Announcement

Collapse
No announcement yet.

உத்ரகாண்ட் பேரழிவு - காரணம் என்ன? - அதிரவைக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உத்ரகாண்ட் பேரழிவு - காரணம் என்ன? - அதிரவைக

    உத்ரகாண்ட் பேரழிவை இயற்கையின் சீற்றம் என எழுதலாம், பேசலாம். ஆனால், உண்மையில் இந்தச் சீரழிவிற்குக் காரணம் மனிதன். ஆம். நாம்தான். நம்முடைய பல செயல்களின், குறிப்பாக ஐந்து செயல்களின் விளைவு இந்தப் பேரழிவு.


    அழிக்கப்பட்ட காடுகள்

    இமயமலைத் தொடரில் உள்ள காடுகள், குறிப்பாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள காடுகள், பல ஆண்டுகளாக தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலத்தில் அந்த அழிப்பு மிக வேகமாகவும் பரந்தும் நடைபெற்று வருகிறது. 1970-இல் இமயமலைப் பகுதியில் 84.9 சதவிகிதம் காடுகளாக இருந்தது, 2000-ஆம் ஆண்டில் அது 52.8 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. காடுகள் அழியும்போது, மரங்கள் மட்டும் அழிவதில்லை. காடுகளுக்குள் வளரும் பல்வகைப்பட்ட புல் பூண்டு போன்ற சிறு தாவரங்களும் அழிகின்றன. முன்பு 75 சதவிகிதமாக இருந்த இவை, இப்போது 34 சதவிகிதமாகக் குறைந்து விட்டன.

    காடுகள் பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காக அழிக்கப்படுகின்றன. கட்டிடங்கள் கட்ட, சாலைகள் போட, குடியிருப்புகள் அமைக்க போன்ற காரணங்களுக்காக அவை அழிக்கப்படுகின்றன.மின் உற்பத்திக்காக பெரும் நீர் மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்போது, இந்த அழிவு மிகப் பெரிதாக இருக்கிறது. இவற்றை நாம் வளர்ச்சி என்று நினைக்கிறோம். ஆனால், அதற்கான விலை பயங்கரமானது.


    வெப்பமடையும் புவி

    காடுகள் ஏன் தேவை? காடுகளால் நமக்கு என்ன பயன்? பூமியின் மீது விழும் மழையின் வேகத்தை, காட்டில் உள்ள தாவரங்கள் தங்கள் மீது தாங்கிக்கொள்கின்றன. மழை நேரடியாக வேகத்துடன் பூமியில் விழுந்தால், நிலப்பரப்பின் மேல் மண், தண்ணீரோடு அரித்துச் செல்லப்பட்டு நிலம் பலவீனம் அடையும். அப்படி தொடர்ந்து பலவீனம் அடைந்தால், நிலச் சரிவு ஏற்படும். அது நிகழாமல், காடுகளில் உள்ள தாவரங்கள் காப்பாற்றுகின்றன. அது மட்டுமன்றி, வேர்களை நிலத்தின் உள் பரப்பி, நிலத்தைக் கெட்டிப்படுத்துகின்றன. அத்தோடு, நிலத்திற்குக்கீழ் நீரைத் தேக்கி வைக்கவும் செய்கின்றன. வளி மண்டலத்தில் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் இயல்புடைய கரியமில வாயுவை உள்வாங்கிக் கொள்வதால், வெப்பம் குறைகிறது. சில தாவரங்கள் தன்னுள் உள்ள நீரை, நீராவியாக வெளியேற்றுகின்றன. அவை காற்றை ஈரப்பசையுள்ளவையாக வைத்திருக்கின்றன. காடுகள் அழியும்போது, இவை அனைத்தையும் நாம் இழக்கிறோம். நிலச்சரிவும் வெள்ளமும் தவிர்க்க முடியாததாகிறது.

    காடுகள் அழிந்ததையடுத்து, இமயமலைப் பகுதியில் புவி வெப்பமடைதல் அதிகரித்திருக்கிறது. உலகில் உள்ள பல பகுதிகளோடு குறிப்பாக, ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரோடு ஒப்பிடுகையில், இமயமலைத் தொடரில் உள்ள பகுதிகளில் வெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இது போன்று வெப்பம் உயரும்போது, அங்குள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்குகின்றன. வெள்ளம் வருகிறது.

    நகர்மயமாதல்

    சுற்றுலா, கிராமப்புறங்களின் வளர்ச்சி காரணமாக விடுதிகள், ரிசார்ட் போன்ற பல கட்டிடங்கள் எழுகின்றன. இந்தக் கட்டிடங்கள் சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டு கட்டப்படுவதில்லை. விதிகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. இப்போது உத்தரகாசியில் அடித்துச் செல்லப்பட்ட கட்டிடங்களில் பல அஸ்சி, பாகீரதி போன்ற நதிகளின் ஆற்றுப்படுகையிலேயே அமைந்தவை. ‘கட்டிடத்தை விட்டு இறங்கினால், ஆறு’ என்கிற கவர்ச்சிகரமான சுற்றுலா விளம்பரங்களை மெய்ப்படுத்தக் கட்டப்பட்டவை.

    அணைகள்

    இமயத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில வருடங்களாகப் பெரிய அளவில் கட்டப்பட்ட அணைகள், அந்தப் பகுதியின் நில அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மலைச்சரிவுகள் பலவீனமடைந்துள்ளன. இது அந்தப் பகுதியிலுள்ள நிலங்களின் உறுதியைப் பாதித்துள்ளன. நதிகளின் போக்குகள் அணைகளுக்காகத் திருப்பி விடப்பட்டுள்ளன. இது நதிகளின் கீழிறங்கும் (down stream) பகுதிகளில் நீரியல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.

    மழைக் காலத்தில் உபரியாகக் கிடைக்கும் நீரைத் தேக்கி வைக்க அணைகள் கட்டப்படுவதாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், பெரு மழை பெய்து, வேகத்துடன் அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருக்கும்போது, அணைகள் உடைந்து விடாமல் இருப்பதற்காக அவற்றிலிருந்து நீர் திறந்து விடப்படுகிறது. விளைவு, சாதாரண நாள்களில் சலசலத்து சிற்றோடைகளைப் போல் ஓடிக் கொண்டிருக்கும் நதிகள், வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

    பயணிகள்

    அண்மைக் காலமாக இமயத்தின் மடியில் உள்ள புனிதத் தலங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. நாட்டில் ஓரிடத்திலிருந்து நீண்ட தூரத்தில் உள்ள இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் பொருளாதார வசதிகளும் மேம்பட்டிருப்பதால், பலர் திருத்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்கிறார்கள். நாட்டில் முன்னைவிட நடுத்தர மக்களிடையே ஓர் ஆன்மிக நாட்டம் அதிகரித்திருப்பதும் இதற்கு ஓர் காரணம். இமயத்தில் உள்ள அமர்நாத் (ஜம்மு-காஷ்மீர்), கேதார்நாத், பத்ரிநாத் (உத்ரகாண்ட்) ஆகிய இடங்களுக்கு தமிழகத்தின் தென்கோடியில் இருந்துகூட பயணம் செய்கிறார்கள். அண்மையில் நடந்த இயற்கையின் ருத்ர தாண்டவத்தில் கணிசமான அளவிற்கு தமிழகம், ஆந்திர மாநிலப் பயணிகள் சிக்கிக் கொண்டார்கள் என்பதே இதற்குச் சான்று.

    ஆனால், திடீரென அதிகரித்திருக்கும் இந்தப் பயணிகளின் வருகையை எதிர்கொள்ள இமயத்தின் மடியில் உள்ள சிறு கிராமங்கள் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. பயணிகள் வருகையைப் பயன்படுத்திக்கொள்ள அவசர அவசரமாக விடுதிகள் எழுகின்றன. அவை சுற்றுச்சூழலையோ, விதிகளையோ பொருட்படுத்துவதில்லை. அவை, விதிகளைக் கடைப்பிடிக்கின்றனவா என்பதைக் கண்காணித்து வழி நடத்த அரசிடம் முனைப்போ, அமைப்போ இல்லை.

    இவை யாவும் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். ஆனால், பிரச்சினை என ஒன்று வரும் வரை நாம் அவற்றை நினைத்துக் கூடப் பார்ப்பது கிடையாது. அவசியம் ஏற்படாதவரை எதற்கும் நமக்கு அவகாசம் கிடையாது.

    இன்று நம் சக்தியை எல்லாம் திரட்டி, இந்தப் பிரச்சினையை நாம் தாண்டி விடுவோம். ஆனால், இனி இது போன்ற பிரச்சினை ஏற்படாது தடுக்க முயற்சியோ, திராணியோ, நம்மிடம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

    Thanks To : Puthiyathalaimurai
Working...
X