Courtesy:N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan

உண்மையைச் சொன்னால் கோபம் வருகிறது.
, பொய் சொன்னால் சந்தோஷப்படுகிறோம்"- மஹா பெரியவா
(ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம்)
ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மஹா புத்திசாலிகளாகலவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் ¢விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு மிகவும் சாமர்த்தியமும் சாதூர்யமும் இருக்கின்றன. அதாவது யாரையும் ஏமாற்றிவிடலாம் என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த புத்திசாலித்தனத்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம்
. ஒருவனைப்பற்றி யாராவது எத்தனை புத்திசாலி என்று பேசினால் எத்தனை சந்தோஷப்படுகிறோம். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ட லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்றால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது.அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளா தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள். சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத் திருப்தியாக இருப்போமே.
புத்தி, செல்வம் - இவற்றோடு ஒவ்வொருத்தருக்கும் அழகாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தான் புத்திசாலி என்பதைப்போல, எல்லோரையும்விடத் தானே அழகு என்கிற எண்ணம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது. இதற்குத்தான் அலங்காரம் எல்லாம் பிரமாதமாகச் செய்துகொள்கிறோம். தினத்துக்குத் தினம் ஃபாஷன்கள் மாறிக்கொண்டே இருப்பதெல்லாம் நம் அழகைப் பிரகடணம் பண்ணிக் கொள்ளத்தான். பரம கருணாமூர்த்தியான அம்பாள், கேவலம் ரக்த - மாம்ஸ சம்பந்தமான இந்தச் சரீர அழகை விரும்புகிறவளுக்கு அதைக்கூடப் பூரணமாகத் கொடுத்து அநுக்கிரஹிக்கிறாள்.
இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார். இதற்குமேல் வேறென்ன வேண்டும்?என்று தோன்றலாம்.
ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஒட்டியாச்சு. இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்?இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதையும் பெற்றதாகத் தெரியவில்லையே.
இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?என்கிற கோள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும் என்பதெல்லாம் நம்மை மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரம்மையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும்.
பாசம் என்றால் கயிறு. பாசத்தில் கட்டப்படுவது பசு. கயிற்றைப் போட்டுத் தறியில் கட்டின பசு மாதிரி, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக முடியாமல், அதற்குள் கிடக்கிற தாற்காலிக இன்பங்களையே மேய்த்துக்கொண்டு, அசட்டுத் தனமாக இதுவே எல்லாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் பரம சுதந்திரம். இந்த இந்திரியங்களின் சின்ன சௌகரியங்களுக்கு அப்புறம் அகண்டமான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம். பாசம் போய், நாம் பசுவாகக் கட்டுப்பட்டுக் கொண்டிருந்த நிலையும் போய்விட்டால், அப்புறம் பரம்பிரம்மம்தான். பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளாள் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends