இருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாள
புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பொருள்: மதுராபுரியிலுள்ள சிறையில் வசுதேவர்-தேவகி புத்திரனாக இருளிலே பிறந்தான். ஏழைகளாயினும் மனவலிமை மிக்க ஆயர்கள் குடியிருந்த ஆயர்பாடிக்குச் சென்றான். கம்சனை நாங்களே அழிப்போம் என சபதம் செய்திருந்த அவர்களை அமைதிப்படுத்தி, நானே செல்கிறேன் என புறப்பட்டுச் சென்று அவனது புரட்டி எடுத்தான். யமுனை நதியில் நீராடிய கோபியரின் பட்டுப்புடவைகளை வாரிச் சென்று விளையாடினான். அப்படிப்பட்ட கண்ணன் என்னைப் பார்த்து பூச்சி காட்டி பயமுறுத்துகிறான். ஐயோ! பயமுறுத்துகிறான்!
குறிப்பு: பெரியவர்களின் முதுகுக்கு பின்னால் வரும் குழந்தைகள், அவர்களின் கண்களை மூடி பயமுறுத்தி விளையாடும் விளையாட்டே பூச்சி காட்டுதல்.