Announcement

Collapse
No announcement yet.

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • “மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச&




    information

    Information

    மெய்ஞானிகள் மற்றும் உண்மையான மகான்கள் மற்றும் யோகிகளின் புகழ் அவர்கள் ஸ்தூல சரீரத்தோடு நடமாடும்போது இருப்பதைவிட மறைந்து சூட்சும சரீரம் பெற்ற பிறகே அதிகரிக்கும். அதிகரிக்கும் என்றால் அப்படி இப்படி அல்ல. நாளுக்கு நாள்…அதிகரிக்கும். பன்மடங்கு அதிகரிக்கும். அவர்கள் அருமையும் காலவோட்டத்தில் தான் மக்களுக்கு புரியும். மகா பெரியவா, ரமண மகரிஷி, பாம்பன் ஸ்வாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஞானானந்த கிரி ஸ்வாமிகள் போன்ற மகான்கள் முதல் மகாகவி பாரதி, விவேகானந்தர், நேதாஜி போன்ற மெய்ஞானிகள் வரை இது தான் உண்மை.










    கடந்த வாரம் ஆங்கிலத் தேதிப்படி நம் பிறந்த நாள். தமிழ் முறைப்படியும் நட்சத்திரப்படியும் தான் நம் பிறந்தநாளை நாம் கொண்டாடுவது வழக்கம் என்றாலும் முகநூலைப் பார்த்துவிட்டு பல நண்பர்கள் காலை முதல் வாழ்த்துக்களை சொல்லி வந்தார்கள். இத்தனை பேரின் வாழ்த்துக்களையும் பெற்றுவிட்டோம்…. எனவே நிச்சயம் தலைவரையும் பெரியவாவையும் தரிசித்துவிட்டு அவர்கள் வாழ்த்துக்களையும் பெற்றுவிடுவோம் என்று கருதி அலுவலகம் முடிந்து நேரே நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றோம்.
    கோவிலில் முதலில் அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சனை செய்தோம். பின்னர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள அஷ்டபுஜ துர்க்கையை தரிசித்துவிட்டு அங்கு எழுந்தருளியிருக்கும் பெரியவா படம் முன்பு சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தோம்.






    நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காணப்படும் மகா பெரியவாவின் மிகப் பெரிய படம்!
    நாம் நங்கநல்லூர் வருவதை தெரியப்படுத்தியிருந்தபடியால் நங்கநல்லூரில் வசிக்கும் நம் வாசகர் வால்டேர் என்பவர் நம்மை சந்திக்க வந்திருந்தார். அவருடன் சேர்ந்து மீண்டும் துர்க்கையை தரிசித்துவிட்டு, மகா பெரியவா படத்தின் முன்பு நமஸ்கரித்துவிட்டு எழுந்தோம். அப்போது நெல்லையிலிருந்து நம் முகநூல் நண்பர் மணிமாறன் என்பவர் நமக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பியிருந்தார். மேலும் அவர் அதில் கூறியிருந்ததாவது, “உங்கள் தளத்தை நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். நீங்கள் செய்யும் பணி மகத்தானது. நானும் என் குடும்பத்தினரும் உங்கள் பணியில் பங்கெடுத்துக்கொள்ள ஆவலாக உள்ளோம். நாங்கள் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர்கள். வரும் டிசம்பர் 1 அவர் ஜெயந்தி வருகிறது. அன்று எங்கள் தந்தையான யோகியைப் பற்றி ஒரு பதிவை நம் தளதில் அளிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். என் குருநாதரும் தந்தையுமான யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஆசி என்றும் தங்களுக்கு உண்டு!” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.


     மகா பெரியவர் முன்பு நாம் இருந்த நேரம் அந்த தகவல் வந்ததால் அவரின் விருப்பமாகவே அதையேற்று செயல்படுத்த விரும்பினோம். 


    இந்நிலையில், நவம்பர் 30 ஞாயிறும் வந்தது. சாதாரண நாள் என்றால் திருவண்ணாமலை ஆஸ்ரமதிற்கே தரிசனம் + கவரேஜுக்காக புறப்பட்டு சென்றிருப்போம். ஆனால் டிசம்பர் 14 அன்று நடக்கவிருக்கும் நம் தளத்தின் முப்பெரும் விழா தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தமையால் எங்கும் செல்ல முடியாத நிலை.
    இந்நிலையில் திடீரென அந்த யோசனை உதித்தது.
    திருவண்ணாமலையில் நம் தள வாசகர் பிரசன்னகுமார் என்பவர் இருப்பது நினைவுக்கு வந்தது. அவருக்கு ஃபோன் செய்து அவரை நம் சார்பாக யோகி ராம்சுரத் குமார் அவர்களின் ஆஸ்ரமத்திற்கு அனுப்பி புகைப்படங்களை மட்டும் எடுத்து அனுப்பச்சொல்வோம். பதிவை மட்டும் நாம் எப்படியாவது இங்கு தயார் செய்துவிடலாம் என்றெண்ணி அவரை தொடர்புகொண்டோம்.
    அப்போது தான் தெரிந்தது அவர் இருப்பது திருவண்ணாமலை அல்ல. ஆம்பூர் என்று. என்னடா செய்வது என்று நாம் யோசித்த தருணம், பிரசன்னகுமார் என்ன ஏது என்கிற விபரத்தை கேட்டார்.
    நாம் நமது யோசனையையும் தேவையையும் சொன்னவுடன், அவர் “அண்ணா நம்பினா நம்புங்க, நான் கடந்த ஒரு வாரமோ யோகி ராம்சுரத்குமார் ஐயாவைத் தான் தியானம் செஞ்சிட்டு வர்றேன். நானே திருவண்ணாமலை ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் போகணும்னு நினைச்சிகிட்டுருந்த நேரத்தில, நீங்க இப்படி ஒரு வேலையை என்கிட்டே கொடுக்குறீங்க. அதுவும் சண்டேவா பார்த்து. இது உங்களோட தீர்மானம் இல்லை. அவரோட தீர்மானம் போலிருக்கு. நோ ப்ராப்ளம். நான் உடனே கிளம்புறேன்ணா.. உங்களுக்கு தேவையான ஃபோட்டோஸ் எடுத்து அங்கிருந்தே மெயில் பண்றேன்” என்றார்.
    நாம் புகைப்படங்களை எங்கு எப்படி எடுக்கவேண்டும் என்பது பற்றி அவருக்கு சில டிப்ஸ்கள் கொடுத்தோம். உடனே ஆம்பூரில் நண்பர் ஒருவரிடம் காமிராவை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலை புறப்பட்டார்.
    சொன்னபடி ஆஸ்ரமம் சென்று யோகியை தரிசித்துவிட்டு நமக்காகவும் பிரார்த்தனை செய்துவிட்டு மாலை அனைத்து புகைப்படங்களும் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டார்.
    திரு.பிரசன்னகுமார் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி!


    நடந்ததை இன்னும் நம்மால் நம்பமுடியவில்லை.
    இது எப்படி சாத்தியமாயிற்று?
    சிம்பிள்…. WHEN THE STUDENT IS READY, GURU APPEARS!!
    யோகி ராம்சுரத் குமார் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு சக்தி விகடன் இதழ் மற்றும் தினமலர் இணைத்தில் நாம் தேடித் திரட்டித் தந்துள்ள தேன்துளிகள் கீழே தரப்பட்டுள்ளன.
    படியுங்கள்… உண்மையில் தேனை சுவைத்தது போல, உடலும் உள்ளமும் அத்தனை இதம் பெறும்.
    அது தான் குருவின் மகிமை!!
    - ‘ரைட் மந்த்ரா’ சுந்தர்
    ===================================================
    தேவாமிர்தம்; தேவாமிர்தம்!

    ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள்
    பல வருடங்களுக்கு முன்பு, ஒரு வெள்ளிக்கிழமை. மாலை வேளை. சத்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளை தரிசிக்க திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீஞானானந்த தபோவனத்துக்குச் சென்றேன். மன சஞ்சலம் ஏற்படும்போதெல்லாம் சுவாமிகளை தரிசித்தால், துன்பங்கள் விலகும்!
    இரவில் சுவாமிகளை தரிசித்து, பிரசாதம் பெற்றுக் கொண்டு, விடியற் காலையில் சென்னைக்குப் புறப்பட லாம் என்று நினைத்தேன். சனிக்கிழமை காலை சுமார் 7:30 மணி. சுவாமிகளை தரிசிக்க நீண்ட வரிசை. நான் ராமநாமா ஜபித்தபடி வரிசையில் நின்றிருந்தேன். சுவாமிகளுக்கு அருகில் வந்ததும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்து, பிரசாதத்துக்காகக் கையை நீட்டினேன். சிரித்துக் கொண்டே தீர்த்தம் கொடுத்த சுவாமிகள், ‘‘இப்பவே நாம பொறப்டுடறதா உத்தேசமோ?’’ என்று கேட்டார்.
    தயங்கியபடி, ‘‘ஆமாம் குருநாதா. உத்தரவு கொடுத்துட்டா, பொறப்படலாம்னு உத்தேசம்!’’ என்றேன்.
    சுவாமிகள் விடவில்லை. ‘‘இன்னிக்கு தங்கிப்டு நாளக்கிதான் பொறப்டுவோமே. இப்ப சம்மர் வெகேஷன்தானே? ஸ்கூலெல்லாம் லீவா இருக்குமே! இன்னிக்கு சனிக்கிழமை. சாயந்திரம் ஹனுமன் சந்நிதியில் விசேஷ பூஜை நடக்கும். தரிசிச்சிட்டு நாளக்கிக் காலம்பற பொறப்படலாம்… என்ன சரிதானே?’’ என்றார். வாஸ்தவம்தான். அப்போது, நான் சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றினேன்.
    சுவாமிகளின் கட்டளையை மீற முடியாது. காரண காரியத்துடன்தான் நம்மை தங்கிப் போகச் சொல்கிறார் என்று புரிந்தது. ‘‘உத்தரவுப்படியே நடக்கிறேன்’’ என்று பணிவுடன் கூறிவிட்டு நகர்ந்தேன்.
    மாலை வேளை. ஸ்ரீஹனுமன் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம். ஹனுமனுக்கு புஷ்ப அலங்காரத்துடன் வடை மாலையும் சார்த்தியிருந்தார் அர்ச்சகர். ஸ்வாமியை தரிசித்தபடி அங்கு நின்றிருந்தேன். என்னிடம் வந்த அர்ச்சகர், ‘‘இன்னிக்கு ஸ்திர வாரமா (சனிக்கிழமை) இருக்கறதால, ஸ்வாமிக்கு சஹஸ்ர நாமார்ச்சனை பண்ணலாம்னு இருக்கேன். புஸ்தகம் தர்றேன். அதைப் பாத்து நீங்க நாமாவளி வாசிங்கோ… நான் அர்ச்சனை பண்றேன்’’ என்றார். ஒப்புக் கொண்டேன்.


    முக்கால் மணி நேரத்தில் அர்ச்சனை முடிந்தது. சந்நிதியில் கூட்டமில்லை. ஐந்து அல்லது ஆறு பேர் இருந்தனர். அவர்களுடன் நீண்ட ஜடையும், தொளதொளவென்று பழுப்பேறிய பெரிய ஜிப்பா- பைஜாமா அணிந்த பெரியவர் ஒருவரும் நின்றிருந்தார். அவர் கண்களில் ஞான ஒளி ஒன்று தென்பட்டது. வெளியே வந்த அர்ச்சகர், பெரியவரைக் கை கூப்பி நமஸ்கரித்தார். அவரும் புன்னகைத்தபடி ஆசீர்வதித்தார். ‘அவர் யார்?’ என்று அர்ச்சகரிடம் கேட்கத் தோன்றவில்லை. ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணி கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர். அனைவரும் கண்ணில் ஒற்றிக் கொண்டோம். பிரசாதப் பாத்திரத்துடன் வெளியே வந்த அர்ச்சகரிடம், ‘‘ஸ்வாமிக்கு என்ன நிவேதனம்?’’ என்று கேட்டேன்.
    ‘‘வெண் பொங்கல்’’ என்றார்.
    ‘‘எப்பவும் ஸ்வாமிக்கு சக்கர பொங்கல், புளியோதரை எல்லாம் நிவேதனம் பண்ணுவேளே. இன்னிக்கு வெண் பொங்கலோடு நிறுத்திப்டேளே!’’ என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.

    அவர், ‘‘கஷ்டமாத்தான் இருக்குது. ‘திருக்கோவிலூர் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன்’னு சொல்லிட்டுப் போன பரிசாரகர் இன்னும் வந்து சேரலே. அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு வடையத் தட்டி, ஒரு படி வெண் பொங்கலயும் பண்ணிப்டேன். ஆனா, நிவேதனம் பண்றச்சே சக்கரைப் பொங்கல், புளியோ தரை, எள்ளோரைனு எல்லா பேரையும் சொல்லி அர்ப்பணிச்சுட்டேன். ஸ்வாமி நிச்சயம் சாப்ட்ருப்பாரோன்னோ!’’ என்றபடி என் கையில் வெண் பொங்கலைக் கொடுத்தார்.
    எனக்குப் பொறுக்கவில்லை. ‘‘இதென்ன ஸ்வாமி தர்ம நியாயம்! பதார்த்தங்களின் பேரை மாத்திரம் சொன்னா… ஸ்வாமி எப்படி ஏற்றுக் கொள்வார்?’’ என அவரிடம் வாதிட்டேன். அர்ச்சகர் சிரித்துக் கொண்டார்.

    சற்றுத் தூரத்தில் இருந்து எங்களை கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர், நாங்கள் ‘என்ன பேசிக் கொண்டோம்’ என்பதை அருகில் நின்றிருந்தவரிடம் ஆங்கிலத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டார். வட நாட்டுக்காரர் போலிருந்த அவருக்கு தமிழ் தெரியவில்லை. புன்முறுவலுடன் என்னை ஊன்றிப் பார்த்தார் அவர்.
    பிரசாதம் கொடுக்க பவ்வியமாக பெரியவர் முன்போய் நின்றார் அர்ச்சகர். அவர் சற்றுக் குனிந்து, தன் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, குழித்து நீட்டினார். அந்தக் கை நிறைய பொங்கலை எடுத்து வைத்தார் அர்ச்சகர். பெரியவர், ‘கோகர வ்ருத்தி’யாக (பசுமாடு உண்பது போன்று) அதை அப்படியே சாப்பிட ஆரம்பித்தார். அனைவருக்கும் பிரசாதத்தை விநியோகித்த அர்ச் சகர் பெரியவரிடம் வந்து, அவர் கையில் மேலும் பொங்கலை அள்ளிப் போட்டார்.
    பிறகு, ‘‘குருவின் ‘உச்சிஷ்ட’மா (உண்டதில் மீதி) எனக்கு கொஞ்சம் பிரசாதம் அனுக்கிரகிக்கணும்!’’ என்று ஜாடையால் புரிய வைத் தார். சந்தோஷத்தோடு இரு கைகளையும் அர்ச்சகரிடம் நீட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார் பெரியவர். அதிலிருந்து ஒரு கொட் டைப் பாக்கு அளவு பொங்கலை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட அர்ச்சகருக்கு ஆனந்தம் பிடிபட வில்லை.

    ‘‘தேவாமிர்தம்… தேவாமிர்தம்!’’ என்றவாறே என்னிடம் வந்து, ‘‘சாதுக்கள் உண்ட உச்சிஷ்டம் ஜன்மாந்திர புண்ணியம் இருந்தாத்தான் கிடைக்கும். போங்கோ… நீங்களும் வாங்கிச் சாப்டுங்கோ!’’ என்று அவசரப்படுத்தினார் அர்ச்சகர். பெரியவர் முன் போய் நின்ற நான், அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டுப் பிரசாதத்துக்காக கையேந்தி நின்றேன். அவரோ, ‘நீயே எடுத்துக் கொள்!’ என்று கண் ஜாடை காட்டினார்.
    நானும் ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். சிரித்தவாறு சைகையால் இன்னும் கொஞ்சம் எடுத்துச் சாப்பிடச் சொன்னார் பெரியவர். எடுத்தேன், சாப்பிட்டேன். என்ன ஆச்சரியம்! அது, சர்க்கரைப் பொங்கலாக இனித்தது. மீண்டும் எடுக்கச் சொல்லி, ஜாடை காட்டினார். எடுத்து வாயில் போட்டேன். பிரமித்தேன். இப்போது அது புளியோதரையாக ருசித்தது.
    மீண்டும் கொஞ்சம் எடுத்து உண்டேன். அது, எள்ளோரையாக நாவில் படர்ந்தது. நான், உணர்ச்சி வசப்பட்டு, அந்தப் பெரியவரின் பாதங்களில் விழுந்து அழ ஆரம்பித்தேன். அவர், என் முதுகில் தட்டி எழுந்திருக்கச் சொன்னார். தன் உள்ளங்கைகளை பைஜாமாவில் துடைத்துக் கொண்டார். பிறகு, என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்.




    என்னருகில் வந்த அர்ச்சகரிடம், ‘‘சுவாமி! என்னை நீங்க மன்னிக்கணும். நான் ஏதோ தெரியாத்தனமா ஒங்ககிட்ட, ‘ஸ்வாமிக்கு முன்னாடி பிரத்தியட்சமா வைக்காத பதார்த்தங்களின் பேரை மாத்திரம் சொல்லி நிவேதிச்சா ஸ்வாமி எப்படி ஏத்துப்பார்’னு வீம்புல கேட்டுட்டேன். அது தப்புங்கறத இந்த மகான் மூலமா தெரிஞ்சுண்டுட்டேன். நீங்க வாயால சொல்லி நிவேதிச்ச அவ்வளவு பதார்த்தங்களையும், அந்தந்த ருசியோட பெரியவரோட உச்சிஷ்ட பிரசாதம் மூலமா தெரிஞ்சுண்டுட்டேன். ஆத்மார்த்தமான அர்ப்பணம்தான் முக்கியம்கறத புரிஞ்சுண்டேன்!’’ என்று அர்ச்சகரின் கைகளை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டேன்!
    ஹனுமனை நோக்கி கை கூப்பினார் அர்ச்சகர். திரும்பிப் பார்த்தேன். எங்கோ வெறித்துப் பார்த்தபடி அந்தப் பெரியவர் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
    அர்ச்சகரிடம், ‘‘அவர் யார்னு ஒங்களுக்குத் தெரியுமா?’’ என்றேன் நான்.
    ‘‘தெரியும். வடக்கேருந்து வந்துள்ள சாது அவர். நம்ம குருநாதரிடம் அவருக்கு ரொம்ப ஈடுபாடு. அடிக்கடி தபோவனம் வருவார். யோகி ராம்சுரத் குமார் சுவாமிகள்ங்கறது அவர் பேரு. ‘விசிறி சாமி’னும் கூப்பிடுவா. ஏன்னா… எப்பவுமே அவர் கைல ஒரு விசிறி இருந்துண்டிருக்கும்!’’ என்றார் அர்ச்சகர். மீண்டும் திரும்பிப் பார்த்தேன். மெதுவாக விசிறியபடி நடந்து கொண்டு இருந்தார் விசிறிச் சாமி. குருநாதர் தங்கிப் போகச் சொன்னதன் காரணம் இப்போது புரிந்தது!
    =====================================================================
    திருவண்ணாமலையில் இருந்தபடி யோகியார் சாப்பிட சாப்பிட… காஞ்சிபுரத்தில் இருந்த மகா பெரியவாளின் வயிறு நிரம்பியது!
    யோகியும் மகா பெரியாவும் சம்பந்தப்பட்ட மற்றொரு நிகழ்வை பார்ப்போம் வாருங்கள்…



    ஒரு முறை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில், மேடையில் அமர்ந்து பக்தர்களிடையே அருளுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது ஆடு ஒன்று, வாசலைக் கடந்து மடத்தின் உள்ளேயே வந்து விட்டது. பெரியவா அமர்ந்திருந்த மேடைக்கு அருகே வந்து நின்று, ஸ்வாமிகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்தில் சிலர் எழுந்து, விறுவிறுவென சென்று ‘ச்சூ… ச்சூ!’ என்று அந்த ஆட்டை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர்.இதைக் கவனித்த ஸ்வாமிகள் உரையை சற்று நிறுத்தி விட்டு, ஆட்டை விரட்ட முயன்ற பக்தர்களைத் தடுத்தார். ”அதை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். அதுக்குப் பசிக்குது. ஏதாவது தேவையா இருக்கும்” என்றவர், தனக்கு முன்னால் பித்தளைத் தட்டில் இருந்த வாழைப்பழங்கள் சிலவற்றை எடுத்து, ஆட்டின் முன் நீட்டினார். அந்த ஆடு உற்சாகத்துடன் ஸ்வாமிகளுக்கு அருகே வந்து, ஒவ்வொரு பழமாக வாங்கிச் சாப்பிட்டது. சில விநாடிகளுக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேறியது.


    பிறகு ஸ்வாமிகள், ”இப்ப ஆடு ரூபத்துல வந்துட்டுப் போனது தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள். தபோவனத்துல உட்கார்ந்துண்டிருக்கிற அவருக்கு என்னவோ ஒரு பசி… என்கிட்டேர்ந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடணும்னு தோணி இருக்கு. அதான் நேரா
    இங்கே வந்துட்டார். நான் வாழைப்பழங்களைக் கொடுத்ததும், அதைச் சாப்பிட்டுட்டு சாந்தமா புறப்பட்டுப் போயிட்டார்” என்று சொல்ல… பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்!


    தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத அந்த காலகட்டத்தில்… பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும்… நேருக்கு நேர் சந்திக்காமலேயே தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மகான்கள் பரிமாறிக் கொள்வர் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம்.
    தபோவனம் மகானின் பசியை காஞ்சி ஸ்வாமிகள் தீர்த்தார். இதேபோல் ஸ்வாமிகளுக்கே ஆகாரம் அளித்தார் மகான் ஒருவர். என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா?
    ஒரு முறை ஸ்வாமிகளுக்கு உடல்நலக் குறைவு. காஞ்சிபுரத்தில் ஓய்வில் இருந்தார் ஸ்வாமிகள். இரண்டு மூன்று நாட்களாக ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத்குமார், மகா பெரியவாளின் நிலையை, தன் மனக் கண்ணால் அறிந்தார். ‘இப்பேர்ப்பட்ட மகான் ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கலாமா?’ என்று சிந்தித்தவர், அருகில் இருந்த பக்தர் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து வரும்படி சொன்னார்.


    உடனே அந்த பக்தர், ஆரஞ்சுப் பழத்தை எடுத்து வந்து, யோகியின் கையில் உள்ள தேங்காய் சிரட்டையில் வைத்தார். ஆரஞ்சு சுளைகளை ஒவ்வொன்றாக எடுத்து, மிகுந்த ரசனையுடன் நிதானமாக உட்கொள்ளத் துவங்கினார் யோகி. திருவண்ணாமலையில் இருந்தபடி ஒவ்வொரு சுளையாக யோகியார் சாப்பிட சாப்பிட… காஞ்சிபுரத்தில் இருந்த மகா பெரியவாளின் வயிறு நிரம்பியது; மனம் குதூகலித்தது; சோர்வு நீங்கியது. முழு ஆரஞ்சுப் பழத்தை யோகி சாப்பிட்டு முடித்த வேளை யில், மகா பெரியவாள் எழுந்து உட்கார்ந்து கொண்டார். அவரின் முகம், வழக்கத்தை விட கூடுதல் பொலிவுடன் இருப்பதைக் கண்டு மடத்து ஊழியர்கள் அதிசயித்தனர். மடத்து மேனேஜரைக் கூப்பிட்டார்; உதவியாளர்களை வரச் சொன்னார்; இயல்பு வாழ்க்கையில் ஈடுபடத் துவங்கினார் மகா பெரியவா.
    =====================================================================

    யார் இந்த யோகி ராம்சுரத்குமார்?
    மலையே சிவலிங்கமெனக் காட்சி தரும் திருவண்ணாமலை, அற்புதமான புண்ணிய பூமி. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் என மகான்களின் திருப்பாதம் பட்ட பூமியில், காசியில் இருந்து வந்து இங்கேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் ‘விசிறி சுவாமிகள்’ எனப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். டிசம்பர் 1-ஆம் தேதி, அவரின் ஜயந்தி நன்னாள்.
    ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி அன்று, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஆஸ்ரமத்தில் அவரது ஜயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். அதேபோல், தமிழகத்தின் பல ஊர்களிலும் யோகியின் ஜயந்தி விழாவை, அவருடைய பக்தர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

    சிலர் வெளிமுகமாகவும், இன்னும் சிலர் உள்முகமாகவும் இறையனுபவம் பெறுகின்றனர். அதோ, அந்த தூணுக்கு கீழே நிற்கிறாரே, அவர் உள்முகமாக இறையனுபவம் பெற்றவர். அவர் உண்மையானவர்” – இப்படி அந்த மகான் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார் என்று யோகி ராம்சுரத்குமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருசமயம் காஞ்சிமகாபெரியவரை சந்திக்கச் சென்று, கூட்டத்தின் கடைசியில் ஒரு ஓரமாக நின்றிருந்தபோதுதான், பெரியவர் இப்படிச் சொல்லி அவரை அழைத்தார். கங்கை கரையில் நர்த்தரா என்ற ஊரில் வசித்த ராம்தத்குன்வர், குஸும்தேவி தம்பதியினருக்கு, 1918 டிசம்பர் 1ல் பிறந்தவர் ராம்சுரத்குன்வர். “ராமன் மீது அன்புள்ள குழந்தை’ என்பது இதன் பொருள். இவர் சிறு வயதில் ஒரு குருவி மீது விளையாட்டாக கயிறை வீச, அது கயிறின் பாரம் தாங்காமல் உயிரை விட்டது. இந்த சம்பவம் ராம்சுரத்குன்வரை பெரிதும் பாதித்தது. பிறப்பு, இறப்பு பற்றி சிந்தித்தவர், விடைதேடி காசி சென்றார். பின், குருவின் மூலமாக இறையனுபவம் பெற விரும்பியவர், திருவண்ணாமலையில் ரமணர், புதுச்சேரியில் அரவிந்தரை சந்தித்தார். அதன்பின், கேரளாவில் பப்பாராம்தாஸ் சுவாமியிடம் சென்றார். அவர், “”ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்” என்ற மந்திரத்தை உபதேசித்தார். அதை இடைவிடாமல் உச்சரித்தவர் புதிதாகப் பிறந்ததைப் போல் உணர்ந்தார். பல தலங்களுக்கும் யாத்திரை சென்றவர், 1959ல் திருவண்ணாமலை வந்தார். யோகிராம்சுரத்குமார் என்று அறியப்பட்டவர், தன்னை பிச்சைக்காரன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். கையில் ஒரு கொட்டாங்குச்சி (தேங்காய் சிரட்டை) மற்றும் விசிறி வைத்துக் கொண்டதால் “விசிறி சாமியார்’ என்றே அழைக்கப்பட்டார்.


    18 ஆண்டுகள் கிரிவலப் பாதையிலும், ரோட்டோரத்திலும், ரயில்வே ஸ்டேஷனிலுமாக தங்கியவர், பக்தர்களின் விருப்பத்திற்காக இங்கு தாமரை வடிவில் ஆசிரமம் கட்டினார். தினமும் மூன்று வேளையும் இங்கு அன்னதானம் நடக்கிறது. முகப்பில் பிரமிடு வடிவ வரவேற்பு மண்டம் உள்ளது. ஆசிரமத்தில் யோகிராம்சுரத்குமார் முக்தி பெற்ற இடத்தில் ஒரு லிங்கமும், முன் மண்டபத்தில் உயிரோட்டத்துடன் தத்ரூபமாக வடிக்கப்பட்ட மூன்று சிலைகளும் உள்ளன. இதற்கு பின்புறம் அவர் சித்தியடைந்த இடத்தில், அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளன. இங்குள்ள வேதபாடசாலையில் ராம்சுரத்குமாரின் உயிர் பிரியும் நிலையில், இத்தாலியில் செய்யப்பட்ட மார்பிள் சிலையும் உள்ளது. “பெயரைச் சொன்னால் நீங்கள் திரும்புவதைப்போல, இறைவனும் அவர் பெயரைச் சொல்லும்போது திரும்பிப் பார்க்கிறார். ஆகவே, இறைவனாகிய அப்பாவின் பெயரைச் சொல்லி கூப்பிடுங்கள். உங்கள் விருப்பத்தை அவர் நிறைவேற்றி வைப்பார். இதற்காக தனியே பிரார்த்தனை செய்யத் தேவையில்லை’ என அருளாசி வழங்கிய யோகி ராம்சுரத்குமார், மாசி மாதம் தேய்பிறை துவாதசி நாளில் முக்தியடைந்தார்.

    ‘யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் என மூன்று முறை அழைத்தால் போதும்… நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்னை இருந்தாலும் இந்தப் பிச்சைக்காரன் நிச்சயமாக வந்து உதவி செய்வான்’ என்று அந்த மகான் சங்கல்பம் செய்திருக்கிறார்.
    நீங்களும் மனம் ஒருமித்து அவர் திருநாமத்தை, மனதாரச் சொல்லுங்கள். உங்களுக்கும் நல்லது நடக்கும்!
    (நன்றி : ரமணி அண்ணா, குடந்தை ஸ்யாமா | சக்தி விகடன் & தினமலர்.காம்)
    - See more at: http://rightmantra.com/?p=14989#sthash.j5uOfvbE.dpuf
    Last edited by soundararajan50; 02-12-14, 14:37.
Working...
X