Announcement

Collapse
No announcement yet.

Karivalamvandanallur temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Karivalamvandanallur temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*


    *56- வது நாள்.*
    *நெல்லை மாவட்ட சிவாலயத் தல தொடர்.*
    அருள்மிகு ஒப்பனையம்மன் உடனுறை அருள்மிகு பால்வண்ணநாத சுவாமி திருக்கோயில். கரிவலம்வந்தநல்லூர்.*
    *இறைவன்:* அருள்மிகு பால்வண்ணநாத சுவாமி.


    *இறைவி:* அருள்தரும் ஒப்பனையம்மன்.


    *தீர்த்தம்:* நிட்சேப நதி, சுக்கிர தீர்த்தம்.


    *தல விருட்சம்:* களா மரம்.


    *ஆகமம்:* காமிக ஆகமம்.
    *தல அருமை:*
    கரி என்பதற்கு யானை எனப்பொருள். ஆக, கரிவலம்வந்தநல்லூர்.


    யானை ஒன்று இவ்வூரினை வலம் வந்தமையால், கரிவலம்வந்தநல்லூர் எனப்பெயர்.


    ஆனால், கோயில் கல்வெட்டுக்களில் *ஆர் நாட்டு கரிவர நல்லூர்* எனக் குறிப்புடன் காணப் பெறுகிறது.


    இந்திரன், சயந்தன் எனும் இரண்டும் தேவர்களும் இறைவனின் சாபத்தால், பூவுலகில் காரி, சாந்தன் என்ற பெயர்களில் வேடர் குலத்தில் பிறந்தனர்.


    அவர்கள், இங்குள்ள களாவனத்தில் சுற்றித் திரிந்தபோது, யானை ஒன்று நிற்பதனைக் கண்டனர்.


    அதன் மீது அம்பு தொடுத்தனர்.


    அவ்வானையின் உடலை, அம்பு துளைத்தபோது, அந்த யானை சிவலிங்கத்தைப் பூசனை செய்து கொண்டிருந்தது.


    அம்பெய்த இருவரும் யானையருகே வந்து பார்த்தபோது, சிவபூசை செய்து கொண்டிருந்த யானையை அம்பெய்துக் கொன்று விட்டதை உணர்ந்தனர்.


    இதனின் பாவப்பழி நம்மையே வந்தனை மும் என நினைந்து வருந்தினர்.


    அந்தச்சமயத்தில், இறைவன் அவர்கள் முன்பாகத் தோன்றி, "யானைக்கு வரமளிக்கவே உங்களை இங்கு ஈர்த்து வரச்செய்து இச்செயல் செய்யத் தூண்டுதல் செய்தோம்!" இதற்காக மனம் வருத்தம் வேண்டாம் என்றருளினார்.


    அதன்பின்பு, யானையை உயிர்ப்பித்தார். வரத்தினையும் அளித்தருளினார் இறைவன்.


    இந்த கரிக்கு (யானைக்கு) வரம் தந்தருளிய காரணத்தால் *கரிவர நல்லூர்* எனப் பெயர் உண்டாயிற்று.


    மேலும், காரியும், சாந்தனும் சாபவிமோசனம் பெற்றனர்.


    அவர்களின் பழைய உருவான இந்திரன், சயந்தனாக உருவைப் பெற்றுக் கொண்டனர்.


    இதனால் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திரனும், சயந்தனும் இறைவனை வணங்கிய வண்ணம் நிற்கின்றனர்.


    இச்சரிதத்தை விளக்கும் விதமாக, இங்குள்ள மகாமண்டபம் சுவரில் ஓவியங்களாக இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.


    கரியாகிய யானை வலம் வந்து வரம் பெற்றமையால், இவ்வூர் கரிவர நல்லூர் என அழைக்கப்பட்டு, இப்பெயரே நாளடைவில் கரிவலம் வந்த நல்லூர் என பேச்சு வழக்கினில் மருவிப் போயின.


    *சிறப்பு:*
    இங்கிருக்கும் இறைவனை பால்வண்ணநாதர் என அழைக்கப்படுகிறது.


    லிங்கத் திருவுருவும், பால்போல் வெண்மை நிறைத்து ஒத்து அமையப்பெற்றிருந்தமையால், பால்வண்ணநாதர் எனப்பெயரைப் பெற்றார்.


    பாண்டி நாட்டுப் பஞ்சபூதத் தலங்களுள் தீப்பூதத்திற்கு உரிய தலமாக இது போற்றப்படுகிறது.


    சிவபெருமானின் அடிமுடியைக் காணமுடியாத அண்ணலாகத் தீப்பிழம்பாய், நான்முகனுக்கும், திருமாலுக்கும் தம்மை வெளிப்படுத்திக் காட்சி தந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.


    பஞ்சப் பூதப் பெருந்தலங்களில் 'ஜோதி' தலமாக திருவண்ணாமலை போற்றப்படுவது சைவ உலகின் உணர்வு.


    இதையொட்டியே தீத்தலமாகிய கரிவலம் வந்த நல்லூரின் பால்வண்ணநாதரின் கருவறைக் கோட்டமாகிய மேற்குத் திசையில் சோதி வடிவமாகத் காட்சி தரும் லிங்கோத்பவர்த் திருமேனி இடம் பெற்றுள்ளது


    மேலும் கூடுதலாக இங்குள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுவதும் தீப்பூதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய ஒன்றானது.


    இந்தத் தீர்த்தத்தோடு, சுக்கிர தீர்த்தம், சூல தீர்த்தம், தேவ தீர்த்தம் என பிற தீர்த்தங்களளும் இங்குண்டு.


    இக்கோயிலைக் கட்டியெழுப்பிய அதிவீரராம பாண்டிய மன்னனுக்கு குழந்தைப் பேறு வாய்க்காது போயிருந்தது.


    மன்னன் இறந்த பிறகு, இங்குள்ள பால்வண்ணசுவாமியே ஈமக் கடன் சடங்குகளை மன்னனுக்குச் செய்து திதியும் கொடுத்துள்ளார்.


    இச்சம்பவ இந்நிகழ்வை, இத்திருக்கோயிலில் விழாவாக நடத்தப்பட்டு வருகின்றனர்.


    மனிதர்களின் உடலில் ஏற்படும் பால் ஆண்டிகளை உச்சிகால அபிஷேகத்திற்கு உள்ள பாலை எடுத்து பாலுண்ணியின் மீது பூசினால், உடலிலுள்ள பாலுண்ணிப் பருக்கள் மறைந்து போவது இன்றளவும் கண்கூடு.


    தென்பிரகாரத்தில் இருக்கும் வில்வ மரத்தின் இலைகள் மூன்று இலைகளாக உள்ள அதிசய வில்வமரமாகும்.


    *சிறப்பு சந்நிதி:*
    அருள்மிகு துர்க்கை சந்நிதி.
    வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் தென்புறத்தில், பராசக்தி பீடம் அமைந்திருக்கிறது.


    இப்பீடத்தை அகஸ்தியர் வழிபட்டதாகக் கூறுகின்றனர்.


    ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் இரவு 7.00 மணிக்கு சிறப்பான முறையில் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன.


    உள்பிரகாரத்தில் இருக்கும் வீர சுப்பிரமணியர் சிறப்பு வாய்ந்தவராவார்.


    *நூல்:*
    இத்தல இறைவனைப் பற்றி அதிவீர ராமபாண்டிய மன்னன் *திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி* எனும் நூலை இயற்றி உள்ளார்.


    *குறிப்பு:*
    இத்தலவரலாற்றைக் கூறும் "திருக்கருவைப் பதிற்றுப் பத்ததந்தாதி"- என்பதை *குட்டித் திருவாசகம்* எனப் போற்றப்படுகிறது.


    *பூஜைகள்:*
    திருவனந்தல் - காலை 6.00 மணிக்கு,
    காலசந்தி - காலை 8.00 மணிக்கு,
    உச்சிக்காலம் - பகல் 12.00 மணிக்கு,
    சாயரட்சை - மாலை 5.00 மணிக்கு,
    அர்த்தசாமம் - இரவு 8.00 மணிக்கு.


    *திருவிழாக்கள்:*
    ஆவணித் தபசு விழா பதின்மூன்று நாட்களாக,
    புரட்டாசி நவராத்திரி ஒன்பது நாட்களாக,
    ஐப்பசி சஷ்டி ஏழு நாட்களாக,
    கார்த்திகை தீபத் திருநாள் விழா,
    மார்கழித் திருவெம்பாவை பத்து நாட்களாக,
    பங்குனிப் பிரமோற்சவம் பத்து நாட்களாக,


    *இருப்பிடம்:*
    சங்கரன் கோவிலிலிருந்து இராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலை வழியில் இத்தலம் அமைந்துள்ளது.


    இராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.


    *அஞ்சல் முகவரி:*
    துணை ஆணையர்/செயல் அலுவலர்,
    அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில், சங்கரன்கோவில்,
    துணைக்கோவில் - கரிவலம்வந்தநல்லூர்,


    *தொடர்புக்கு:*
    04636 - 222265


    நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயில், மானூர்.*


    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X