அத்யயன முறைகள் –Part 1

எழுதி வைக்காமலே வேதத்தைத் துளிக்கூடப் பிழை வராமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக நம்முடைய ஆன்றோர் பல வழிகளை வகுத்து வைத்தார்கள். ஒரு அக்ஷரம்கூட மாறிவிடாமல், ஒரு ஸ்வரம்கூட ஏற்றல் இறக்கலில் வித்தியாஸப் பட்டுவிடாமல், மந்திர சக்தியானது பூரணமாகப் பலன் தருவதற்காக அத்யயனத்தில் பல விதிகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.

ஒவ்வொரு பதத்திலுள்ள ஒவ்வொரு அக்ஷரத்தையும் சொல்வதற்கு இத்தனை கால அளவை வேண்டும் என்று "மாத்ரா" கணக்கு வைத்திருக்கிறார்க மூச்சை எப்படி விடுவதால் சரீரத்தில் எந்தப் பகுதியிலே வைப்ரேஷன் ஏற்பட்டு சுத்தமான அந்த அக்ஷரம் பிறக்குமோ, அதைக் கூட சிக்ஷ என்ற வேதாங்கத்தில் நிர்ணயம் பண்ணிக் கொடுத்திருக்கிறாரகள். ஸங்கீத ஸ்வரத்துக்கும் வேத ஸ்வரத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை, மிருகங்கள், பக்ஷிகள் முதலியவை எழுப்பும் ஒலிகளுக்கும் வேத ஸ்வரங்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை ஆகியவற்றைச் சொல்லி, சரியாக வேத ஸ்வரங்களை உச்சரிப்பதற்கு வழி காட்டியிருக்கிறாரகள்.

வார்த்தைகளும் அக்ஷரங்களும் மாறிப் போகாமலிருப்பதற்குசெய்த ஒரு பெரிய உபாயம் என்னவென்றால், ஒரு மந்திரத்திலுள்ள பதங்களைப் பல தினுசில் கோத்து வாங்கி வாக்யம், பதம், க்ரமம், ஜடா, மாலா, சிகா, ரேகா, த்வஜம், தண்டம், ரதம், கனம் ஆகிய பலவிதமான முறைகளை (patterns) ஏற்படுத்தியிருப்பதான்.

இப்போது கனபாடிகள் என்று சிலபேரைச் சொல்கிறோம் அல்லவா?இவர்கள் "கனம் என்கிற முறையில் வேதம் ஒதுவது வரைக்கும் பாடம் படித்தவர்கள்" என்று அர்த்தம். 'பாடி'என்றால் பாடம் படித்தவன். 'கனம்'வரையில் பாடம் படித்தவன் 'கனபாடி'. ஒரு கனபாடி கனம் சொல்லும்போது கேட்கிறோம். ஒரு சில பதங்களையே அவர் அப்போது பல தினுஸாக மாற்றி மாற்றி, மடக்கி மடக்கி சொல்கிறார் என்று தெரிகிறது. இது கேட்பதற்கே பரமானந்தமாக கர்ணாம்ருதமாக இருக்கிறது. வேத மந்திரங்களுக்குப் பொதுவாகவே உள்ள காம்பீர்யம் இதனால் மேலும் ஜாஸ்தியானாற் போலிருக்கிறது. இப்படியேதான் க்ரமம், ஜடை, சிகா, மாலா முதலான முறைகளிலும் பதங்களை ஒவ்வொரு விதமாகச் சேர்த்துத் திருப்பித்திருப்பச் சொல்கிறபோது ரொம்பவும் கம்பீரமாக, தெய்விகமாக இருக்கிறது. ஆனால் இந்த ஒதுமுறைகளின் முக்யமான உத்தேசம் வேத மந்திரங்களின் அக்ஷரம் கொஞ்சம் கூட மாறிவிடாமலிருப்பதகாக அவற்றைக் குறுக்கும் நெடுக்குமாய் பின்னிப் பின்னித் தரவேண்டும் என்பதே.

வாக்ய பாட் அல்லது ஸம்ஹிதா பாடம் என்பதுதான் மந்திரங்களை உள்ளபடி அப்படியே பாடம் பண்ணுவது. வாக்ய ரூபமாக மந்திரங்கள் வரும்போது, அதிலுள்ள பதங்கள் ஸந்தியில் ஒன்று கூடுவதுண்டு. இங்கிலீஷைவிடத் தமிழில் இம்மாதிரி ஸந்தியில் வார்த்தைகள் ஒன்று சேர்வது ஜாஸ்தி. இங்கிலீஷில் வார்த்தைகள் தனித்தனியாகவேதான் இருக்கும். தமிழில் பழைய தேவாரம், திருவாசகம், திருக்குறள், திவ்யபிரபந்தம் மாதிரியானவற்றில் நமக்கு தனித்தனியாக வார்த்தைகள் தெரியாத மாதிரி ஸந்தி சேர்த்திருப்பதைப் பார்க்கிறோம். ஸம்ஸ்கிருதத்தில் தமிழைவிடவும் தனித்தனி வார்த்தைகளின் ரூபம் தெரியாமல் ஸந்தி சேர்த்திருக்கும். இப்படி ஒவ்வொரு வேத வாக்யத்திலும் உள்ள பதங்களைத் தெளிவாகப் பிரித்துப் பிரித்துப் பாடம் பண்ணுவதற்குத்தான் 'பத பாடம்'என்று பெயர்.

ஸம்ஹிதா பாடத்துக்கு அடுத்தது பத பாடம். இதற்கு அடுத்தது க்ரம பாடம். இதிலே ஒரு மந்திரத்தின் முதல் வார்த்தையை இரண்டாவது வார்த்தையுடன் சேர்த்தும், இரண்டாவது வார்த்தையை மூன்றாவதுடன் சேர்த்தும் மூன்றாவதை நாலாவதுடன் சேர்த்தும், இப்படியே அந்த மந்திரம் முடிகிறவரைக்கும் சொல்லிக் கொண்டு போக வேண்டும்.

பழைய கால சாஸனங்கள் சிலதில் உள்ள ஊர் பிரமுகர்களின் பெயர்களில் சில பெருக்கு முடிவில் 'க்ரம வித்தன்'என்று போட்டிருக்கும். "வேதவித்"என்கிற மாதிரி (வேதவித்து என்று தமிழில் சொல்கிறோம்) , 'க்ரமவித்'அல்லது 'க்ரமவித்தன்'
என்றால், வேதத்தைக் கிரமம் என்ற அத்யயன முறையில் சொல்லத் தெரிந்தவன் என்று அர்த்தம். தமிழ் நாட்டில் இப்படி ஊருக்கு ஊர் பலர் இருந்திருப்பதைத்தன் சாஸனங்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

இதற்கப்புறம் ஜடா பாடம. இதிலே முதல் வார்த்தையை இரண்டாவது வார்த்தையுடன் சேர்த்துச் சொன்னவுடன், அதை மாற்றி இரண்டாவதை முதல் வார்த்தையுடன் சேர்க்க வேண்டும்;மறுபடியும ் முதலை இரண்டாவதோடு சேர்க்க
வேண்டும். அப்புறம் இரண்டாவது வார்த்தையை மூன்றாவதோடும், அதை மாற்றி மூன்றாவதை இரண்டாவதோடும் திரும்பவும் இரண்டாவதை மூன்றாவதோடும்;இப்ப டியே பின்னால் வருகிற வார்த்தைகளையும் மாற்றிச் சேர்த்துக் கொண்டு போக வெண்டும். இப்படிச் சொல்ல வல்லவர்களையே 'ஜடாவல்லபர்'என்பது. இங்கே இரண்டு வார்த்தைகளைக் கோத்து வாங்கின மாதிரியே, மூன்று வார்த்தைகளை முன்னும் பின்னுமாக மாற்றுவது சிகா பாடம்.

இதைவிட சிரமமானது கனபாடம். இதிலே நாலு தினுசு உண்டு. முன்னும் பின்னுமாக வார்த்தைகளைப் பல விதங்களில் permutation, combination என்று சேர்த்துச் சொல்லும் அத்யயன முறையே அது. அதையெல்லாம் விளக்கினால் கணக்கு க்ளாஸ் மாதிரி மண்டையை உடைக்கும்.

Contd….in Part 2………

Source:subadra