தத்துக் கொண்டாள் கொலோ? தானே
பெற்றாள் கொலோ
சித்தம் அனையாள் அசோதை இளஞ் சிங்கம்
கொத்தார் கருங்குழல் கோபால கோள் அரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
பொருள்: உயர்ந்த மனம் கொண்ட யசோதை வளர்த்த சிங்கக்குட்டியே நம் கண்ணன். அவன் தனது கரிய கூந்தலில் பூங்கொத்துகளைச் சூடியிருப்பான். கோகுல பாலனான அவன், மிடுக்குடைய சிங்கம் போல் உற்சாகமாக வலம் வருவான். அவனை யசோதை வளர்ப்புப் பிள்ளையாக தத்து எடுத்தாளா அல்லது பத்துமாதம் சுமந்து தான் பெற்றாளா என்று சந்தேகம் வருகிறது. (பெற்ற பிள்ளை போல பாசம் காட்டுகிறாள் என்பது உட்பொருள்) பெருமை மிக்க அந்தக் கண்ணன் என்னை பூச்சாண்டி காட்டி பயமுறுத்துகிறான். அம்மா! பயமுறுத்துகிறான்!
குறிப்பு: குழந்தைகள் தாடி, மீசை வைத்துக் கொண்டு பெரியவர்களைப் பயமுறுத்தும் விளையாட்டே பூச்சி காட்டுதலாகும்.