Announcement

Collapse
No announcement yet.

சப்தபதியின் உட்கருத்து

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • சப்தபதியின் உட்கருத்து

  சப்தபதியின் உட்கருத்து

  கல்யாணச் சடங்குகள் தற்காலத்தின் வசதிக்கு ஏற்ப வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டாலும், சுருங்கப்பட்ட திருமணங்களிலும் கூட சில சம்பிரதாயங்கள் மாறாது கடைபிடித்து வருகிறோம். அவற்றில் ஒன்று மாலை மாற்றுதல். மணமான இருவர் மாலை மாற்றிக்கொள்வதன் அர்த்தம், அவர்கள் இனி இருவரல்ல, ஒருவரே என்று ஊரறிய சொல்லாமற் சொல்வது. என்னுடைய எல்லாம் இவளுக்கும் இவளுடையது எல்லாம் எனக்கும் சொந்தம் என்று உரைப்பதே மாலை மாற்றும் பழக்கத்தின் உள்ளர்த்தம். மேலும் 'என் மனநிலை இதுதான்' என மணமகன் மாலை சாற்றுகிறான்.

  'அதை நான் அப்படியே ஏற்கிறேன்' என்று மணமகள் மாலையை வாங்கிக் கொள்கிறாள் என்பது இன்னொரு அர்த்தமாம்.  சில வீட்டுத் திருமணங்களில் தாலி கட்டுதற்கு முன்பு, தலையில் நுகத்தடி நிறுத்துவது பழக்கம். மாடுகள் இரண்டும் சேர்ந்து வண்டியை சுமந்து கரைசேர்வது போல், புருஷனும் அவன் ஸ்த்ரீயுமாக இல்லறத்தை குடைசாயாது சமமாக நடத்தக் கடமைப்பட்டவர்கள் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். இதுவும் பிற்காலத்தில் நடைமுறைக்கு ஒத்தவாறு சொல்லப்பட்ட கருத்து. நுகத்தடி வைப்பதற்கு வேறு அர்த்தமும் உண்டாம்.

  அத்திரி மஹரிஷியின் மகள் அபலா, தோல்வியாதியால் அவதிப்படுகிறாள். அதனால் அவளுக்கு திருமணம் நடந்தேறவில்லை. அவள் இந்திரனை நோக்கி பிரார்த்திக்கிறாள். அவனும் அவள் பிரார்த்தனைக்கு இரங்கி, அவளுக்கு நுகத்தடியை வைத்து, மந்திரம் ஓதி, நீர் விடுகின்றான். உடனே அவள் வியாதி நீங்கி பூர்ண குண்மடைந்து இந்திரனையும் மணக்கிறாள். மணமகளாகப்பட்டவளும் நோய் நொடிகளுக்கு பலியாகாது சிரஞ்சீவியாக இருக்கக்கடவது என்று மந்திரம் சொல்லி நுகத்தடியின் மேல் நீர் விடுவது வழக்கமாகியது.

  சமீபத்தில் திருமணம் செய்து வைக்கும் சாஸ்திரிகள் பலர் திருமண சடங்கில் சப்தபதியின் முக்கியத்துவத்தை உரைக்கின்றனர். திருமணம் தாலிகட்டுவதுடன் முடிந்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தாலிகட்டிவிட்டதால் இருவர் கணவன் மனைவியாக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. சப்தபதி என்ற சடங்கே திருமணத்தை பூர்த்தி செய்கிறது. 'தாலி' என்ற வழக்கமே பிற்பாடு தோன்றப்பட்டது என்று பலர் கூறுகின்றனர்.

  'பொன்' சேமித்தல் தம்பதியரின் அவசர-அவசிய காலகட்டங்களில் சேமிப்பாக இருக்க உதவும் என்பதால் தாலி வழக்கம் பின்னாளில் ஏற்படுத்தப்பட்டதாய் இருக்கலாம். ஆனாலும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்ய லஹரியிலும் அம்பாள் திருமாங்கல்யம் அணிந்திருபதாய் பாஷணைகள் இருக்கின்றன. சௌந்தர்ய லஹரியில் , அம்பாள் கழுத்தில் மாங்கல்யமாக மூன்று நூல்கள் மூன்று ரேகைகளாக இருக்கின்றன என்று ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இருக்கின்றதாம். அதனால் 'தாலி' பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் தெளிவாகக் கூறுவது கடினம். அடுத்து சப்தபதியைப் பார்ப்போம்.

  சப்தபதி என்றால் 'ஏழு அடிகள்' என்று பொருள். ஒரு ஆடவனும் பெண்ணும் சப்தபதி எடுத்துவைத்தால் அவர்கள் நண்பர்கள் ஆகின்றனர். ஏழு அடிகளை ஒன்றாக எடுத்து வைப்பதன் மூலம் அவர்களின் தோழமை உறவு கொண்டாடப்படுகின்றது. யமனுடன் ஏழு அடிகள் சாவித்திரி எடுத்து வைத்ததனால், அவளை விலகச் சொல்லும் யமனிடம், சப்தபதி உன்னுடன் நடந்ததனால் "நீ என் நண்பன், நட்பின் பெயரிலாவது என் மணாளனை மீட்டுக் கொடு' என்று சாவித்திரி கேட்கிறாள்.

  ஏழடிகள் நீ என்னுடன் நடந்ததனால் இன்று முதல் நீ என் தோழி,
  நான் வானம் என்றால் நீ பூமி
  நான் மனம் என்றால் நீ வாக்கு
  எல்லோருடனும் அன்பு பூண்டு இல்லறத்தை இனிதாக்குவாயாக"

  என்று அவன் கூறி அவளை தோழியாக ஏற்பதன் மூலம் மனையாளாகவும் ஏற்கிறான் என்பதே சப்தபதியின் உட்கருத்து.


  உணவு நிறைவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
  உடல் வலிமை பெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
  நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
  சுகத்தை அளிப்பதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்
  பசுக்களையும் செல்வத்தையும் அளிப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
  நாட்டில் நல்ல பருவங்கள் தவறாது இருப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
  யாகங்களை செய்து வைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்


  என்பது ஒவ்வொரு அடியிலும் சொல்லும் மந்திரங்களின் பொருள்.

  அதற்கு பின் வரும் சம்பிரதாயங்கள் "அம்மி மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதும்". நேர காலங்கள் சரியாக அமையாது துன்பம் நேரும் போதும் அம்மியைப் போல் கலங்காது அவள் உடன் வரவேண்டும் என்பது அம்மி மிதப்பதன் அர்த்தம். அருந்ததி என்பவள் நட்சத்திரம். துருவனைப் போல் என்று அழியாது சிரஞ்ஜீவியாக திகழ்பவள். பதிவ்ரதா தர்மத்தை வழுவாது கடைபிடித்தவள். பத்தினிகளில் எல்லாம் உயர்ந்தவள். வசிஷ்டரின் மனைவி.

  சப்தரிஷிகளின் பத்தினிகளில் இவள் உயர்ந்தவளாக கொள்ளப்பட்டிருக்கிறாள். "வசிஷ்டரின் மனைவி அருந்ததி எப்படி பதிவ்ரதையோ அப்படியே நானும் ராமனை விட்டு பிரியாமல் இருபேன்" என்று சீதை கூறினாள். அருந்ததியை தரிசனம் செய்து 'இவளைப் போல் நீயும் இருப்பாயாக' என்று மணமகளுக்கு சொல்வது போன்ற நியாயம்.


  Source:harikrishnamurthy
Working...
X