பஞ்சமுக லிங்கங்கள்



ஸ்ரீ ருத்ர மஹாமந்திரத்தில் பரமசிவனுக்கு ஐந்து மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.

கிழக்குப் பாத்திருக்கும் முகம் தத்புருஷம். இது ரிக் வேதத்திற்குரியது.
தெற்குப் பாத்திருக்கும் முகம் அகோரம். யஜூர் வேதத்திற்குறியது.
மேற்குப் பாத்திருக்கும் முகம் ஸத்யோஜாதம். ஸாம வேதத்திற்கு உரியது.
வடக்கு பாத்திருக்கும் முகம் வாமதேவம். அதர்வண வேதத்திற்குரியது.
ஐந்தாவது ஈசானம் ஆகாயத்தை நோக்கி ஜோதிர்மயமாக உருவமில்லாமல் காணப்படுவது.

ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்தாற்போல் உள்ள பரமக்குடி என்ற குன்றின் மேல் பஞ்சமுக லிங்கம் இருக்கிறது. ஸ்ரீ பரமாசாரியாள் 1932இலும் பிறகு 1939இலும் அப்பஞ்சமுக லிங்கத்தை தர்சனம் செய்து கொண்டார்கள். 1966ஆம் வருடம் ஸ்ரீ பரமாசாரியாளும் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவாளும் சாதுர்மாஸிய காலத்தில் இந்தப் பஞ்ச முக லிங்கத்தை தர்சனம் செய்துள்ளார்கள்.


இது போன்ற பஞ்சமுக லிங்கம் திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீகாமகோடி பீட்த்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. 1943இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் அங்கு விஜயம் செய்தபொழுது முன்பு பரமக்குடி பஞ்சலிங் கத்தைக் கண்டுபிடித்துச் சொன்னது போல் இந்த லிங்கத்தையும் கண்டுபிடித்துச் சொல்லி நித்ய பூஜை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.


வாதாபியில் “ஐகோளை” என்னுமிடத்தில் இம்மாதிரி பஞ்சமுக லிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

நேபாளத்திலுள்ள பஞ்சமுக பசுபதீஸ்வரர் லிங்கம் ஜகத் பிரசித்தம். அர்ஜுனன் பரமசிவனைக் குறித்துக் கடும் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்ற ஸ்தலம்.

ஸ்ரீ காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கச்சபேசுவரர் ஆலயத்தில் நுழைந்தவுடன் வலப்புறமாக உள்ள சந்நிதியில் பஞ்சமுக லிங்கம் இருக்கிறது. இருந்தாலும் நான்கு முக லிங்கம் என்று எழுதியிருக்கிறது. (அவருக்கு ஊர்த்வ முகமும் இருக்கத்தான் வேண்டும்.)


ஞாயிற்றுகிழமைகளில், அதுவும் கார்த்தி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் குளத்தில் நீராடி கச்சபேசுவரரை தர்சனம் செய்துகொள்வது ரொம்ப விசேஷம்.


தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்கு வேண்டி திருபாற்கடலைக் கடையும்பொழுது ஆமை வடிவம் எடுத்து பகவான் விஷ்ணு சஹாயம் செய்தார். அப்பொழுது அநேக ஜந்துக்களுக்கு ஹிம்சை ஏற்பட்டுவிட்டதற்குப் பிராயச்சித்தமாக இந்த ஈஸ்வரனை வழி பட்டதால் ஈஸ்வரனின் நாமம் கச்சபேசுவரனாகி விட்டது. சூரிய பகவானுக்கு வெளிப்புறம் தனி சந்நிதி இருக்கிறது. வியாதிகளை யெல்லாம் குணப்படுத்தும் ஈஸன் கச்ச பேசுவரன். காஞ்சி செல்பவர்கள் அவசியம் இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டும். காஞ்சிபுர பஸ் நிலையத்திலிருந்து மிக அருகில் இருக்கிறது.


ஐந்து முகங்களுக்கும் உள்ள வேத மந்திரங்கள் ‘தைத்ரிய” உபநிஷதின் ஒரு பகுதியான நாராயணவல்லியில் இருக்கின்றன. நாராயணவல்லி என்று கூறப்படும் இப்பாகம் மஹா நாராயாண உபநிஷத் என்றும் வழங்கப்படும்.

(ப்ரம்மஸ்ரீ ஸாம்பமூர்த்தி சாஸ்திரிகள் தொகுத்த ஜகத்குரு திவ்ய சரித்திரம்.)

Source: Panchanathan Suresh