Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • ஸ்ரீமத்பாகவதம்

  Srimad Bhagavatam skanda 4 adhyaya 29 in tamil
  Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
  ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம்-4 அத்தியாயம் 29


  புரஞ்சனனின் வாழ்க்கை ஜீவன் மாயைக்குள் அகப்பட்டு இறைவனை மறந்து அதனால் சம்சார துக்கத்தில் ஆழ்ந்து சிரமப்படுவதின் உருவகமே என்று விளக்கிய நாரதர் மேலும் கூறலுற்றார்.


  எப்போது ஜீவன் தன் உண்மை நிலையை மறந்து அந்தராத்மாவாயுள்ள பகவானையும் மறந்து பிரக்ருதியின் குணங்களோடு ஐக்கியம் ஆகிறதோ அப்போது இந்த்ரியங்களின் வசப்பட்டு கர்மாவைச் செய்ய ஆரம்பிக்கிறது.அதன் விளைவாக தேவன், மனிதன், புருஷன், ஸ்திரீ, மிருகம் முதலிய பல பிறவிகள் எடுக்கிறது.


  கர்ம வசத்தால் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு இன்னொரு கருமத்தினால் பரிஹாரம் தேடுவது என்பது தலையில் உள்ள சுமையை தோளுக்கு இறக்கிவைப்பது போலத்தான். ஒரு நாய் பல வீடுகளில் நீரோ உணவோ வேண்டிப் புகுந்தபோது அடியோ அல்லது உணவோ கிடைப்பது போல ஜீவன் பல பிறவிகளில் உழன்று சுக துக்கங்களை அனுபவிக்கிறது. பகவானை ஆச்ரயிப்பது ஒன்றே நிரந்தரத்தீர்வுக்கு வழி.


  ஒரு கர்மத்தினால் இன்னொரு கர்மத்தை விலக்க முடியாது. ஏனென்றால் இரண்டுமே அவித்யையின் விளைவுகள். ஞானத்தினால் மட்டுமே அது சாத்தியம். ஒருமுகமான பக்தியால் பற்று விலகி ஞானம் ஏற்படும். பகவத்கதாஸ்ரவணம் , சத்சங்கம் இவைகள் மூலமே பக்தி உண்டாகிறது.


  பலனை விரும்பி செய்யப்படும் வேத கர்மாக்களாகிய யாகம் முதலியவை நிரந்தர பலனைக் கொடுப்பவை அல்ல. ஏனெனில் அவை மூன்று குணங்களை அடிப்படையாகக் கொண்டவை. "


  ( த்ரைகுண்ய விஷயா வேதா: நிஸ்த்ரைகுண்யோ பவ அர்ஜுன- ப.கீ.- வேதங்கள் மூன்று குணங்களை அடிப்படையாகக் கொண்டன. ஆதலால் அவைகளைக் கடந்து விடு.)


  நாரதர் மேலும் கூறினார்.


  " வேத கர்மாக்களின் லட்சியம் பகவானை அடைவதே. அவர் எல்லா ஜீவர்களின் உள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார். இதை அறிவதே ஞானம் எனப்படும்.
  உனக்கு வைராக்யம் வருவதற்கு இன்னொரு உருவகம் சொல்கிறேன்.


  காட்டில் ஒரு மான் தன் துணையுடன் அங்குள்ள இளம்புல்லைத்தின்று வண்டுகளின் இசையை ரசித்து ஆனந்தமாக வசித்துவருகிறது. தன்னைச் சுற்றி உள்ள ஓநாய்களையும் தன்னைக் கொல்ல வரும் வேடனையும் அது காணவில்லை.


  மனிதனின் நிலை அதுதான். காடு என்பது அவன் வீடு. அதில் உள்ள இன்பங்கள் அவன் இல்லறத்தில் காணும் சுகங்கள். ஓநாய்கள் என்பது இரவும் பகலுமாக அவன் ஆயுளை தின்று வரும் தினங்கள். வேடன் என்பவன் அவன் உயிரை எடுக்க வரும் காலன். அதனால் இல்லற சுகத்தைத் துறந்து பற்றை ஒழிப்பாயாக.


  பௌதிக தேகம் என்பது ஆயுள் முடிந்ததும் நசித்துவிடும். சூஷ்ம தேகம் என்பது மனம் புத்தி இவற்றைக் கொண்டது. அது மரணத்திற்குப் பின்பும் தொடரும். பௌதிக உடல் தூங்கும்போது சூக்ஷ்ம தேகம் விழித்திருக்கிறது. அதனால்தான் நமக்கு கனவு உண்டாகிறது.


  சென்ற ஜென்மங்களின் நினைவுகள் எல்லாம் இந்த சூக்ஷ்மதேகத்தில் பதிந்துள்ளன. நாம் கனவில் காண்பதெல்லாமே நம் கற்பனை அல்ல. பார்த்திராத , அனுபவிக்காத எதையுமே கனவில் கற்பனை செய்ய முடியாது. முன் ஜன்ம நினைவுகள் அல்லது நம் உள் மன எண்ணங்கள் இவையே கனவாகப் பரிணமிக்கின்றன. தூக்கத்தில் ஏற்படும் தமச்சினால் அவை சிலசமயம் இயற்கைக்கு மாறாகத் தோன்றுகின்றன.


  சூக்ஷ்ம சரீரம் லிங்க சரீரம் எனப்படுகிறது. லிங்க சரீரம் முக்குணங்களால் ஆனது. பதினொன்று இந்த்ரியங்கள் , ஐந்து தன்மாத்திரைகள் ( சூக்ஷ்ம வடிவான பஞ்ச பூதங்கள்) இவை சூஷ்ம வடிவில் உள்ளன. ஆத்மாவானது இந்த சூக்ஷ்ம சரீரத்தில் பிரதிபலிப்பதே ஜீவன் எனப்படுகிறது. இந்த லிங்க சரீரத்தின் மூலம் ஜீவன் பௌதிக சரீரங்களை எடுக்கிறது.


  ஒரு கம்பளிப்பூச்சி ஒரு இலையில் இருந்து இன்னொன்றுக்கு தாவுகையில் முதல் இலையை விடாமலே அடுத்ததற்கு செல்வது போல இறக்கும்போது மனிதனின் ஜீவன் புதிய தேகத்தில் புகும்வரை பழைய தேகத்தின் நினைவுகளை சுமக்கிறது. நம் சுகம், துக்கம், பயம், ஆனந்தம், வருத்தம் இவைகளுக்கு இந்த லிங்க சரீரமே காரணம்.


  மனம்தான் மனிதனை சம்சாரத்தில் தள்ளுகிறது. அதனால் சம்சாரத்தில் இருந்து விடுபடுவதற்கு, சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரத்திற்குக் காரணமான ஸ்ரீ ஹரியை முழு மனதுடன் வழிபடுவாயாக."


  ( மன ஏவ மனுஷ்யாணாம்காரணம் பந்த மோக்ஷயோ:-உபநிஷத் வாக்கியம்)


  இவ்விதம் நாரதரால் உபதேசிக்கப்பட்ட பிராசீன பர்ஹிஷ் புதல்வர்களிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்து தவம் இயற்ற கபிலாச்ரமம் சென்றார். அங்கு பற்றை ஒழித்து கோவிந்தனுடைய சரணகமலங்களை ஒருமனபட்டவராய் தியானித்து அவரிடம் இரண்டறக்கலந்தார்.
Working...
X