Announcement

Collapse
No announcement yet.

காவிரி பொங்கி பெருக...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காவிரி பொங்கி பெருக...

    பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்ற மனித வாழ்க்கையில், தியாக சீலர்கள் மட்டுமே காலம் கடந்தும், அழியா புகழுடன் வாழ்கின்றனர். தான், தன்னுடையது, தனக்கு மட்டுமே என்ற சுயநலத்தை தொலைத்தவர்களால் தான் இந்த பாரத பூமி, இன்றும் ஜீவ பூமியாக இருக்கிறது என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்:
    கனக சோழனும், அவன் மனைவி செண்பகாங்கியும் சோழ நாட்டை ஆண்டு வந்த சமயம் அது. பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதி, திருவலஞ்சுழி எனும் திருத்தலத்தில், விநாயகரை வலம் வந்து, பெரும் பள்ளத்தில் விழுந்து, பாதாளத்தில் புகுந்து மறைந்தது.
    இதனால், அப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் தவித்துப் போய் மன்னரிடம் முறையிட்டனர். பாதாளத்தில் புகுந்து மறையும் தண்ணீரை வெளிக் கொண்டு வர வழி தெரியாமல் தவித்தார் மன்னர்.
    அப்போது, வானில்,'மன்னா... மறைந்த காவிரி மறுபடியும் வெளிவர வேண்டுமானால், அது விழுந்து மறையும் பள்ளத்தாக்கில் நீயும், உன் மனைவியும் விழ வேண்டும் அல்லது உத்தமமான முனிவர் ஒருவர் அப்பள்ளத்தாக்கில் விழுந்தால், காவிரி மறுபடியும் திரும்பும்...' என்று அசரீரி கேட்டது.
    மக்களின் நல்வாழ்விற்காக மன்னரும், அவர் மனைவியும் உயிர் துறக்க தீர்மானித்தனர்.
    அதை அறிந்த அமைச்சர்கள், 'மன்னா... அவசர முடிவு வேண்டாம்; திருக்கோடீச்சுரத்தில் ஏரண்ட ரிஷி என்பவர் தவம் செய்து வருகிறார். அவருடைய அனுமதி பெற்று, அதன் பின் போகலாம்...' என்றனர்.
    அதை ஏற்ற மன்னர், மனைவியுடன் சென்று ஏரண்ட முனிவரை வணங்கினார்.
    முனிவர், மன்னனை, 'தீர்க்காயுசாக இரு...' என்றும், அரசியை, 'தீர்க்க சுமங்கலியாக இரு...' என்றும் ஆசி வழங்கினார்.
    அப்போது அமைச்சர்கள் குறுக்கிட்டு, 'மகா முனியே... எங்கள் சோழ நாட்டை வளம் செய்த காவிரி நதி, தற்போது, திருவலஞ்சுழியில் விநாயகரை வலம் வந்து, பாதாளத்தில் விழுந்து மறைந்து விட்டது. அக்காவிரியை மறுபடியும் வரவழைப்பதற்காக அரசனும், அரசியும் தங்கள் உயிரை தியாகம் செய்ய தீர்மானித்து, அதற்கு முன், உங்கள் ஆசியை வேண்டி வந்துள்ளனர். ஆனால், நீங்களோ அவர்களுக்கு வேறு விதமாக ஆசி வழங்கியுள்ளீர்களே...' என்றனர்.
    உடனே முனிவர், 'அமைச்சர்களே... என் வார்த்தை பொய்க்காது; காவிரியை மீண்டும் வரவழைப்பதற்காக நானே அப்பள்ளத்தில் விழுகிறேன்; அரசனும், அரசியும் நீண்ட காலம் வாழ்வர்...' என்று கூறி, பள்ளத்தில் விழுந்தார். அடுத்த வினாடியே காவிரி பொங்கி பெருகத் துவங்கியது.
    மக்கள் மகிழ்ந்தனர். அதன்பின் அரசரும், அரசியும், நீண்ட காலம் வாழ்ந்து, திருப்பணிகள் பல செய்து, சிவபெருமானின் திருவடிகளை அடைந்தனர்.
    முனிவர் உயிர் தியாகம் செய்த இடத்தில், சுயம்பு லிங்கம் தோன்றி, இன்று வரை வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    பாதாளத்தில் மறைந்த நதியை, மக்களின் நன்மைக்காக, உயிரைக் கொடுத்து மீட்டு வந்தது அந்தக் காலம்; தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல், அதில் அரசியல் செய்து வயிறு வளர்க்க துடிப்பது இந்தக் காலம்.
    ஆண்டவன் படைத்த பூமியும், அதனுள் கொட்டிக் கிடக்கும் இயற்கை செல்வமும், அவன் படைத்த அனைத்து உயிர்களுக்கும் பொது என்பதை சுயநல மனித சமுதாயம் என்று உணருமோ, அன்று, காவிரி போன்ற நதிகள், எந்த உயிர் தியாகமும் இன்றி பொங்கி வருவாள்.


    பி.என்.பரசுராமன்


    விதுர நீதி!
    உலக வாழ்க்கை என்பது ஒரு நதி. அதில், ஐம்புலனாசைகள் தண்ணீராக உள்ளன. காமம், சினம் என்ற முதலைகள் அதில் நிறைந்துள்ளன. மீண்டும் மீண்டும் பிறத்தல் என்ற நீர்ச்சுழல்கள், நம்மை அச்சுறுத்துகின்றன. இத்தகைய பயங்கரமான ஆற்றை, சுயக்கட்டுப்பாடு என்ற படகின் உதவியோடு தான் கடக்க வேண்டும். — என்.ஸ்ரீதரன்.
    Dinamalar
Working...
X