Announcement

Collapse
No announcement yet.

Tamil palindrome

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tamil palindrome

    Courtesy:Saiva Samoogath Thiruppanik Kazhagam
    வேத(சம்ஸ்கிருத) ஸ்லோகங்களும் அவற்றின் மொழி பெயர்ப்பும் என்று நினைக்க வேண்டாம், கீழே உள்ளது திருஞான சம்பந்தர் அருளிய ஒப்பற்ற தேவார பதிகமாகும். சிறந்த பொருள் பொதிந்த பதிகம் என்பதால் அவசியம் பொருளையும் படித்துப் பார்க்க. பதிகம் பாடுவதற்கான பலனும் இறுதியில் உண்டு. இந்த பதிகம் மாலைமாற்று(palindrome) எனப்படும். கீழிருந்து மேலாக படித்தாலும் சொற்கள் மாறாது இருக்கும். இதை படித்தபின் நாம் தமிழர்களா என்ற சந்தேகமும் எழலாம்!!!
    1. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
    பொழிப்புரை :
    ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!
    2. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
    யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
    பொழிப்புரை :
    வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. மகா சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.
    3. தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
    மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
    பொழிப்புரை :
    அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!
    4. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
    மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
    பொழிப்புரை :
    என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.
    5. யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
    வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
    பொழிப்புரை :
    யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.
    6. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
    யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
    பொழிப்புரை :
    மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.
    7. நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
    நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
    பொழிப்புரை :
    உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட் பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?
    8. நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
    காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
    பொழிப்புரை :
    இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).
    9. காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
    பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
    பொழிப்புரை :
    காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.
    10. வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
    தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
    பொழிப்புரை :
    நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.
    11. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
    காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
    பொழிப்புரை :
    நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.
Working...
X