Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    209.தோலெலும்பு
    209
    உத்தரமேரூர்
    (செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ தூரத்தில்)


    தானதந்த தானதந்த தானதந்த தானதந்த
    தானதந்த தானதந்த தனதான


    தோலெலும்பு சீநரம்பு பீளைதுன்று கோழைபொங்கு
    சோரிபிண்ட மாயுருண்டு வடிவான
    தூலபங்க காயம்வம்பி லேசுமந்து நான்மெலிந்து
    சோருமிந்த நோயகன்று துயராற
    ஆலமுண்ட கோனகண்ட லோகமுண்ட மாலவிரிஞ்ச
    னாரணங்க ளாகமங்கள் புகழ்தாளும்
    ஆனனங்கள் மூவிரண்டு மாறிரண்டு தோளுமங்கை
    யாடல்வென்றி வேலுமென்று நினைவேனோ
    வாலசந்த்ர சூடிசந்த வேதமந்த்ர ரூபியம்பை
    வாணிபஞ்ச பாணிதந்த முருகோனே
    மாயையைந்து வேகமைந்து பூதமைந்து நாதமைந்து
    வாழ்பெருஞ்ச ராசரங்க ளுரைவோனே
    வேலையன்பு கூரவந்து ஏகதந்த யானைகண்டு
    வேடர்மங்கை யோடியஞ்ச அணைவோனே
    வீரமங்கை வாரிமங்கை பாரின்மங்கை மேவுகின்ற
    மேருமங்கை யாளவந்த பெருமாளே








    பதம் பிரித்தல்


    தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு
    சோரி பிண்டமாய் உருண்டு வடிவான


    தோல் எலும்பு = தோலும் எலும்பும். சீ = சீழும். நரம்பு = நரம்பும். பீளை = பீளையும். துன்று = அதிகமானகோழை = கோழையும். பொங்கு சோரி = மேலெழும் இரத்தமும். பிண்டமாய் = பிண்டமாய் உருண்டு. வடிவான = ஒரு வடிவு ஏற்பட்டு.


    தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து
    சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற


    தூல = கண்ணுக்குப் புலப்படும் பங்க காயம் =பாவத்துக்கு இடமான உடலை வம்பிலே சுமந்து =வீணாகச் சுமந்து நான் மெலிந்து = நான் மெலிவுற்று.சோரும் = தளருகின்ற இந்த நோய் அகன்று = (இந்தப்) பிறவி நோய் விலகி துயராற = என் துயரம் ஒழிய.


    ஆலம் உண்ட கோன் அகண்ட லோகம் உண்ட மால் விரிஞ்சன்
    ஆரணங்கள் ஆகமங்கள் புகழ் தாளும்


    ஆலம் உண்ட கோன் = ஆலகால விடத்தை உண்ட தலைவனாகிய சிவபெருமான் அகண்ட லோகம் உண்ட மால் = எல்லா உலகங்களையும் உண்ட திருமால் விரிஞ்சன் = பிரமன் (ஆகியவர்களும்) ஆரணங்கள் ஆகமங்கள் = வேதங்களும்,ஆகமங்களும். புகழ் = புகழும். தாளும் = (உனது) திருவடிகளையும்


    ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை
    ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ


    ஆனனங்கள் மூவிரண்டு = ஆறு திருமுகங்களையும்ஆறிரண்டு தோளும் = பன்னிரு தோள்களையும். அம் கை = அழகிய திருக் கரத்தில் உள்ள ஆடல் வென்றி வேலும் = போரில் வெற்றி கொள்ளும் வேலாயுதமும். என்று நினைவேனோ = என்று நான் தியானிப்பேனோ?


    வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை
    வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே


    வால சந்த்ர = இளம் பிறையை சூடி = சூடியுள்ள சிவபெருமானும் சந்த = அழகிய. வேத மந்த்ர ரூபி அம்பை = வேத மந்திர ரூபத்தினளான அம்பிகைவாணி = கலை மகளை ஒரு கூறாக உடையவள் பஞ்ச பாணி = ஐந்து மலர்ப்பாணங்களைப் படையாகக்கொண்டவள் தந்த = அருளிய. முருகோனே =குழந்தையே.


    மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து
    வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே


    மாயை ஐந்து = ஐந்து மாயை. வேகம் ஐந்து = ஐந்து வேகம் பூதம் ஐந்து = ஐந்து பூதங்கள் நாதம் ஐந்து =ஐந்து நாதங்கள் வாழ் = வாழ்கின்ற பெரும் = பெரியசராசரங்கள் = அசையும் பொருள், அசையாப் பொருள்எல்லாவற்றிலும். உறைவோனே = உறைபவனே.


    வேலை அன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
    வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே


    வேலை = வேண்டிய வேளையில் அன்பு கூர வந்த =அன்பு மிக்க வந்த ஏக தந்த = ஒற்றைக் கொம்புடையயானை கண்டு = விநாயகனாகிய யானையைக் கண்டுவேடர் மங்கை ஓடி அஞ்ச = வேடர்கள் பெண்ணாகிய வள்ளி பயந்து ஓடி வந்த போது அணைவோனே =(அவளை) அணைந்தவனே. { வேல் + ஐ = வேலை அதாவது வேல் என்றால் வேலாயுதம், ஐ என்றால் கடவுள், இறைவன். இந்த அடியின் பொருள்:
    வேலாயுதத்தை உடைய கடவுள் அன்போடு அண்ணா என அழைக்க, எதிரே வந்த விநாயக பெருமானைக்கண்டு வள்ளி அஞ்ச அவளை அணைவோனே- எனவும் கொள்ளலாம்.


    வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற
    மேரு மங்கை ஆள வந்த பெருமாளே.


    வீர மங்கை = வீர இலக்குமி. வாரி மங்கை =பாற்கடலில் தோன்றிய இலக்குமி பாரின் மங்கை = பூ தேவி மேவுகின்ற = இவர்கள் மங்களமாக விளங்கும்மேரு மங்கை = மேருமங்கை எனப்படும் உத்தர மேரூரில் ஆள வந்த பெருமாளே = ஆட்சி செய்யும் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    . மாயை ஐந்து -...தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம்.
    வேகம் ஐந்து..-. காற்றின் ஐந்து குணங்களைக் குறிக்கும்.போக்கு,வரவு, நோய்,கும்பித்தல், பரிசம்.
    ஐம்பூதங்கள்.-.நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்.
    நாதம் ஐந்து.-..தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி,மிடற்றுக் கருவி.
Working...
X