''
  ''எப்படி? உடம்பு குண்டாயிடும்ன்னு, ஒரே ஒரு நேரம் மட்டும், பேருக்கு இத்துணூண்டு சாப்பாடு குடுக்கறதும், டான்ஸ் பிராக்டீஸ்ங்கற பேர்ல, அவளை வெறும் வயித்தோட ஆட வெச்சுப் பாக்கறதுக்கும், உடம்பை ஸ்லிம்மா மெயின்டெய்ன் செய்யணும்கறதுக்காக, அவ நாக்கை அடக்க வெச்சு, பட்டினி போட்டு வதைக்கறதுக்குப் பேரு பயிற்சியா?'' ராஜசேகர் சீரியசாகக் கேட்க...
  ''அது வந்து...''
  ''ஏண்டி... இந்த வயசுதாண்டி, அவ சாப்பிட, திங்கறதுக்கு ஏங்கற வயசு. இப்பப் போய், அவளை, 'டயட்'ல இருக்கச் சொல்றியே... வயிறு சுண்டிப் போயிடும் பாவம்டி அவ!
  ''பாத்தியல்ல, இப்ப! 'டிவி'ல... பணத்துக்காக, தன் குழந்தைய, நோஞ்சானாக்கி பிச்சை எடுக்க அனுப்பி வெச்ச அந்தப் பொம்பளைக்கும், நமக்கும் என்னடி வித்தியாசம்? அந்தக் கைதியோட தீர்ப்புப்படி, நாம் ரெண்டு பேருமே உயிரோட இருக்கவே, அருகதை இல்லாதவங்க,''என்றார்.
  ''அதனால?''
  ''அதனாலதான் சொல்றேன், நாளைக்கு அக்ரிமென்ட்டோட வர்ற டைரக்டரை திருப்பி அனுப்பப் போறேன். இனி மேல், நம்ம நீத்து, ஆசை தீர சாப்பிடணும், ஆசை தீர வெளையாடணும்,''என்று ராஜசேகர் சந்தோஷமாய்ச் சொல்ல, அதை ஏற்றுக் கொள்ளும் விதமாய், தலையசைத்தாள் சுபத்ரா.

  முகில் தினகரன்

  Sourceinamalar
Working...
X