ஜன., 23 - அப்பூதியடிகள் குருபூஜை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபகவான் பெரியவனா, பக்தன் உயர்ந்தவனா என்ற கேள்வியை எழுப்பினால், பக்தனே உயர்ந்தவன் என்று பகவானே ஒப்புக்கொள்கிறார். ஆம்... காரைக்காலம்மையார் கைலாயம் சென்ற போது, தாயும், தந்தையுமில்லாத சிவன், அவரை, 'அம்மையே வருக' என்று தன் தாய் ஸ்தானத்துக்கு ஒப்பிட்டு வரவேற்றார். எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள்! இதனால்தான் சில பக்தர்கள், பகவானை விட, அவனது பக்தர்களுக்கு மிகுந்த மதிப்பளித்து வணங்கி வருகின்றனர்.
இந்த வரிசையில் வருபவர் தான் அப்பூதியடிகள். தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில் வசித்த இவர், ஒரு சிவபக்தர் மட்டுமல்ல... சிவ தொண்டரான திருநாவுக்கரசர் மேல் உயிரையே வைத்திருந்தவர். இத்தனைக்கும் அப்பூதியடிகள் நாவுக்கரசரைப் பார்த்ததே இல்லை. அவரது புகழை மட்டுமே கேள்விப்பட்டிருந்தார்.
ஒருசமயம், திங்களூர் வந்திருந்த நாவுக்கரசர், தன் பெயரில் இருந்த தண்ணீர் பந்தல், சாலைகள், நீர்நிலைகளைப் பார்த்தார். அதை அப்பூதியடிகள் அமைத்தது பற்றிக் கேள்விப்பட்டு, அவரது இல்லத்துக்குச் சென்றார். தன்னை யாரென அறிமுகப்படுத்தாமல், 'தர்மம் செய்யும் நீங்கள், தர்ம சாலைகளை உங்கள் பெயரில் அமைக்காமல், யாரோ ஒருவர் பெயரில் அமைக்கக் காரணம் என்ன?' என்று கேட்டார். இதைக் கேட்டதும் வருத்தம் அடைந்த அப்பூதியடிகள், 'ஐயா... நீங்கள் சிவனடியாராக இருந்தும், நாவுக்கரசர் பற்றி அறியாதவர் போல் கேட்கிறீர்களே... மகா சிவ அடியவரான அவர் பெயரில் இத்தகைய தர்ம சாலைகளை அமைக்க கொடுத்து வைக்க வேண்டும்...' என்றார்.
தன்னலம் கருதாத அவரது விளக்கத்திற்கு பின், 'ஐயா... நான் தான் அந்த நாவுக்கரசன்...' என்றார். இதைக் கேட்டதும் அளவிட முடியாத ஆனந்தம் அடைந்த அப்பூதியடிகள், அவருக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தார். அப்பூதியடிகளுக்கு இரு மகன்கள்; இருவருக்குமே பெரிய திருநாவுக்கரசு, சிறிய திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டியிருந்தார். இவர்களில் பெரிய திருநாவுக்கரசுவை அழைத்து, உணவு பரிமாற வாழை இலை அறுத்து வர சொன்னார். இலை அறுக்கச் சென்ற இடத்தில், சிறுவன், பாம்பு தீண்டி விட இறந்து போனான். அந்நிலையிலும், மனம் தளராமல் நாவுக்கரசருக்கு உணவளிக்க அப்பூதியடிகளும், அவரது மனைவியும் முயன்றனர். ஆனால், அவர்களின் முகக் குறிப்பைக் கொண்டே, நடந்ததை அறிந்து, இறந்த சிறுவனை திங்களூர் கைலாசநாதர் கோவிலுக்கு கொண்டு வர சொன்னார் நாவுக்கரசர். அவர்களும், சிறுவனின் உடலுடன் அங்கு சென்றனர். பதிகம் பாடிய திருநாவுக்கரசர் அந்தச் சிறுவனை உயிர்ப்பித்தார். சிவனே, நாவுக்கரசர் ரூபத்தில் வந்ததாக எண்ணி, அப்பூதியடிகள் மகிழ்ந்தார்.
அவரது குரு பூஜை தை சதய நட்சத்திரத்தன்று நடைபெறும். திருவருள் வேண்டுமானால் குருவருள் வேண்டும் என்பர். திருநாவுக்கரசர், அப்பூதியடிகள் போன்ற நல்லவர்களை நாம் மானசீக குருவாக ஏற்று, அவர்களைப் போல தர்மவழியில் நடந்து, தினம்தோறும் தர்மத் திருநாளைக் கொண்டாடலாம்.

தி.செல்லப்பா
[IMG]file:///C:/Users/KSSRAJAN/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.gif[/IMG]