Announcement

Collapse
No announcement yet.

Thirupoonturutthi temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirupoonturutthi temple

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    கோவை.கு.கருப்பசாமி.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    (30)
    ☘ சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர். ☘
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.......)
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    ☘ திருப்பூந்துருத்தி. ☘
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


    இறைவன்:
    புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.


    இறைவி:
    செளந்தரநாயகி, அழகால் அமைந்த நாயகி.


    தலமரம்: வில்வம்.


    தீர்த்தம்: சூரிய தீர்த்தம், காசிப தீர்த்தங்கள்.


    சோழ நாட்டின் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் பதினொன்றாவதாக போற்றப்பெறுகிறது.


    இருப்பிடம்:
    தஞ்சையிலிருந்து திருக்கண்டியூர் சென்று, திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் கண்டியூரை அடுத்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.


    பெயர்க்காரணம்:
    காவிரிக்கும், குடமுருட்டிக்கும் இடையேயாக உள்ளதால் துருத்தி எனப் பெயர் பெற்றிருந்தன.


    காவிரி நீர், பூப்போல மென்மையாக ஓடிப்பாய்ந்து வண்டல்மண் மேட்டிட்டப் பகுதி பூந்துருத்தி எனவும், மலர்வனங்கள் செறித்திருந்த காவிரியாற்றுப் பகுதி பூந்துருத்தி எனவும், சோழ மன்னனுக்கு இங்கு கொல்லனது உலைக்களத்துத் துருத்தியே சிவலிங்கமாகக் காட்சி தர மன்னன் அச் சிவலிங்கத்தை வழிபட்டான்.


    பின் ஊர் மருகி திருத்துருத்தி ஆகிப் போனது.


    பூந்துருத்தி காடவநம்பி அவதரித்த காரணத்தால் இத்தலம் பூந்துருத்தி என்றாயிற்று.


    தேவாரம் பாடியவர்கள்:
    அப்பர்- 4-ல் ஒரு பதிகமும், 5-ல் ஒரு பதிகமும், 6-ல் ஒரு பதிகமும் ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் அப்பர் பெருமானால் கிடைக்கப் பெற்றன.


    கோவில் அமைப்பு:
    ராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது.


    உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளன.


    பெரிய நந்தி விலகியிருக்கிறது.


    கோவில் இரண்டு ஏக்கர் 19 செண்ட் நிலப்பரப்புடன் அமைந்திருக்கிறது.


    இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன.


    ராஜகோபுரத்தின் அடிப்பாகம் கருங்கல்லினாலும், அதற்கு மேலுள்ள பகுதிகள் யாவும் சுதை செங்கல்லான அமைப்புடன் கட்டப்பட்டிருக்கின்றன.


    கோபுரத்தின் அதிட்டானப் பகுதியில் கல்வெட்டைக் காணப்பெறலாம்.


    கும்ப பஞ்சாரம், முனிவர், அரசர் போன்ற சிற்பங்கள் கோபுரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறார்கள்.


    கோபுரத்தின் வடபகுதியில் கரியுரித் தேவர் சிற்பமும், இந்தச் சிற்பத்திற்கு எதிரான திசையில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும் உள்ளன.


    ரிஷிபாந்திகர், உமையொருபாகர், பத்து தலை கொண்ட இராவணன், அம்மையும் அப்பனும் அமர்ந்ததிருந்த சிற்பம், யானை, தேர், முனிவர் ஆகியோருடைய சிற்பங்களும் காட்சி தருகின்றன.


    நுழைவாயிலின் இருபுறத்திலும் துவாரபாலர்கள் இருக்கிறார்கள்.




    கோபுரத்தைத் தாண்டி உள்ளே செல்லவும், வலப்புறத்தில் ஏழூர் விழாவில் பங்குபெறும் பல்லக்கு அமைந்துள்ள பஞ்சமூர்த்தி மண்டபத்தைக் காணலாம்.


    அம்பாள் சந்நிதியில் தெற்கு பார்த்த வண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள்.


    உள்வாயிலைத் தாண்டியதும், வசந்த மண்டபமும், கொடிமரமும், பலிபீடமும், சந்நிதியை விட்டு விலகிய நந்தியும், இருக்கின றன.


    சுவாமி சந்நிதிக்குத் தென்புறமாய் சோமாஸ்கந்தர் மண்டபம் இருக்கின்றது.


    இதற்கடுத்தாற்போல நடராஜசபையும் இருக்கிறது.


    உள்பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதாக்கள், மற்றும் நால்வர் வரலாற்றுச் சித்திரங்களும் உள்ளன.




    கோவிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் இருக்கிறது.


    இங்கிருந்தபடிதான் அப்பர் திருஅங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும், பல பதிகங்களையும் பாடி அருளினார்.


    கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி, மகிடனை அழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பரும், பூந்துருத்தி காடவ நம்பியின் உருவமும் தரிசிக்க சிறப்புடையன.


    இந்திரன், பெருமாள், லக்குமி, சூரியன், காசிபர் ஆகியோர்கள் வழிபட்ட தலம்.


    தல அருமை:
    சப்த ஸ்தானதலங்களுள் இத்தலமும் ஒன்று.


    ஏழூர் திருவிழா நடைபெறும் தலங்களுள் இதுவும் ஒன்று.


    பூந்துருத்திக் காடவ நம்பி அவதார தலம்.


    இத்தலத்தில் நந்தி விலகியுள்ளது.


    அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியேயே நின்ற சம்பந்தருக்கு, இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி கொடுத்தாக தலபுராணம் கூறுகிறது.


    சம்பந்தர் பெருமானின் பல்லக்கை அப்பர் பெருமான் தோளில் சுமந்த தலமிது.


    அப்பர் அமைத்த-- திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் கோயிலுக்கு எதிரில் சற்றுத் தள்ளி இருக்கிறது.


    ஊர் பெரியது.


    மேலை,கீழை என் பிரிவில் --மேலைப்பூந்துருத்தியில் கோயில் உள்ளது.


    கருவறை அமைப்பு:
    கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோவில்கள் விளங்குகின்றன.


    வடக்குக் கருவறைக் கோஷ்டத்தில் பிரம்மாவிற்குப் பதிலாக பிட்சாடன மூர்த்தியைக் காணலாம்.


    விமானத்தின் நான்கு புறங்களிலும் நான்கு கல்நந்திகள் அமைத்திருக்கின்றனர்.


    விமானம் வேசரம்.


    ஏகதளக் கற்றளியாகும்.


    அதிட்டானமானது ஜெகதி, பட்டி, முப்பட்டை,குமுதம் போன்ற உறுப்புகளுடன் உள்ளது.


    கால் எனப்படும் சுவர், கோஷ்டங்களுடனும், அரைத்தூண்களுடனும் அமைந்திருக்க, கொடுங்கையின் கீழ் பூத கண வரிசையும், மேலே யாளி வரிமானமுமாக பிரஸ்தரம் அமைந்துள்ளது.


    திருவிழாக்கள்:
    சித்திரைமாதத்தில் ஏழூர் விழா.
    மற்றும் பிரதான விழாக்கள் நடைபெற்று வருகின்றன.


    கல்வெட்டுக்கள்:
    முதலாம் ஆதித்தன் காலம் தொடங்கி சமீப காலம் வரை உள்ள கல்வெட்டுக்கள் கோவில் வரலாற்றை மட்டுமின்றி நாட்டின் வரலாற்றையும் அழகாக உணர்த்துகின்றன.


    ஐம்பது கல்வெட்டுக்கள் உள்ளன.


    முதலாம் பராந்தகனுடைய தேவியரான சோழமாதேவியாரின் தாயார் முள்ளூர் நங்கையார் விளக்கு வைக்க பொன் கொடுத்துள்ளார்.


    சோமன் எட்டி, நானாந்தூர், மாடலன், கோக்கிளானடிகள் அரிகுலகேசரி மூவேந்த வேளான் ஆகியோரின் கல்வெட்டுக்கள் உள்ளன.


    பூஜை:
    காமீக, ஆகம முறையில் நான்கு கால பூஜை.


    காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை,


    மாலை 4.00 மணி முதல் இரவு 8.15 மணி வரை.


    அஞ்சல் முகவரி:
    அருள்மிகு, புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்,
    திருப்பூந்துருத்தி அஞ்சல்,
    வழி-- கண்டியூர்,
    திருவையாறு வட்டம்,
    தஞ்சை மாவட்டம். 613 103


    தொடர்புக்கு:
    சி. சரவண குருக்கள்.
    94866 71417
    97914 80824


    திருச்சிற்றம்பலம்.
Working...
X