Announcement

Collapse
No announcement yet.

Sowganthika flowers for Draupadi - Spiritual story

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Sowganthika flowers for Draupadi - Spiritual story

  Sowganthika flowers for Draupadi - Spiritual story
  ஐந்தாம் வேதம் J.K. SIVAN
  மஹா பாரதம்


  ஹனுமத் தர்சனம்


  ''மகரிஷி, எப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கூட அப்படியே நேரில் பார்த்தமாதிரி உங்களால் விவரிக்க முடிகிறது. எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை என்று ஜனமேஜயன் ஆனந்தமாக சொன்னபோது வைசம்பாயனர் ''மஹாராஜா, இதெல்லாம் ஈஸ்வர கிருபை. என் குருநாதர் வேத வியாசர் இதை உனக்கு சொல்ல இதை பணித்தபோது அவரது பரிபூர்ண ஆசீர்வாதம் இருந்ததால் தான் அவரது ஞானத்தில் சிறிது எனக்கு கிட்டி இருக்கிறது என்று தான் சொல்வேன். மேலே நடந்ததை சொல்கிறேன் கேள் '' என்கிறார் முனிவர்.


  ++


  ''அண்ணா, இதை என் வாழ்வில் ஒரு மகத்தான சம்பவமாக நான் கருதுகிறேன். உங்களை பற்றி எவ்வளவு கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்தித்து உங்கள் ஆசியை பெற நான் பாக்யம் செய்தவன். எனக்கு வெகுநாளாக மனதில் ஒரு ஆசை அதை நிறைவேற்றுவீர்களா'' என்று கேட்ட பீமன் ஹனுமான் பாதங்களை இருக்கரத்தாலும் பிடித்துக்கொண்டு வணங்கினான்.


  ''உனது ஆசை என்ன சொல் பீமா?


  ''நீங்கள் 100 யோசனை நீளம் கடலைத் தாண்டும் முன்பு எடுத்த விஸ்வ ரூபத்தை நான் கண்ணாரக் காணவேண்டும்''


  ''இல்லை பீமா, அதை நீ காண முடியாது. த்ரேதா யுகத்தில் நடந்தது அது. அப்போதைய உருவங்கள் இப்போது மாறிவிட்டன. அளவில் குறைந்து விட்டன. யுகத்துக்கு யுகம் மாறுதல் அநேகம். பழங்கதை வேண்டாம் உனக்கு. சந்தோஷமாக திரும்பு. உனக்கு சர்வ மங்களமும் உண்டாகுக.''


  ''மன்னிக்கவேண்டும் அண்ணா. உங்கள் பழைய உருவத்தை நான் ஒரு கணமாவது பார்த்தே ஆக வேண்டும். பார்க்காமல் இங்கிருந்து நகர மாட்டேன் என்னை க்ஷமிக்கவேண்டும். ஆஞ்சநேய ப்ரபு, கண்குளிர ஒரு முறை உங்களை அப்படி காண அடக்கமுடியாத ஆவல் எனக்கு .''


  ''சரி, நீ பிடிவாதக்காரன் பீமா இப்போது என்னைப் பார்'' என்றார் சிரித்துக் கொண்டே ஹனுமான். பீமன் இரு விழிகள் பிதுங்க ஆ வென்று வாய் பிளந்து எதிரே பார்த்தான்.


  ஆகாசத்துக்கும் பூமிக்குமாக சிவந்த தாமிர நிறம், சிவந்த கண்கள், வெண்ணிற பற்களைக் கடித்துக்கொண்டு விந்திய பர்வதம் எதிரே நின்றது போல் ஹனுமான் இடுப்பில் கைகளைத் தாங்கி நின்றார் .ஒரு கணம் நேரம் தான் ஆனால் பல யுகங்களில் தொடர்ந்து பார்த்து ஆனந்தித்து கண்ட ஒரு அனுபவமாக பீமனுக்கு அது மனதில் பதிந்தது. அவனை அறியாமல் அவன் கரங்கள் சிரத்தின் மேல் குவிந்தது. மண்டியிட்டு ஹனுமான் பாதங்களில் விழுந்தான். கண்களில் ஆனந்தக் கண்ணீர்.


  ''பீமா, இது ஒரு அளவு தான் இருந்தபோதிலும், இந்த அளவு போதும் உனக்கு. என்னால் நினைத்த அளவுக்கு உயரவும், வளரவும் முடியும்''


  ''ஆகா, அற்புதம் அதிசயம், என்ன புண்யம் எனக்கு. போதும், போதும், அண்ணா, என்னால் இதற்கு மேல் பார்க்க முடியவில்லை, அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், எனக்கு விதிர் விதிர்க்கிறது தங்கள் சக்தி ஸ்வரூபத்தை காண முடியவில்லை. கண்கள் இருள்கிறது. தலை சுற்றுகிறது.'' என்கிறான் பதினாயிரம் யானை பலம் கொண்ட பீமசேனன்.


  ''சரி பீமா, இந்த வழியே நேராகப் போ, சௌகந்திகா புஷ்ப மரம் அங்கே தான் குபேரனின் தோட்டத்தில் இருக்கிறது. அதை யக்ஷர்களும் ராக்ஷசர்களும் காவல் காக்கின்றனர். மனிதர்கள் அதை தொடக்கூடாது. பறிக்கக்கூடாது.. உனக்கு எப்போதாவது என் உதவி தேவை என்றால் என்னை நினைத்துக்கொள் நான் அங்கே உன்னிடம் இருப்பேன் '
  என்று அருள்கிறார் ராம பக்த ஹனுமான்.


  ஹனுமான் தனது உருவத்தைச் சுருக்கிக்கொண்டார். பீமனை ஆலிங்கனம் செய்தார். அவர் அணைத்தபோது ஹனுமானின் பலம் பீமனுக்கு புரிந்தது. அவன் புத்துணர்ச்சி பெற்றான்.


  ''ராமனை நினை, சர்வ சக்தியும் பெறுவாய். உனக்கு ஒரு வரம் தருவேன் கேள். '' துர்யோதனாதிகளைக் கொல்லவேண்டுமா, அவர்களை நகரத்தோடு சேர்த்து அழிக்கவேண்டுமா, அவர்களை கட்டி தூக்கி கொண்டுவந்து உன் காலடியில் போடவேண்டுமா. சொல். செய்கிறேன்'' என்றார் ஹனுமான்.


  ''உங்கள் அருள் இருந்தாலே போதும். எங்களை வாழ்த்துவதே போதும். உங்கள் பராக்கிரமம் நான் அறிவேன்.''


  '''நல்லது பீமா. பாண்டவர்களுக்கு என் ஆசி. உங்கள் யுத்தத்தில் அர்ஜுனன் கொடியில் நான் இருப்பேன். காற்றில் என் பலம் கலந்து உனது சப்தத்திலும் உங்களது ஆயுதங்கள் செல்லும் வேகத்திலும் நான் சக்தியாக இருப்பேன். எதிரிகள் வீழ்வார்கள் போதுமா?


  ஹனுமான் மறைந்தார்


  தான் கண்டது கனவா நினைவா என்றே புரியாத நிலையில் பீமன் ஹனுமான் சென்ற திசையையே பார்த்திருந்தான்.


  ''என்ன பலம், என்ன ராம பக்தி என்று ராமனின் பராக்ரமத்தில் எண்ணம் போயிற்று. பிறகு ஒருவழியாக தன்னை சுதாரித்துக் கொண்டு கந்தமாதன பர்வதத்தில் நடந்தான். கால் தானாகவே குபேரனின் தோட்டத்தை நோக்கி சென்றது. உச்சி வெயில் வந்தும் கூட அவன் நடந்து கொண்டு தான் இருந்தான். இன்னும் சௌகந்திகா புஷ்ப மரம் தென்படவே இல்லையே. ஹனுமான் சொன்ன பாதையில் சென்றுகொண்டிருந்தான். திடீரென்று காற்றில் அந்த சுகந்த நறுமணம் கலந்து வீசியது. அருகே வந்துவிட்டோம் என்று பீமன் சுற்றுமுற்றும் பார்த்தான். கைலாச பர்வதம் பனிமூடி காட்சி அளித்தது. தாமரை பூத்த ஏரி ஒன்று அருகே. அதன் கரையில் க்ரோதவாசர்கள் என்ற பெயர்கொண்ட ஆயிரக்கணக்கான ராக்ஷசர்கள் ஆயுதங்களோடு காவலிருந்தனர் . ஏரிக்கரையில் குபேரனின் நந்தவனம் தெரிந்தது. அதில் அடர்ந்த மரங்கள், செடிகள், கொடிகளோடு பூத்துக் குலுங்கியது. அந்த ஏரியிலும் சௌகந்திகா தாமரை மொட்டுகள் நிறைய இருந்தன. ஒரு வாய் ஏரி நீரை அள்ளிக் குடித்தபோது அமிர்தமாக இனித்தது. சௌகந்திகா மலரின் வாசனை அந்த பிராந்தியத்தையே மயங்க வைத்தது.


  பீமனைப் பார்த்ததும் அந்த ராக்ஷசர்கள் சூழ்ந்து கொண்டு '' யார் நீ? எதற்காக இங்கே வந்தாய்? என்றபோது, ''நான் பாண்டுபுத்திரன், யுதிஷ்டிரன் தம்பி, பீமசேனன். எங்கள் யாத்ரையில் வழியில் ஒரு சௌகந்திக தாமரை மலர் காற்றில் இங்கிருந்து பறந்து வந்தது. அதன் நறுமணம் கவர்ந்திழுக்க பாஞ்சாலி அந்த புஷ்பங்கள் வேண்டும் என்று விரும்பியதால் அதை பறித்து கொண்டு போக இங்கே வந்திருக்கிறேன்'' என்றான் பீமன்.


  ''தேவர்கள் மட்டுமே வரும் இடம் இது. குபேரன் அனுமதியைப் பெற்றே இங்கு வரவேண்டும். அத்து மீறினால் மரணம்.''


  பீமன் சிரித்தான். இது கந்தமாதன மலையின் பள்ளத்தாக்கு, குபேரனின் சொந்த இடம் இல்லை. பரமேஸ்வர க்ஷேத்ரம். எல்லோருக்கும் சொந்தமானது. நான் எனக்கு வேண்டியதை எடுத்துச் செல்வேன். எவரையும் அனுமதி கேட்டு நிற்பவன் நான் இல்லை'' எனக் கூறி ஏரியில் இறங்கினான் பீமன். அவர்கள் அவனைத் தாக்க, நூற்றுக்கணக்கானோர் அவனால் மரணமடைய, மற்றவர் ஓடிவிட்டனர். ஏரியின் அம்ருத நீர் பருகினான். புது சக்தி வந்தது. சௌகந்திகா தாமரைகளை பறித்தான். இதற்குள் குபேரனிடம் செய்தி போனது. குபேரன் சிரித்தான்.


  ''பீமன் எத்தனை தாமரைகளை வேண்டுமானாலும் திரௌபதிக்கு எடுத்து செல்லட்டும். இது எனக்கு முன்பே தெரிந்த விஷயம்'' என்றான் குபேரன். ஒருவேளை ஹனுமார் சொல்லியிருப்பாரோ?
  தொடரும்...
Working...
X