ராம நாம மஹிமை.....!!!
(Praba Ranganathan Facebook page)
Click image for larger version

Name:	tem-3.jpg
Views:	36
Size:	216.7 KB
ID:	49528மும்மை சால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான்.

(வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்)

மூன்று என்னும் தொகை
பொருந்திய (வானம், பூமி, பாதாளம்) என்னும் உலகங்கள் யாவற்றிற்கும்; ஆதாரமாய்ப் பொருந்திய மந்திரத்தை; முழுவதுமாகத் தம்மையை வழிபடும்
அடியார்கட்கு அளிக்கும்; ஒப்பற்ற சிறப்பு மிக்க சொல்லை; தான் தனித்தே; இந்தப் பிறவியிலேயே;
எழுவகைப் பிறப்புக்களாகிய நோய்
வராமல் தடுக்கும் மருந்தை; இராமன் என்கின்ற; சிறப்புப் பொருந்திய திருநாமத்தை; தன் கண்களினால் (அவ்வம்பில்)தெளிவாகப் பார்த்தான்.

தாரக மந்திரம் என்று சிறப்பித்துக் கூறப்படும் 'இராம நாமத்தின்
பெருமை இங்கு உணர்த்தப்பட்டது. மும்மைசால் உலகு - இப்பிறவி,
முற்பிறவி, இனிவரும் பிறவி என மூன்று பிறவிகளுக்கு இடமான உலகில்
வாழும் உயிர்கள் என்றும் பொருள் கொள்வர். முற்றும் தம்மையே தமர்க்கு
நல்கும் தனிப்பெரும்பதம் - தம்மை வழிபட்டார்க்குத் தம்மையே முழுமையாக நல்குதல், இராம நாமத்தைச் சொன்னவர்கள் பெருமானின் வடிவம் கண்டு
இன்ப அனுபவத்தில் ஆழ்ந்து பரமபதத்தை அடைவர் என்பது பொருளாகும்.
'தம்மை' என்றது அப்பெயரின் பொருளான பெருமானைக் குறித்தது.
அன்பர்களிடத்து எளியனாகும் இறை இயல்பு புலப்படுகிறது. எடுத்த
இப்பிறவியிலேயே வினைவயத்தால் தொடரவல்ல எழுபிறப்புக்களாகிய
நோயைப் போக்க வல்ல பெயர் ஆதலின் 'இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தை' என்றார். பிறவியை நோய் என்றதால் இராம நாமம் அந்நோய் தீர்க்கும் மருந்து எனப்பட்டது