Announcement

Collapse
No announcement yet.

பழசும், புதுசும்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பழசும், புதுசும்!

    கடவுள் நாமத்தை, நாம் எத்தனை ஆண்டுகள் ஜெபிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல; இப்பிரபஞ்சம் முழுவதும் அவனே என்பதை உணர்ந்து, நான் என்பதை மறந்து, ஆண்டவனின் நாமத்தை உளப்பூர்வமான அன்புடன் ஒரு முறை உச்சரித்தால் கூட போதும், அவனின் அருளுக்கு பாத்திரமாகி விடுவோம் என்பதை உணர்த்தும் கதை இது:
    பலக்புகார் என்ற அரசன், கபீர்தாசரிடம் உபதேசம் பெற்றவன்; இருந்தாலும், நற்பழக்க வழக்கங்கள் இல்லாததால், தான் பெற்ற உபதேசத்தை மறந்தான்.
    ஒரு நாள், அரசன் அந்தப்புரத்தில் நுழைந்த போது, அங்கே அவனின் கட்டிலில், ஒரு ஓரத்தில், அரண்மனை தாசி தூங்கிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் மன்னனுக்கு கோபம் வந்து, 'மன்னனின் பஞ்சணை என்பதை மறந்து, இதில் தூங்கிய இவளுக்கு நான்கு பிரம்புகள் முறியும் அளவிற்கு தண்டனை கொடுங்கள்...' என, உத்தரவிட்டான்.
    அதன்படி, அரண்மனை வீரர்கள், தடித்த பிரம்புகளால் அந்தப் பெண்ணை நையப் புடைத்தனர். ஆனால், அவளோ, தன் மேல் விழும் ஒவ்வொரு அடிக்கும், வாய்விட்டு உரக்கச் சிரித்தாள். அவளின் சிரிப்பிற்கு காரணம் புரியாத மன்னன், அது குறித்து கேட்டான். அதற்கு அவள், 'மன்னா... உன்னை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. அந்தப் படுக்கையில் ஓரமாகப் படுத்திருந்த எனக்கே இவ்வளவு தண்டனை கிடைக்கிறது என்றால், எத்தனையோ இரவுகள், அந்தப் படுக்கையில் படுத்திருந்த உனக்கு எவ்வளவு தண்டனை கிடைக்கும் என்பதை நினைத்துப் பார்த்தேன்... சிரிப்பு வந்தது...' என்றாள்.
    அதைக் கேட்டதும், கற்பூர மலையில் தீப்பிடித்ததைப் போல அரசனுக்கு ஞானம் பிறந்தது. உடனே, அவன் ராஜ்ஜியத்தை அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு, துறவு பூண்டு, தவம் செய்வதற்காக காட்டிற்கு சென்றான்.
    எட்டு நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி, ராமநாமம் ஜெபித்தபடி கடும் தவம் புரிந்தான். ஒன்பதாவது நாள், காட்டை விட்டு வெளியேறி, வழியில் ஒரு வனாந்திரத்தை அடைந்தான். அவனுக்கு மிகுந்த பசியாக இருந்தது. அங்கிருந்த ஒரு துறவி, கையில் இரண்டு அப்பங்கள் வைத்திருந்தார். அவர், பசியுடன் காணப்பட்ட அரசனைப் பார்த்து, 'நீ புதுத்துறவி; அதனால், நீ இங்கே தங்கக் கூடாது...' என்று சொன்னதோடு, பசிக்கு ஓர் அப்பம் கூடக் கொடுக்கவில்லை.
    அவரிடமிருந்து சற்று விலகி, ராமநாமத்தை ஜெபித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான் மன்னன் பலக்புகார். தன் பக்தன் ஒருவன் பசியுடன் இருப்பதை பரந்தாமன் பார்த்துக் கொண்டிருப்பாரா?
    மகாவிஷ்ணு, லட்சுமி தேவியை அழைத்து, பலக்கிற்கு உணவு அளிக்கச் சொல்ல, தேவியும் அப்படியே செய்தாள். அதைப் பார்த்த பழைய துறவி, 'ஹூம்... நெடு நாட்களாக நான் தியானம் செய்கிறேன்; அப்போதெல்லாம் வராத தெய்வம், எட்டு நாட்களே தியானம் செய்த இந்தப் புதுப் பக்தனுக்கு அருள் செய்கிறதே...' என்று மனம் வெதும்பினார்.
    அவரது கனவில் மகா விஷ்ணு எழுந்தருளி, 'அன்பனே... கையில் உள்ள உணவைக் கூட, பங்கிட்டு கொடுக்கும் அளவுக்கு, மன பக்குவமில்லாமல் இருக்கும் நீ, எத்தனை ஆண்டுகள் தவம் செய்து என்ன பயன்... அந்த புது பக்தனோ, அரச போகங்கள் அத்தனையும் விட்டு, நிஷ்காமியனாய் - பிரதிபலன் எதிர்பார்க்காமல், தூய்மையான பக்தி செலுத்தினான். அதனால், உன்னை விட அவனே உயர்ந்தவன்...' என்றார்.
    கனவு கலைந்து எழுந்த துறவி, பலக்கிடம் சரணடைந்தார். அடியவர்களிடையே, ஆண்டவன், புதுப் பக்தன் என்றும், பழைய பக்தன் என்றும் பேதம் பார்ப்பதில்லை. ஜடப் பொருட்களில் குடியேறியுள்ள ஆன்மா, எந்த நிமிடம் தன்னை உளப்பூர்வமாக நினைக்கிறதோ, அதை, அவன், தன் அருளால் அணைத்துக் கொள்கிறான்.


    பி.என்.பரசுராமன்


    விதுர நீதி!: தலைசிறந்த பொருளோ, பரிசோ, பதவியோ தவறான வழிமுறையை பின்பற்றி வழங்கப்பட்டிருந்தால், நாம் மயங்கி விடாமல், அதை மறுத்து விட வேண்டும். பாம்பு தன் சட்டையை உரித்த பின், அதை அப்படியே போட்டு செல்வதை போல், தவறான வழியில் கிடைக்கும் எதன் மீதும் பற்று கொள்ளாமல், உதறி தள்ளினால், நாம் எத்துன்பமும் இன்றி சந்தோஷமாக வாழ முடியும்.
    — என்.ஸ்ரீதரன்.


    Dinamalar
Working...
X