ஸ்ரீமந் நாராயணஸ்ய ஜகதீச்வரத்வ நிரூபணம்
(ஸ்ரீமந் நாராயணனுக்கு ஜகதீச்வரத்வ-நிரூபணம்)
இப்படி ஸத்யமாக நிரூபிக்கப்பட்ட ப்ரபஞ்சத்திற்கு ஸ்ரீய :--பதியான ஸ்ரீமந்நாராயணனே ஈச்வரன். இவனுக்கு ஒரு ஈச்வரனில்லைன. நாராயணாநுவாகத்தில் நாராயணனைத் துடங்கி இவன் ப்ரபஞ்சத்திற்கு ஈச்வரனென்றும், ஆத்மேச்வரனென்றும், சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு ஆத்மேச்வரன் என்பதற்குத் தனக்குத் தானே ஈச்வரன் என்று பொருளாய் தனக்கு வேறு ஈச்வரனில்லை என்று சொன்னதாகிறது. ச்வேதாச்வதரம் முதலான சில உபநிஷத்துக்களில் சிவனுக்கு ஜகதீச்வரத்வம் ( ஸர்வ ஜகத்துக்கும் ஈச்வரனாய் இருக்கும் தன்மை சிவனுக்கே உள்ளது) சொல்லுவதாகத் தோன்றினாலும், அங்குள்ள சிவசப்தம் முதலான சப்தங்களுக்கு சுத்தன் க்ஷேமத்தைச் செய்பவன் என்று பொருளாய் நாராயணனையே சொல்லுகிறதென்று கொள்ளவேண்டும். இருவரும் ஈச்வரர்கள் என்றாவது, சில கல்பத்தில் (ப்ரஹ்மாவினுடைய ஒரு நாள் அதாவது 1000 மனித யுகங்கள் கொண்டது ஒரு கல்பம் ) சிவன் ஈச்வரன், சில கல்பங்களில் நாராயணன் ஜகதீச்வரன் என்றாவது இரண்டு ச்ருதிகளுக்கும் தாத்பர்யம் கொள்க்கூடாதோ வென்றால் அப்போது ஈச்வரர்கள் அனேகரென்றும் ஒவ்வொருவருக்கும் ஈச்வரத்வம் (ஈச்வரனாய் இருக்கும் தன்மை) வந்தேறி (புதிதாக வந்தது - எப்பொழுதும் உள்ளது அல்ல) யென்றும் ஏற்படுகிறபடியால், ப்ரபஞ்சத்திற்கு ஒருவன் சாஸ்தா ( ஆள்கிறவன்) இரண்டாவது சாஸ்தா கிடையாது என்று சொல்லும் ச்ருதிகளுக்கும், சிவன் தான் ஜகதீச்வரன் என்று தொடங்கி அவனுக்கு ஜகதீச்வரத்வம் ஸ்வதஸ்-ஸித்தம் (ஒரு காரணத்தையும் எதிர்பாராமல் ஸ்வபாவமாகவே உள்ளது), ஒரு காரணத்தால் வந்ததன்று என்று சொல்லுகிற ச்வேதாச்வர ச்ருதிக்கும் விரோதம் வரும்.

ஆனால் நாராயண சப்தத்திற்கு ருத்திரன் பொருள் என்று சொல்லி ருத்திரனே ஜகதீச்வரன் என்று ஏன் சொல்லக்கூடாதென்று ஆக்ஷேபம் பண்ணக்கூடும். நாராயண சப்தம் ஒருவனுக்கே பெயராய் மற்றொரு தேவதையைச் சொல்லமாட்டாது. சம்பு,சிவன் முதலிய சப்தங்கள் அநேகார்த்தமுள்ளதாக நிகண்டுக்களில் சொல்லப்பட்டிருப்பதால், அந்த சப்தங்கள் பொதுவானதாய், நாராயணனையும் சொல்லக்கூடியவை. ஆகையால் சிவ, சம்பு ஆதி சப்தங்களால் சில உபநிஷத்தில் ஜகதீச்வரன் சொல்லப்பட்டிருந்தாலும், அவைகள் நாராயணனுக்கே பெயராய் அங்கும் அவனொருவனுக்கே ஜகதீச்வரத்வம் சொன்னதாய் முடிகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



இவன் ஈச்வரனாகையாவது-இப்பிரபஞ்சம் எல்லாவற்றிற்கும் உடையவனாயும் நியமிக்கிறவனாயும் (கட்டளையிடுபவன் - ஆஜ்ஞாபிக்கிறவன்) ஆள்கிறவனாயுமிருக்கை (வஸ்துக்களை தன்னிஷ்டப்படி உபயோகப்படுத்திக்கொள்ள வல்லவன்). ஸ்வாமித்வம் முதலான கீழ்ச்சொன்ன குணங்கள் இவனுக்கு ஸ்வாபாவிகமாய் எப்பொழுதுமுள்ளதாயிருக்கும். இவனுடைய ஸ்வரூபத்தில் கை கால் முதலிய அவயவங்களொன்றும் கிடையாது. இந்த ஈச்வர-ஸ்வரூபம் எங்கும் வ்யாபித்து இருக்கும் இது பரவாத தேசமில்லை. இப்படியெங்கும் பரவி இருந்தாலும், ஆங்காங்குள்ள அசுத்தங்கள் இதில் ஸம்பந்தப்படுவதில்லை. ஸம்பந்தப்படாமலிருப்பதற்கீடான சக்தி இந்த ஸ்வரூபத்திற்கு ஸ்வாபாவிகம். இது சுவர் முதலான வஸ்துவினாலும் தடைபடுவதில்லை. ஆகையால் எல்லா வஸ்துக்களிலும் உள்புகுந்து இருக்கும். இதில் ராகம், த்வேஷம், லோபம், மோஹம் முதலிய துர்குணங்கள் ஒன்றும் ஒரு காலத்திலும் கிடையாது. இந்த ஸ்வரூபம் தனக்கும் பிறருக்கும் அனுபவிக்க அனுபவிக்க த்ருப்தியில்லாதபடி மேல்மேல் அனுபவத்தில் ஆசையையுண்டாக்குகிற ஆநந்த ரூபமாயிருக்கும். இது ஒருக்காலும் மாறுதலின்றிக்கே எப்போதும் ஏகரூபமாயிருக்கும். இதில் சிவப்பு வெளுப்பு, கருப்பு முதலிய ரூபங்களொன்றும் கிடையாது. ஆகையால் கண்ணுக்கு விஷயமாகாது. இதை சாஸ்த்ரத்தைக்கொண்டு பரோக்ஷரூபமாயும், யோகத்தினால் ப்ரத்யக்ஷமாயும் காணமுடியும். இந்த ஈச்வரனுக்கு ஜீவாத்மாக்களான நம்மோடு மாதாவென்றும், பிதாவென்றும் (தந்தை), ப்ராதாவென்றும் (ஸஹோதரன்) விச்ரமஸ்தானமென்றும் (இளைப்பாறுமிடம்), ஸுஹ்ருத் (நண்பன்)என்றும், அடைய வேண்டிய பயன் என்றும், அதை அடைவிக்கிறவன் என்றும் இது முதலான பல ஸம்பந்தங்கள் உண்டு. ஜீவாத்மாக்களான நாம் இவனுக்கு எல்லா கைங்கர்யங்களையும் செய்யக் கடமைப்பட்டவர்கள். இவனாலே எல்லா ஸமயங்களிலும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றப்படுகிறோம். இவன் நம்மை ஆபத்திலிருந்து ரக்ஷpக்கும்போது சில காலத்தில் சில சேதனரைக் கொண்டும், சில காலத்தில் ந்ருஸிம்ம ராம-க்ருஷ்ணாதி அவதாரங்களால் நேராகவும் ரக்ஷpக்கிறான். ஈச்வர ஸங்கல்பமில்லாமல் (ஒரு கார்யத்தை நடத்தவேண்டும் என்கிற ஒரு நினைவு) ஒரு கார்யமும் நடவாது. இவன் தன் ஸங்கல்பத்தினால் நமக்காகவே இந்த ஜகத்--ஸ்ருஷ்டி முதலான வ்யாபாரங்களைச் செய்கிறான்.

அதாவது நாம் செய்த புண்ய பாபங்களுக்கீடாக நமக்கு ஸுகம், துக்கம் முதலிய அனுபவங்களைக் கொடுக்க ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்களை ஸ்ருஷ்டிக்கிறான். இவைகளில் சிலது போக்யமாயும் (தானாக ஆனந்தத்தை கொடுப்பதான பால் பழம் போன்றவை), சிலது போக ஸாதனமாயும் (போகங்களை அநுபவிக்கத் தேவையான தங்கக் கிண்ணம் தாம்பாளம் போன்றவை) நாம் போக்தாவாயும் (புசிப்பவன்-ருசிப்பவன்) ஏற்படுகிறோம். சேதனர்களுக்கு துக்கத்தை சில காலங்களில் உண்டாக்கின போதிலும் ஈச்வரன் ஸ்வபாவத்தில் பரமகாருணிகன்(மிகவும் தயவுள்ளவன்). இவன் துக்கத்தைக் கொடுப்பது நமக்கு தண்டனை ரூபமாய், இவன் ஸஹஜ க்ருபைக்கு (இயல்பாக உள்ள தயவுக்கு) விருத்தமாகமாட்டாது (முரணாகாது). ஈச்வரன் ஒருவன் உண்டென்று நாம் நம்பாமலிருந்தாலும் அவன் கார்யங்கள் நம்மிடத்தில் நடந்தேவிடும். நம்பினோமாகில் மிகவும் க்ஷேமமுண்டாகும்.