முன்னொரு காலத்தில் பேரரசன் ஒருவன் குறுநில மன்னன் ஒருவனின் நாட்டிற்கு வருகை தந்தான்.
பேரரசனுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு அரசர்களும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பேரரசன், ""உங்கள் நாட்டு அமைச்சன் அறிவுக் கூர்மையில் சிறந்தவன் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?'' என்று கேட்டான்.
""உண்மைதான் பேரரசே!''
""அப்படியானால் அந்த அமைச்சனை அழைத்து நம் இருவர்க்கும் குடிப்பதற்குப் பால் கொண்டு வரச் சொல்லுங்கள்.
அவன் உண்மையில் அறிவுள்ளவனா என்பதைக் கண்டுபிடித்து விடுகிறேன்,'' என்று சொன்னான் பேரரசன்.
அதன்படி அமைச்சனை அழைத்த குறுநில மன்னன், ""எங்கள் இருவருக்கும் பால் கொண்டு வா,'' என்றான்.


அமைச்சனும் அழகான தட்டில் இரண்டு கிண்ணங்களில் பால் வைத்து அங்கே கொண்டு வந்தான்.


அப்பொழுதுதான் அவனுக்கு யாரிடம் தட்டை முதலில் நீட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
"நம் அரசரிடம் முதலில் தந்தால் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகப் பேரரசன் கோபம் கொள்வான்.
மாறாகப் பேரரசனிடம் தந்தால் நம் அரசன் கோபம் கொள்வான்... என்ன செய்வது?' என்று சிந்தித்தபடி தயங்கி நின்றான்.


குறுநில மன்னனுக்கு அமைச்சனின் சிக்கல் நன்கு தெரிந்தது. "அவன் என்னதான் செய்கிறான் பார்ப்போம்' என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தான். ஆனால், அறிவுள்ள அந்த அமைச்சனோ தட்டைத் தன் அரசனிடம் நீட்டி, ""அரசே! தங்கள் விருந்தினரான பேரரசருக்கு என் கையால் பால் தருவது தகுதி ஆகாது. அதைத் தாங்களும் விரும்பமாட்டீர்கள். தங்கள் திருக்கரங்களாகலேயே தந்து விருந்தினரைப் பெருமைப் படுத்துங்கள்,'' என்றான்.


தன்னையும் விருந்தினரையும் ஒரே சமயத்தில் பெருமைப் படுத்திய அமைச்சனின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்தான் அரசன். அவனுக்குப் பல பரிசுகளைக்
கொடுத்து சிறப்பித்தான்.
அறிவுள்ளவர்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு.