Announcement

Collapse
No announcement yet.

சொற்குற்றம், பொருட்குற்றம்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • சொற்குற்றம், பொருட்குற்றம்

  எழுதியவர்: க்ருத்திவாசன்


  சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளில் மட்டுமே தான் ஒரே எழுத்துக்கு நான்கு வகையான ஒலிக் குறிப்புகள் (க, க) உள்ளன என்பது தவறு தமிழிலும் உண்டு. காடு என்பதில் உள்ள டு உச்சரிப்பு காட்டு என்பதில் உள்ளதுடன் மாறுபடுவது போல. (மேலும் ட = படம், பட்டம், கி = முகில், மூங்கில்) தமிழ் இலக்கணத்தில் நான்கு ஒலிகளுக்கு நான்கு எழுத்துக்கள் இடாமலே சாமர்த்தியமாக அமைத்திருக்கிறார்கள். மந்திரங்கள் என்று வரும் போது தமிழானாலும், சம்ஸ்க்ருதமானாலும் சரியான உச்சரிப்பு, பொருள் உணர்ந்து ஓதுவது ஆகியவை அவசியம்.

  information

  Information

  அண்மையில் தொலைக்காட்சியில் தினம் ஒரு மந்திரம் என்கிற ஆன்மீக நிகழ்ச்சியில் வேதாள ரூபிணி மந்திரம் என்று ஒன்றை ஒரு ஆன்மீகப் பெரியவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் மம வசம் குரு குரு என்ற வரி மந்திரத்தில் வரும் போது குரு என்பது (குழந்தை என்பது போல மெல்லொலியாக உச்சரித்தால் என் வசம் வரச் செய்வாய் என்று அர்த்தம் வரும். ஆனால் இவர் உச்சரிக்கிற விதம் குரு (குகை என்பதில் வருகிற கு மாதிரி, குரு ஆசிரியர்) என்கிற மாதிரி உச்சரிக்கிறார். இதனால் மந்திரம் அனர்த்தமாகி விடுகிறது. அவருக்கு சம்ஸ்க்ருதம் தெரியாதது பிரச்சனை இல்லை, ஆனால் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வரும் போது சரியாக சொல்லித் தரவேண்டாமா?





  notice

  Notice

  மீமாம்சா சாத்திரங்களில் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உச்சரிப்பு பிறழ்ந்ததால் நித்யத்வம் என்று இறவா வாழ்க்கையை கேட்க நினைத்த கும்பகர்ணன் நா பிறழ்ந்து நித்ரத்வம் என்று உச்சரிப்பு மாறி தூக்கத்தை வரமாக பெற்ற கதை தெரிந்திருக்கும்.
  சரியான உச்சரிப்பு சரியான அர்த்தத்தைத் தரும் என்ற வகையில் சாத்திரங்கள் சொன்னாலும், இக்காலத்தில் அர்த்தத்தை விட்டு விட்டு வாயால் ஓதுவதே போதும் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள். ஒரு மந்திரம் எவ்வளவுக்கெவ்வளவு புரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறந்த புனிதமான மந்திரம் என்று கூட கருதத் துவங்கி விட்டனர். மந்திரங்களின் அர்த்தங்கள் வெகு சிலரே அர்த்தம் புரிந்து ஓத முடியும். பெரும்பாலும் புரோஹிதர்கள் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்த படியால் அப்படியே மனப்பாடம் செய்தவாறு ஓதுகிறார்கள். இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டால் அதன் ஒளிக்கதிர்கள் பட்டு அதிருஷ்டம் வரும் என்று சொல்வதைப் போன்றது தான் இது.





  மஹா பாஷ்யத்தில் இலக்கணத்தை ஏன் நாம் கற்க வேண்டும் என்பதற்கு, பதஞ்சலி முனிவர்:
  ऊहः खलु अपि। न सर्वैः लिङ्गैः न च सर्वाभिः विभक्तिभिः वेदे मन्त्राः
  निगदिताः। ते च अवश्यं यज्ञगतेन यथायथं विपरिणमयितव्याः। तान्न अवैयाकरणः
  शक्नोति यथायथं विपरिणमयितुम। तस्मादध्येयं व्याकरणम्।
  ஊஹ: கலு அபி| ந ஸர்வை: லிங்கை: ந ச ஸர்வாபி⁴: விப⁴க்திபி⁴: வேதே மந்த்ரா:
  நிகதிதா:| தே ச அவஸ்யம்ʼ யஜ்ஞகதேன யதாயதம்ʼ விபரிணமயிதவ்யா:| தான்ன அவையாகரண:
  ஸக்னோதி யதாயதம்ʼ விபரிணமயிதும| தஸ்மாதத்⁴யேயம்ʼ வ்யாகரணம்|



  வேத மந்திரங்களில் ஆண்பால் பெண்பால் ஆகிய பாலினம், ஒருமை பன்மை என்று எல்லா சந்தர்ப்பங்களுக்கும் மந்திரங்கள் விதவிதமாக தரப் படவில்லை. ஒருமையோ, பன்மையா ஒரே வகை தான் தரப் பட்டுள்ளது, இலக்கணத்தைக் கற்காதவரால் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு மந்திரங்களை மாற்றி சரியான அர்த்தத்தில் பிரயோகிக்க முடியாது. ஆகவே வியாகரணத்தைக் கற்க வேண்டும் என்று கூறுகிறார். இதில் ஒரு வைதிகர் முதலில் வேத மந்திரங்களை மனப்பாடம் செய்ய வேண்டும், பின் இலக்கணத்தை அனுசரித்து அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதனை மாற்றி சொல்ல வேண்டும் என்பது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. பொதுவாக மந்திரங்களை மாற்றாமல் சொல்வதே புனிதமானது என்கிற எண்ணம் இருக்கிறது மீமாம்சா சாத்திரங்களும் அப்படியே கூறுகின்றன.

  எந்தெந்த சூழ்நிலைகளில் மந்திரங்களை மாற்ற வேண்டி இருக்கிறது? ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
  திருமண மந்திரங்களில் சிலவற்றில் இது போன்ற சூழல் எளிதாக ஏற்படும்.
  वाचा दत्ता मया कन्या, पुत्रार्थं स्वीकृता त्वया ।
  வாசா தத்தா மயா கன்யா, புத்ரார்தம்ʼ ஸ்வீக்ருʼதா த்வயா |
  என் வார்த்தையால் (உறுதி செய்து) என்னுடைய மகளை தந்தேன். உங்களுடைய மகனுக்காக உங்களால் ஏற்றுக் கொள்ளப் படுகிறாள் அவள்
  இதுவே மாப்பிள்ளைக்கு அப்பா இல்லாமல் அவரது அண்ணனோ, இதர உறவினர்களோ கல்யாணம் செய்து வைப்பதாக இருந்தால் அதற்கு தகுந்தவாறு மந்திரத்தை மாற்ற வேண்டி இருக்கும். இது போல, திருமணம் ஆகிற பெண்ணின் வயதைக் கொண்டும் மந்திரங்கள் உள்ளன
  अष्ठवर्षा त्व इयं कन्या पुत्रवत् पालिता मया |
  इदानीम् तव पुत्राय दत्ता स्नेहेन पालयताम् ||
  அஷ்டவர்ஷா த்வ இயம்ʼ கன்யா புத்ரவத் பாலிதா மயா |
  இதானீம் தவ புத்ராய தத்தா ஸ்னேஹேன பாலயதாம் ||
  எட்டு வயதான இந்த பெண்ணை மகனைப் போல வளர்த்து விட்டேன். இப்போது உங்களுடைய மகனுக்காக தரப்படுகிறாள், அன்புடன் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது இந்த மந்திரம். இப்போது பெண்ணுக்கு எட்டு வயது இல்லை என்றால் எந்த வயதோ அதற்கு தகுந்தவாறு மந்திரம் மாற்ற வேண்டும். அதே போல பையனுடைய அண்ணன் முன்னிலையில் கல்யாணம் நடந்தால் அதுவும் உங்கள் சகோதரனுக்கு என் பெண்ணை தருகிறேன் என்பது போல மாற்ற வேண்டும்.
  ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் தன்னுடைய தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தார். திருமணம் செய்து வைத்த புரோஹிதர் தவ புத்ராய என்று சொல்ல, கல்யாணம் பண்ணி வைக்கிற யஜமானர் (யக்ஞத்தை செய்து வைப்பவர்) இது என் பிள்ளை இல்லை என் தங்கை பிள்ளை என்று கூறுகிறார். இப்போது புரோஹிதர் சம்ஸ்க்ருத இலக்கணம் தெரியாதவர். அவர் வேறு எப்படி சொல்வது என்று தெரியாமல் தவ பகிநிஸ்ய புத்ராய என்று சொல்லி தொடர்ந்தார். இது பகிந்யா: புத்ராய என்று இருக்க வேண்டும். ஆனால் திருமணம் செய்து கொள்பவர், புரோஹிதர் அங்குள்ளவர்கள் எவருக்கும் சம்ஸ்க்ருதம் தெரியாது ஆனால் கல்யாண மந்திரம் சம்ஸ்க்ருதத்தில் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்கள்.


  ஸ்ரீ என்கிற சொல்லை மரியாதைக்குரிய, புனிதமான, லக்ஷ்மிகரமான, மங்கலமான என்ற அர்த்தத்தில் எல்லா இடத்திலும் உபயோகிக்கின்றனர். வேதத்தில் ஸ்ரீஇந்திரன், ஸ்ரீவருணன் என்று விளித்து மந்திரங்கள் இல்லை. ஆனால் தற்காலத்தில் ஸ்ரீ சனீஸ்வர சுவாமி திருக்கோயில் என்பது போல, ஸ்ரீ மன்மோகன் சிங் என்பது போல எல்லாவற்றுக்கும் முன்னால் ஸ்ரீ போடுகிற வழக்கம் நிறைந்து விட்டது. மந்திரங்களிலும் எக்ஸ்ட்ராவாக ஸ்ரீ சேர்த்து போடுவது வழக்கமாகி விட்டது. இதில் ஸ்ரீ என்பதை மற்ற எந்த வார்த்தைகளுடனும் சந்தி சேர்ப்பதே இல்லை. அது தனியாகவே இருக்கும் ஏனெனில் மந்திரங்களைக் கேட்பவர்கள் தனியாக ஸ்ரீ என்று காதில் வாங்கினால் தான் அந்த மந்திரம் புனிதத்தன்மை உடையது என்று நினைக்கிறார்கள்.
  सर्वविघ्नहरस्तस्मै श्रिगणाधिपतये नमः |
  ஸர்வவிக்⁴னஹரஸ்தஸ்மை ஸ்ரீகணாதி⁴பதயே நம: |
  என்ற மந்திரத்தில் ஸ்ரீ என்பது பிற்சேர்க்கை. அந்த ஸ்ரீ இல்லாமலே எட்டு அக்ஷரங்கள் கொண்ட சந்த இலக்கணம் சரியாக இருக்கிறது. ஸ்ரீ சேர்ப்பதால் சந்தம் தவறி விடுகிறது. இருந்தாலும் ஸ்ரீ சேர்ப்பது புனிதமாக இருக்கும் என்று நினைப்பதால் அதை சேர்த்தே சொல்கிறார்கள்.
  இது போல ஊர் பெயர்களையும் சம்ஸ்க்ருதப் படுத்தி கூறுவது வழக்கம். கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் சொன்னது இந்த ஊருக்கு பெயர் பழமலை. பழமையான மலை என்று அர்த்தம். ஆனால் இதை சம்ஸ்க்ருதத்தில் மாற்றியவர் பழமை என்பதை முதுமை என்று எடுத்துக் கொண்டு வ்ருத்தாசலம் என்று கூறி விட்டார். இவ்வாறு பழமலை என்பது கிழமலை ஆகி விட்டது.. என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
  வேத மந்திரங்களில் மட்டும் அல்லாது தினப்படி ஓதும் ஸ்தோத்திரங்களில் கூட எத்தனையோ விஷயங்கள், அழகான வாக்கிய அமைப்புகள், பொருள் பொதிந்த பிரயோகங்கள் இருக்கின்றன. இவற்றை சரியாக புரிந்து கொண்டு உபயோகிக்க அடிப்படை இலக்கணமாவது தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம்
Working...
X