சங்கநாத ஒலியின் முக்கியத்துவம்

ஒவ்வொரு தெய்வீகத் தன்மை வாய்ந்த இறை சக்திகளும், ஒவ்வொரு பெயர் கொண்ட திருச்சங்கைத் தமது கரங்களில் ஏந்தியிருக்கிறார்கள். அது எதிரியை வெற்றி கொள்வதற்கான ஒரு உபாய முறையாகும். முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு முன்பு, அதற்கான அறிகுறியாக சங்கை முழங்க விடும் பழக்கம் இருந்துள்ளது.

அந்த சங்கில் இருந்து வெளிப்படும் நாதமானது, எதிரிகளின் மனதில் மிக எளிதில் பயத்தையும், மனக் கலக்கத்தையும் உண்டாக்கக் கூடியதாக இருந்தது என்பது அதனை பயன்படுத்தியதற்கான முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் தமது கரங்களில் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஏந்தியிருந்தார்.

அது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரிச் சங்காகும். ஆயிரம் சிப்பிகளுக்கிடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதேபோல் ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு மத்தியில் ஒரு வலம்புரிச் சங்கு பிறப்பெடுக்கும். இவற்றைப் போலவே ஆயிரம் வலம்புரிச் சங்குகளுக்கு மத்தியில் ஒரு சலஞ்சலம் என்ற அபூர்வ வகையைச் சேர்ந்த சங்கு உதயமாகும்.

இந்த சங்குகளின் பிறப்பின் உச்சகட்டமாக ஆயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு மத்தியில் ஒரே ஒரு பாஞ்சஜன்யம் என்ற சக்திமிக்க அபூர்வமான சங்கு அவதரிக்கும். அப்படிப்பட்ட படிநிலைகளைக் கடந்த, உச்சகட்டத் தோற்றமான பாஞ்சஜன்யம் என்ற சங்குதான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கரங்களில் தவழும் பாக்கியத்தைப் பெற்றது.

இந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கில் இருந்து எழக்கூடிய ஓம்கார நாதமானது, அட்சரம் ஒரு துளியும் பிசகாத நாத பிரம்மமானது; அதன் ஒலியைக் கேட்கும் அனைவரையும் தமது மூல இயல்பான ஆத்மநிலையுடன் ஒரு கணம் ஒன்ற வைக்கும் விதமாக அவ்வொலி இருந்தது என்பதை மகான்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

சங்கின் நாதம் என்ன காரணத்திற்காக ஒலிக்கப்பட்டதோ, அக்காரணம் செயல் வடிவம் பெறத் தடையாய் உள்ள, அனைத்து இடையூறுகளையும் தமது சப்த ரூபத்தால் விலக்கிவிடும் வலிமை பெற்றதாகும். அதன்பொருட்டே ஒரு முக்கியமான விஷயத்தின் ஆரம்பத்திலும், மத்தியிலும், முடிவிலும் சங்க நாதம் ஒலிக்கப்படுகிறது.

புராணங்களில் வலம்புரிச் சங்கு

அமிர்தம் வேண்டி தேவ- அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக் கொண்டார் என்கின்றன புராணங்கள். ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், குருதட்சணையாக என்ன வேண்டும்? எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு பாஞ்ச ஜன்யம் என்று பெயர். கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தரும்- அனந்த விஜயம்; அர்ஜூனன்-தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்-சுகோஷம்; சகாதேவன் - மணிபுஷ்பகம். கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகம சாஸ்திரங்கள். திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.

சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமையால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை. நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைபட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பவுர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன்படாமல், விற்கவும் முடியாமல் பாழடைந்து கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும். குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜையை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும். கோயில்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும். ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.

சுடுகாட்டு சித்தன்