Announcement

Collapse
No announcement yet.

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்

  தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும், மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானம் என்று கூறப்படுவது அன்னதானமே ஆகும். எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
  சமுதாயத்தில் மற்றவர்கள் செய்யத் தயங்கும் பணிகளை செய்யும் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், செருப்பு தைப்பவர்கள், நோயாளிகளுக்கு சேவை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்கள், உழைத்து உண்ண முடியாத வயது முதிர்ந்தோர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பிணம் எரிக்கும் வெட்டியான்கள், நமக்கு சோறிடும் விவசாயிகள், இவர்களுக்கு செய்யப்படும் அன்னதானம் சிகரம் போன்றது. சராசரி அன்னதானத்தைவிட பலநூறு மடங்கு பலன் தரவல்லது.
  சமீபத்தில் நடைபெற்ற நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் இது. சென்ற வாரம் ஒரு நாள் நம் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி, சாக்கடை அடைத்து சாலையெங்கும் கழிவு நீர் பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அதை சுத்தம் செய்ய ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 12 பேர் வந்து சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். (கவனிக்க ஒப்பந்த தொழிலாளர்கள்!)


  நாம் காலை சுமார் 11.30 அளவில் வழக்கமான டீ பிரேக்கிற்க்காக வெளியே வந்த நேரம் அது. தொழிலாளர்கள் சாக்கடைக்குள் இறங்கி அடைப்புக்களை பக்கெட்டுக்களில் அள்ளி அள்ளி வெளியே கொட்டிக்கொண்டிருந்தனர். அந்த பகுதியே துர்நாற்றத்தால் திணறியது. அந்த வழியே சென்றவர்கள் அனைவரும் மூக்கை பிடித்தபடி சென்றுகொண்டிருந்தனர். அந்த வழி சென்றவர்களுக்கே அப்படி என்றால் இறங்கி கழிவுகளை அள்ளி, சுத்தம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?
  சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு, நாலு நாளு லீவு போட்டா நாறிப் போகும் ஊரு என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
  அந்த தெரு முழுக்க இரண்டு இரண்டு பேராக பிரிந்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். நம் எதிரே வேலை செய்து கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் அருகே சென்று, டீ வாங்கித் தந்தா சாப்பிடுறீங்களா எல்லாரும்? என்றோம்.
  தாராளமா சார்! என்றார்கள்.
  மொத்தம் 13 பேர் இருப்பதாக தெரிந்தது.
  டீக்கடையில பணம் கொடுத்துடுறேன் போய் சாப்பிட்டுக்கோங்க என்றோம்.
  அப்புறம் மதிய சாப்பாடு எப்படி? மெல்ல விசாரித்தோம்.
  இங்கே பக்கத்துல எங்கேயாச்சும் போய் தான் சாப்பிடனும் என்றனர்.
  பக்கத்து தெருவுல ஒரு கடை இருக்கு. நான் போய் உங்க 13 பேர் சாப்பாட்டுக்கும் இப்போ பணம் கொடுத்துட்டு போய்டுறேன். நீங்க மதியம் அங்கே போய் சாப்பிட்டுக்கோங்க என்று பக்கத்து தெருவில் உள்ள ஒரு சைவ உணவகத்தை குறிப்பிட்டோம்.
  முகம் நிறைய மகிழ்ச்சியுடன் சரி! என்றார்கள்.
  பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம், ஏய் நீ போய் அவங்க எல்லார்கிட்டேயும் சார் சாப்பாடு வாங்கி தர்றாராம்னு சொல்லிடு என்று கூறி மற்ற தொழிலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கச் சொன்னார்.
  அவரிடம் விடைபெற்று, அருகே இருந்த ஏ.டி.எம். சென்று நம் தளத்தின் கணக்கில் இருந்து பணம் வித்ட்ரா செய்து அந்த உணவகத்தில் விபரத்தை கூறி பணம் கட்டினோம். அவங்க இங்கயே சாப்பிடுறதா இருந்தா சாப்பிடட்டும். பார்ஸல் கேட்டாலும் கொடுத்துடுங்க. எக்ஸ்ட்ரா ஏதாவது தரவேண்டியிருந்தா நான் தந்துடுறேன் என்று கூறிவிட்டு வந்தோம்.
  மதியம் உணவு இடைவேளையின் போது வெளியே வந்தோம் அனைவரும் ஒரு மரத்தடியில் நிழலில் அமர்ந்து பார்சலை பிரித்து சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். நாம் பேசிய நபர் நம்மை பார்த்ததும் கைகூப்பியபடி எழுந்து நின்றார்.
  நாம் பதறிப்போய் உட்காருங்க.. உட்காருங்க சாப்பிட்டீங்களா?
  இதோ இப்போ தான் சார் வாங்கிட்டு வந்தோம். இதோ சாப்பிடப்போறோம்! என்றார்.
  அவர் கண்களில் தெரிந்த அந்த நெகிழ்ச்சியில் அந்த ஆண்டவனையே நாம் பார்த்ததை சொல்லவும் வேண்டுமா என்ன.
  கருவறையில் மட்டுமே நீங்கள் கடவுளை பார்க்கும் வழக்கமுடையவர் என்றால் எந்தக் காலத்திலும் உங்களால் இறைவனை பார்க்க முடியாது.
  மேற்கூறிய சம்பவத்தை நாம் இங்கு பகிர்ந்துகொள்வதற்கு காரணம், இதை உங்கள் பிரதிநிதியாக செய்ததால் தான். மற்றொன்று, அடுத்த முறை துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்வதை பார்த்தால், மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லாமல் அவர்கள் மனமும் வயிறும் குளிரும்படி ஏதேனும் ஒரு வகையில் நீங்கள் உதவவேண்டும் என்பதற்காகத் தான். பரபரப்பான இந்த உலகில், புண்ணியம் சேர்ப்பதை தவிர மற்ற அனைத்திற்கும் மனிதர்களுக்கு நேரம் இருக்கிறது. எனவே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் செலவழிப்பது சில நிமிடங்களாகவோ சில நூறு ரூபாய்களாகவோ இருக்கலாம். ஆனால் அதன் மூலம் நீங்கள் பெறும் புண்ணியம் மலையளவு என்றால் மிகையாகாது.


  அண்மையில் நமது குழுவினருடன் வடலூர் சென்றபோது சிவப் பிரகாச ஸ்வாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெற்ற அன்னதானம்!
  இன்றும். நாள், கிழமை, விஷேடங்களின் போது நம் தளம் சார்பாக தகுதி உடையோருக்கு அன்னதானம் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆடிகிருத்திகைக்கு மிக மிக மிக தகுதி உடையவர்களுக்கு அன்னதானம் செய்யும் வாய்ப்பை நம் அனைவருக்கும் இறைவன் வழங்கினான். (ஆடிகிருத்திகை தரிசனம் பற்றிய பதிவில் அது குறித்த விரிவான தகவல் இடம்பெறும்!)
  ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
  மாற்றுவார் ஆற்றலின் பின். (குறள் 225)
  பொருள் : பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
  மஹா பெரியவா அருள்வாக்கு : -
  * அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபகரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேச்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.
  * சொந்தக் குடும்பத்துக்கு மட்டும் சேர்க்காமல் வெளியார் இருவர் வயிறும் குளிரப் பண்ணுங்கள்.
  * பசியோடு இருப்பவர்களுக்கு அன்னமிட்டு வந்தால், பஞ்சமே வராது.
  * தானங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது அன்னதானம்.
  * அன்னதானத்தில் தான் ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.
  * நீங்கள் சாப்பிடுவதைவிட, ஓர் ஏழைக்குச் சாப்பாடு போட்டால் அதில் உங்களுக்கு இன்னும் அதிகமாக இன்பம் உண்டாகும்.
  - See more at: http://rightmantra.com/?p=12729#sthash.C7oXA7z9.dpuf
Working...
X