திருவேங்கடத்தந்தாதி 33 அரங்கர்க்கு அடிமைப் படார் இருந்தென் ? இராமலென் ?

ஆவாகனத்தரடியார் மனத்துட்புள்ளானவொப்பில்-
ஆவாகனத்தரரங்கர்பொற்றாளுக்கடிமைப்படார்
ஆவாகனத்தவழுக்குடல்பேணியறிவிழந்தவ்-
ஆவாகனத்தரிருந்தென்னிராமலென்னம்புவிக்கே

பதவுரை :

அடியார் மனத்துள் பக்தர்களுடைய மனத்தில்
ஆவாகனத்தர் இருப்பவரும்
புள்ஆன கருடப்பறவையாகிய
ஒப்பிலா வாகனத்தார் ஒப்பற்ற வாகனத்தை உடையவருமாகிய
அரங்கர் ரங்க நாதருடைய
பொன் தாளூக்கு அழகிய திருவடிகளுக்கு
அடிமைப்படார் அடிமை ஆகாத சிலர்
ஆ ஆ அந்தோ !
கனத்த பாரமாயுள்ள
அழுக்கு உடல் பேணி அசுத்தமான உடம்பைப் பாதுகாத்துக்கொண்டு
அறிவு இழந்து மதி கெட்டு
அவா ஆகு சிற்றின்பத்தில் ஆசை கொண்டுள்ள
அனத்தர் பயனற்ற அவர்கள்
அம் புவிக்கு அழகிய இந்த பூமியில்
இருந்து என் வாழ்வதால் என்ன பயன் ?
இராமல் என் ஒழிந்தால் என்ன நஷ்டம் ?