Announcement

Collapse
No announcement yet.

துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி!

    எல்லா ஜீவராசிகளிலும் நான் இருக்கிறேன்...' என்ற கண்ணனின் வாக்கியத்தை மெய்ப்பிக்கும் கதை இது.
    சவுராஷ்டிரா நாட்டில், தனஞ்ஜயன் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான்; அவன் மனைவி சுசீலை. ஏழ்மையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்ததைப் போன்ற குடும்பம் அது. தினந்தோறும் தானிய பிச்சை எடுத்து வந்து, அதைக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்நிலையில், சுசீலையோ, வீட்டின் பின்புறத்தில் இருந்த ஓர் அரச மரத்தைத் தினந்தோறும் சுற்றி வந்து, 'பெருமாளே... எங்களைப் பிடித்திருக்கும் தரித்திரம் நீங்க வேண்டும்...' எனப் பிரார்த்தனை செய்து வந்தாள். மழைக் காலம் நெருங்கியது. அது என்னவோ அந்த ஆண்டு மட்டும், வழக்கத்தை விட மழையும், குளிரும் அதிகமாகவே இருந்தன. தனஞ்ஜயனும், அவன் மனைவியும் குளிரில் இருந்து தப்புவதற்காக, போர்த்திக் கொள்ள துணிகளுக்குக் கூட வழி இல்லாமல் குளிரில் நடுங்கினர்.
    அதில் இருந்து தப்புவதற்காக, அடுப்பை மூட்டிக் குளிர் காயலாம் என்று எண்ணினர். விறகோ, சுள்ளியோ இல்லை. தனஞ்ஜயன் ஒரு கோடாரியை எடுத்துப் போய், வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில், ஒரு கிளையை வெட்டினான். அடுத்த விநாடி மரத்தில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது. அதைக் கண்டதும், தனஞ்ஜயன் நடுங்கிப் போய், கோடாரியைக் கீழே போட்டு, கைகளைக் கூப்பினான். ஒரு சில விநாடிகளில், அங்கே ஒரு தெய்வீக புருஷன் தோன்றினார். சங்கு, சக்கரம் ஏந்திய அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்ததைப் பார்த்த தனஞ்ஜயன், 'சுவாமி... என்ன கொடுமை இது... யார் உங்களை இந்நிலைக்கு ஆளாக்கியது?' எனக் கேட்டான்.
    அதற்கு, 'தனஞ்ஜயனே... என்னை இந்நிலைக்கு ஆளாக்கியவன் நீ தான்; சற்று முன் நீ என்னைக் கோடாரியால் வெட்டவில்லையா...' எனக் கேட்டார் அந்த தெய்வீக புருஷன்.
    தனஞ்ஜயன் நடுங்கினான். 'சுவாமி... நான் மரத்தைத் தானே வெட்டினேன்; இதற்கு முன் உங்களை நான் பார்த்ததே இல்லையே...' என்றான்.
    அதற்கு தெய்வீக புருஷன், 'நீ, என்னைப் பார்க்கா விட்டால் என்ன... நான், உன்னை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை, அச்வத்த ரூபன் என்றும், அச்வத்த நாராயணன் என்றும் சொல்வர். தினந்தோறும் உன் மனைவி என்னை வலம் வந்து, பிரார்த்தனை செய்வாள்...' என்றார்.
    தனஞ்ஜயன் கண்ணீர் பெருக்குடன் மன்னிப்பு கேட்டான். 'தனஞ்ஜயா... உன் துயரத்தைப் போக்குவதற்காகத் தான், நான் உன் முன் தோன்றினேன்; வேண்டிய வரத்தைக் கேள்...' என்றார் அவர்.
    'பெருமாளே... உன்னை என்றும் மறவாத உள்ளத்தைக் கொடு; உன் திருவடி சேவையைத் தவிர, மற்ற எதையும் நான் வேண்டவில்லை...' என்றான்.
    அவனுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் படியாக அருள் செய்து, மறைந்தார் பகவான். ஐஸ்வர்யக் குவியல் கிடைத்து விட்டதே என்று, தனஞ்ஜயனும், அவன் மனைவியும் பக்தியை விடவில்லை. தூய்மையான வாழ்வு வாழ்ந்து, இறைவனின் திருவடிகளை அடைந்தனர். தூய்மையான பக்தி, துயரத்தை நீக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.

    பி.என்.பரசுராமன்

    திருமந்திரம்!
    அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார்
    அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்த பின்
    அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.
    பொருள்: அன்பு வேறு; சிவம் வேறு என்பது அறியாமை. அந்த அறியாமையின் காரணமாக, அன்பே தெய்வம் என்பதை அறிய முடிவதில்லை. அன்பே கடவுள் என்பதை அறிந்து கொண்டால், யாராக இருந்தாலும் சரி, அவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.
    [IMG]file:///C:/Users/KSSRAJAN/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.gif[/IMG]
Working...
X