Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • ஸ்ரீமத்பாகவதம்

  Srimad Bhagavatam skanda 4 adhyaya 17,18,19,20 in tamil
  Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
  ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4- அத்தியாயம் 17


  ப்ருது அரசராக அபிஷேகம் செய்யப்பட்டபோது பூமியில் விளைச்சலே இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது. ஜனங்கள் பசியால் வாடி அரசரிடம் முறையிட்டார்கள். அவர் இது எதனால் ஏற்பட்டது என்று வெகு நேரம் ஆலோசித்த பின் அதன் காரணததை உணர்ந்தார்.


  வேனனின் அதர்ம ஆட்சியால் கோபம் கொண்டு பூமி தன் இயற்கைச் செல்வத்தை எல்லாம் மறைத்துக்கொண்டதை அறிந்து மக்கள் துன்பத்திற்குக் காரணமான பூமி மேல் எய்வதற்கு அம்பைத் தொடுத்தார் . அப்போது பூமி ஓர் பசுவின் உருவம் கொண்டு வேடனால் துரத்தப்பட்ட மான்போல் பயந்து ஓடக்கண்டு, அதைத் துரத்தினார்.


  மூவுலகும் ஓடியும் பின்னால் துரத்தும் அவரைக் கண்டு பயந்து பூமி தன்னைத்துரத்தும் காரணம் கேட்க, அவர் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான உணவு முதலியவைகளை மறைத்துக் கொண்டு அவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தியதால் பூமியை தண்டிக்க விரும்புவதாகக் கூற பூமிதேவி அவரை ஹரியின் அம்சமாக அறிந்து துதிக்க த்தொடங்கினாள்.


  மாயையினால் பலவகைத் தோற்றமளிக்கும் பரமபுருஷனான உமக்கு நமஸ்காரம். என்னை எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமாக எவர் ஸ்ருஷ்டித்தாரோ அவரே என்னை அழிக்க முற்பட்டால் நான் யாரிடம் முறையிடுவேன்?


  மாயையின் வசத்தில் உள்ளவரையில் , ஒன்றாக இருப்பினும் பலவாகத் தோற்றம் அளிப்பவரும், பிரம்ம தேவரை சிருஷ்டித்து அவரிடம் உலகை சிருஷ்டிக்கும் திறனையும் அளித்தவருமான அந்த பரமாத்மாவின் திருவுள்ளத்தையும் செயலையும் யார் அறிய முடியும்!


  சர்வசக்திமானாகிய புருஷோத்தமருக்கு வணக்கம், வராஹ ரூபம் கொண்டு என்னை பாதாளத்தில் இருந்து மீட்டு சமுத்திரத்தின் மேல் வைத்து எல்லா ஜீவராசிகளுக்கும் இருப்பிடமாகச் செய்தவரே இன்று மக்களைக் காக்க ப்ருது என்ற பெயரில் என்னை அழிக்க முற்படுவதோ ? முக்குணங்களால் மறைக்கப்பட்டு உங்களை அறிய முடியாமல் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு இரங்கவேண்டும்.


  அடுத்து பூமியின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு இனத்தில் இருந்தும் ஒவ்வொரு கன்றையும் கறப்போனையும் நியமித்து பூமியின் செல்வங்கள் அனைத்தையும் கறந்த வரலாறு கூறப்படுகிறது.
  ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4- அத்தியாயம் 18


  பூமிதேவி கோபத்துடன் உதடு துடிக்கும் ப்ருதுவைப்பார்த்துக் கூறினாள்.


  "துஷ்ட ஜனங்களால் யாகத்திற்காக உபயோகிக்கப்படும் த்ரவ்யங்களை துஷ்ப்ரயோகம் செய்ததைப் பார்த்து அவைகளை பத்திரப்படுத்தவே என்னுள் அடக்கிக் கொண்டேன். என்னுள் பாலாக இருக்கும் அவைகளை வெளிக்கொணர்வதற்கு தகுந்த கறப்பவர்களைத் தேர்ந்தெடுத்துக் கறந்திட வேண்டும். "


  அதைக்கேட்ட ப்ருது ஸ்வாயம்புவ மனுவைக் கன்றாக வைத்து சகல தானியங்களையும் தன் கையாகிய பாத்திரத்தில கறந்தார். பிறகு ஸகல இனத்தவரும் தம் தம் இனத்தில் ஒருவரைக் கன்றாகவும் ஒருவரை கறப்பவனாகவும் தேர்தெடுத்து தங்களுக்கு வேண்டியவற்றைக் கறந்துகொண்டனர்.


  இதை பாகவதம் பின்வருமாறு வர்ணிக்கிறது.


  கறப்பவர்- கன்று - பாத்திரம் -பால்
  ரிஷிகள்- ப்ருஹஸ்பதி-இந்த்ரியங்கள்- வேத சாஸ்திரங்கள்
  தேவர்கள்-இந்திரன்- தங்கப் பாத்திரம்- அம்ருதம்
  அசுரர்கள் ப்ரஹ்லாதன்-இரும்புப் பாத்திரம்- மதுபானம்
  கந்தர்வர்- விசுவாவசு தாமரை இசை , இனிய சொற்கள், அழகு
  பித்ருக்கள் அர்யமா-மண்பாத்திரம்- கவ்யம்
  சித்தர்கள் கபிலர்- ஆகாயம் அஷ்டசித்திகள்
  வித்யாதரர்கள் - கபிலர்- ஆகாயம்- ஆகாயமார்கமாகச் செல்லுதல்
  கிம்புருஷர்கள்-மாயை- மறையும் ஆற்றல்
  விஷ ஜந்துக்கள் தஷகன்- வாய் விஷம்
  காட்டு மிருகங்கள் சிங்கம்-சரீரம்- மாமிசம்
  மரங்கள்- ஆலமரம்- ருசிகள்
  மலைகள் ஹிமயமலை- ரத்னங்கள், ஓஷதிகள்


  இவ்வாறு எல்லோரும் பூமியை காமதேனுவாகவும்,தங்கள் ஸ்வதருமத்தை கன்றாகவும் பாவித்து தம் தம் நிலைகளாகிய பாத்திரத்தில் தனித்தனியே விரும்பியவற்றைக் கறந்தனர்.


  பிறகு ப்ருது சக்ரவர்த்தி ப்ரீதியுடன் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்த பூமியைத் தன் மகளாக நேசித்துத்தான் புதல்வி எனவே பாவித்தார் அதனால் பூமிக்கு ப்ரு திவீ என்ற பெயர் ஏற்பட்டது
  .
  இதற்கு முன் பூமியில் பட்டினம் கிராமம் என்ற பிரிவுகள் இல்லை. ப்ருதுவே மக்களுக்குவழி காட்டும் பிதாவைப்போல் ஆங்காங்கு பட்டினம், கிராமம், வயல்கள் மலைவாசஸ்தலங்கள் என்ற பிரிவுகளை ஏற்படுத்தினார். அதனால் மக்கள் பயமில்லாமல் அங்கங்கு இஷ்டம் போல் சுகமாக வாழ்ந்தனர்


  ஸ்ரீமத்பாகவதம்
  ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 4-அத்தியாயம் 19, 2௦


  .
  அத்தியாயம் 19


  ப்ருது 1௦௦ அஸ்வமேத யாகங்கள் செய்ய விரும்பி சரஸ்வதி நதிக்கரையை தேர்ந்தெடுத்து யாகத்தை ஆரம்பித்தார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் எல்லா தேவ இனத்தைச் சேர்ந்தவரும் ரிஷிகளும் பாகவதர்களும் அங்கு குழுமினர். மலைகள் கடல் இவைகளில் இருந்து ரத்தினங்களும் மற்றப் பொருள்களும் வந்து சேர்ந்தன. பூமியிலிருந்து யாகத்திற்குத்தேவையான எல்லா திரவியங்களும் கிடைத்தன


  . இவ்வாறு ப்ருது மகாராஜா 99 யாகங்கள் செய்து முடித்தபின் இந்திரன் , அவர் நூறு யாகங்கள் செய்து முடித்தால் தன் பதவிக்கு தகுதியாவார் என்ற பொறாமையால் இடையூறு .விளைவிக்க எண்ணி , வெவ்வேறு வேடம் கொண்டு யாகக்குதிரையை அபகரித்தான்.


  ஒவ்வொரு முறையும் ப்ருதுவின் மகன் இந்திரனை வில்லும் கையுமாகத் துரத்தியதால் இந்திரன் குதிரையையும் தன் வேடங்களையும் விட்டு மறைந்தான். இந்திரனின் வெவ்வேறு வேடங்களே வேத விரோத மதங்களாயின.


  இதனால் கோபம் கொண்ட ப்ருது இந்திரனைக் கொல்ல நிச்சயிக்க ரித்விக்குகள் தடுத்து யாக பூமியில் வதம் செய்வது கூடாதென்று கூறி மந்திரம் மூலம் அவனை வரவழைத்து யாகாக்னியில் ஆஹுதி செய்ய முயன்றனர்.


  அப்போது பிரம்மதேவர் அவர்களைத் தடுத்து , இந்திரன் தேவர்களின் பிரதிநிதி என்றும் , ஆகூதிக்கும் ருசிக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் அம்சமான யக்ஞன் என்பவனே அப்போதுள்ள இந்திரன் என்றும் கூறி அவனை வதம் செய்வது தகாது என்றார்.


  மேலும் ப்ருது 99 யாகங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தெய்வ ஆக்ஞை என்று கூறினார். அதன்படி ப்ருது யாகத்தை நிறுத்திக்கொண்டு புரோகிதர்களுக்கு தக்கபடி சம்பாவனை செய்து அவர்கள் ஆசியைப் பெற்றுக்கொண்டார்


  அத்தியாயம் 2௦


  யக்ஞ புருஷனான மகாவிஷ்ணு ப்ருதுவின் செய்கையால் சந்தோஷித்து இந்திரனுடன் வந்து ப்ருதுவிடம் பின் வருமாறு கூறினார்.


  "இந்த இந்திரன் தன் செயலுக்காக வருந்துகிறான். ஆகவே அவனை மன்னித்து விடுவதே சிறப்பாகும். நான் ஆத்மா சரீரம் அல்ல என்று அறிந்தவன் பிறருக்குத் துன்பம் விளைவிக்க மாட்டான். இந்த சரீரம் கர்மவினையினால் ஏற்பட்டது என்று உணர்ந்த்வன அதனிடம் பற்றுக்கொள்ள மாட்டான்.


  பலனைக் கருதாது ஸ்வதர்மத்தின் மூலம் என்னை வழிபடுபவர் நாளடைவில் தூய உள்ளத்தைப் பெறுவார். மனம், புத்தி, குணங்கள், கர்மவினை இவைகளுடன் கூடய சூக்ஷ்ம சரீரமே பல சரீரங்களை உடைய பிறவிகளை எடுக்கிறது. அதனால் என்னை உபாசிப்பவர்கள் சரீரசம்பந்தம் அற்று சுகதுக்கங்களை பொருட்படுத்துவதில்லை.


  ஆகவே வீரனே , சமபுத்தியுடன் ராஜ்ஜியத்தை பரிபாலிப்பாயாக. மக்களைக் காப்பதே அரசனுக்கு மேன்மையைத் தரும். அப்படிப்பட்ட அரசன் தன் குடிமக்களின் புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெறுகிறான். அதற்கு மாறாக மக்களின் நலம் கருதாமல் வரி மட்டும் வசூலிக்கும் அரசன் தன் புண்ணியங்களை இழப்பது மட்டும் அல்லாமல் மக்களின் பாபங்களையும் ச்வீகரிக்கிறான்.


  இந்த பூமியை சில காலம் ஆண்டு தர்மபரிபாலனம் செய்து எல்லோரிடமும் நல்ல பெயரைப் பெறுவாய். விரைவில் சனகாதியர் முதலியோர் உன்னை உன் அரண்மனையில் சந்திப்பார்கள். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். " என்று கூறினார்.


  ப்ருது தன் செயலுக்காக வருந்திய இந்திரனை மன்னித்து பகவானின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினார். பக்திப்பெருக்கால் உணர்ச்சி மேலிட்டு வார்த்தைகளே வராமல் கண்ணீர் பெருக பகவானின் உருவத்தைப் பார்க்க முடியாமல் தத்தளித்துப் பிறகு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்த ப்ருது தன் முன் மானிட உருவத்தில் ஒரு கை கருடன் மேல் வைத்து நின்ற அவர் திருவுருவத்தை கண்ணாரக் கண்டார். பிறகு அவரைத்துதித்துப் பின்வருமாறு கூறினார்.


  "பிரபோ , சரீர இச்சைகளைக் கடந்த எவன் இவ்வுலக சம்பந்தமான வரங்களை தேவாதிதேவனான் உம்மிடம் வேண்டுவான்? இவ்வுலகம் மட்டும் இன்றி அவ்வுலக சுகங்களும் நான் வேண்டேன். உங்களிடம் இருந்து பெறும் பெரும்பேறான மோக்ஷத்தைக் கூட என் மனம் விரும்பவில்லை.


  நான் வேண்டும் வரமெல்லாம் மகான்களிடமிருந்து உங்கள் பெருமையை கேட்டுக்கொண்டே இருக்க எனக்கு பதினாயிரம் காதுகள் வேண்டும். உங்கள் மகிமையாகிய அம்ருதத்தைத் சுமந்து வரும் மகான்களின் வார்த்தைகள் சரீர இச்சைகளால் யோகத்தை இழந்தவர்க்கும் நற்கதி அடைவிக்கும்.இதைத் தவிர நான் வேறு எதை வேண்டுவேன்.


  உங்கள் சேவையே வாழ்க்கையின் பயன் ஆகும். அப்படி இருக்க உங்களை மறந்து வேதம் கூறும் கர்ம மார்க்கத்தின் வழி சென்று உலக சுகங்களை நாடுவது என்பதும் உங்கள் மாயையே. "
  ப்ருதுவின் சொற்களைக் கேட்டு அவருக்கு அருள் பாலித்து பகவான் அங்கிருந்து மறைந்தார்.
Working...
X