6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதிசயம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள, ஆண்டிப்பட்டி மற்றும் அமராவதி மலைப்பகுதிகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, 6 ஆயிரம் ஆண்டு பழமை மிக்க சவுக்கை எனப்படும் சூரிய நகர்வு பாதையை கண்டறியும் அமைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சரிவான மலைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த சவுக்கை, இரு பெரும் உருண்டை பாறைகளை அருகருகே அடுக்கி அதன் மேல் பெரும் பலகைப் பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர். தொலைவில் இருந்து பார்க்கும்போது, ஆய்த எழுத்து வடிவத்தில் ராட்சத சுமைதாங்கியைப் போல இது காட்சி அளிக்கிறது.
இதன் அமைப்பு, வடகிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அமைப்பு ஆளரவம் இல்லாத பகுதியில் ஏன் அமைக்கப்பட்டது என்பதற்கான காரணம் புரியவில்லை. சூரியனுடைய நகர்வுப் பாதையை கணிக்க பண்டைய இடைச்சங்க காலத்தில் தமிழர்கள் இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆடிமாதம் 1ம் தேதி தட்சணாயனத் தொடக்கத்தில் சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் இந்த சவுக்கையில் உள்ள ஓட்டை வழியாக தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுகிறது. பின்னர் தைமாதம் 1ம் தேதி உத்தராயனத் தொடக்கத்தில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவுகிறது கண்கூடாகத் தெரிகிறது. இந்த 2 மாதங்களும் தமிழர்களின் முக்கிய மாதங்களாகும். சூரியனின் நகர்வு பாடையை கொண்டு ஆடி 1 தட்சணாயனத் தொடக்கத்தை ஔஉரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்வதாகவும், தை 1 உத்தராயணத் தொடக்கத்தை சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்து செல்வதாகவும் கணித்து ஜோதிட நூல்களில் கூறியுள்லனர்.
6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இடைச்சங்க காலத்தை சேர்ந்த தமிழ் மக்கள் சூரிய நகர்வு பாதையை கண்டறிய ஏற்படுத்தியுள்ள இந்த அமைப்பு மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது. பண்டைத் தமிழர்கள் வான் மற்றும் விண்ணியலில் பெற்றிருந்த அறிவு, பெருமை கொள்ள வைப்பதாகும் என்று இதை ஆய்வு செய்த, மத்தியபிரதேசத்தை சேர்ந்த தொல்லியலளர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.
-- சண்டே ஸ்பெஷல்,
-- தினமலர். 28.7.2013.