Announcement

Collapse
No announcement yet.

Saakiya Nayanar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Saakiya Nayanar

    Courtesy:Smt.Uma Balasubramanian


    சாக்கிய நாயனார்.

    அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்
    மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர்
    உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து
    மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம்..

    சாக்கிய நாயனார் ஒரு சிறந்த சிவனடியார் ஆவார். அவர் சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தார். அவர் காஞ்சீபுரம் தலம் சென்று அங்குள்ள பௌத்தர்களோடு பழகி , சாக்கிய தர்மத்தை மேற்கொண்டார். இருந்தாலும் , மேலும் மேலும் பல சமய நூல்களை ஆராய்ந்து பார்த்த அவர் சிவநெறியே நல்ல இன்பம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெளிவுற்றார். அதனால் சிவபெருமானிடம் அவருக்கு மிகுதியாக அன்பு தோன்றி வளர்ந்தது. வெளியே பௌத்த வேடத்தில் இருந்தாலும் அவர் உள்ளமோ சிவபெருமான் வசிக்கும் கோயிலாக அமைந்தது.

    நாள்தோறும் சிவலிங்க தரிசனத்திற்குப் பிறகே உண்ண வேண்டும் என்ற குறிக்கோளை மேற்கொண்டிருந்தார். அதை விரதமாகவே நினைந்துச் செயல்பட்டார். ஆனால் அக்காலத்தில் சாக்கிய வேடத்தில் இருந்த அவருக்கு திருக்கோயிலுக்குள் செல்லும் அநுமதி கிடையாது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தார் . அவருக்கோ ஆலயம் சென்று வழிபடவேண்டும் என்ற உந்துதல் எப்பொழுதும் மனத்தில் இருந்து வந்தது. . தமது விரதம் நிறைவேற வழியின்றித் தவித்த அவருக்கு, ஒருநாள் பரந்த வெளியொன்றில் சென்று கொண்டிருக்கும்பொழுது , அங்கு பூசையின்றிக் கிடந்த ஒரு சிவலிங்கம் தென்பட்டது. அதைக் கண்டவுடன் அவருக்கு உண்டான ஆனந்தத்திற்கு அளவில்லை. கூத்தாடினார், பின் என்ன செய்வது என்று சிந்தித்தார். " புறத்தில் சாக்கியனாகவும் , அகத்தில் சைவனாகவும் இருக்கும் தமக்கு ஏற்ற வகையில் இந்தப் பெருமான் கிடைத்தாரே! இது அவன் திருவருளன்றி வேறில்லை ' என்று வியந்து , உணர்ச்சி மிஞ்சியவராக அச் சிவலிங்கத்தை அணுகினார். அதைப் பார்த்தவுடன் அருச்சனை செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார் . அருச்சனைக்கு வேண்டிய பூக்களோ , இலைகளோ, நீரோ எதுவும்கண்ணுக்குத் தென்படவில்லை . அருகில் சில கற்களே இருந்தன. . அவைகளை எடுத்து மலராகப் பாவித்து அதையே சிவலிங்கத்தின் மீது எறிந்தார்.

    நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து
    மாடு ஓர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்
    நீடு ஓடு களி உவகை நிலைமை வரச் செயல் அறியார்
    பாடு ஓர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்.

    தன்னை விட்டுச் சென்ற குழந்தை வந்து , இகழ்வதற்குறிய செயலைச் செய்தாலும் அதனைப் பொருட் படுத்தாது , தாய் அக்குழந்தைக்கு இன்பம் தருவது போல , சிவபெருமான் சாக்கியர் அன்பைக் கண்டு மனம் மகிழ்ந்தான்.

    மறுநாளும் வந்து சிவபெருமானை தரிசித்தார். முதல் நாள் தனக்கு ஒரு பொருளும் கிடைக்காது கல்லாலேயே சிவலிங்கத்திற்கு அருச்சனை செய்த செயலை ஒருமுறை நினைத்துப் பார்த்தார். " இதுவும் சிவபெருமானுடைய ஆணையினால் தான் நிகழ்ந்தது போலும் ! அந்த எண்ணம் தோன்றியதற்கு வேறு காரணம் இல்லை . புறச் சமயத்திற்குரிய வேடம் புனைந்திருக்கும் நான் மலரால் பூசை செய்தால் மற்றவர்கள் ஏசுவார்கள் , பழிப்பார்கள். ஆனால் கல் எறிந்தால் புறச் சமயத்தான் வெறுப்பைக் காட்டும் பொருட்டே அப்படிச் செய்கிறான் என்று எண்ணிக் கொள்வார்கள். அதனால் தம்மைத் தவறு கூறமாட்டார்கள். அதனால்தான் எம்பெருமான் இப்படி ஒரு எண்ணத்தை நமக்குக் கொடுத்திருக்கிறாரோ! " என்று சிந்தித்தார். ஆதலால் அருகிலிருந்த கற்களைத் தேர்ந்தெடுத்து வந்து சிவலிங்கத்தின் மேல் வீசத் தொடங்கினார். அதுமுதல் ஒவ்வொரு நாளும் உண்ணுவதற்கு முன் மறவாமல் அந்த வெளியில் இருந்த சிவபிரான் மேல் கல்லை வீசி எறிந்து விட்டுத்தான் மேலே உணவு அருந்துவார். இந்த விரதத்திற்கு எந்தத் தடையூறும் வராதவிதமாக , பூசை செய்து வந்தார்.
    ஒரு நாள், இறைவன் திருவிளையாடல் போலும் , சாக்கிய நாயனார் இந்த ஒழுக்கத்தை மறந்து போய் , இறைவனை அருச்சிக்காது உணவு கொள்ள உட்கார்ந்து விட்டார்.

    அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார்
    'எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான்' என எழுந்து,
    பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு,
    வெங் கறியின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார்.

    அப்பொழுது பளிச்சென்று தான் இறைவனுக்கு கல் அருச்சனை செய்யாது உண்கிறோமே என்ற நினைவு வந்தது. " ஐயோ ! என்ன காரியம் செய்யப் புகுந்தேன். இன்று எம்பெருமான் மீது கல்லை வீச மறந்துவிட்டேனே ! என்ன பாவம் செய்து விட்டேன்! " என்று கூறி நைந்து அழுது , பின் எழுந்து , அன்பின் உந்துதலால், விரைவாகச் சிவலிங்கம் இருந்த இடத்தை நோக்கிச் சென்றார்.
    சிவபெருமானிடம் ஆராத காதல் கொண்டு ஓடிய சாக்கிய நாயனார், வழக்கம்போல் ஒரு கல்லை எடுத்து வீசினார். தாம் மேற்கொண்ட விரதத்தினின்றும் ஒருபொழுதும் வழுவாது , அன்பிலே சிறந்து நிற்கும் சாக்கிய நாயனாரின் உள்ளப் பண்பை நன்கு அறிந்த எம்பெருமான் உமாதேவியாரோடு , விடையின் மீது எழுந்தருளி அவருக்குக் கண்கொளாக் காட்சி வழங்கினார்..

    கொண்டது ஒருகல் எடுத்துக் குறிகூடும் வகை எறிய
    உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை யொடும்
    கண்டு அருளும் கண்நுதலார் கருணை பொழி திருநோக்கால்
    தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி யொடும் தோன்றினார்.

    இடை விடாது தம் உள்ளக் கோயிலில் எம்பெருமானை வைத்து வழிபடும் சாக்கிய நாயனாருக்கு இறைவன் சிவலோகத்தில் மீளா அடிமையாக நிற்கும் பாங்கை அருளிச் செய்து அவரை ஆட்கொண்டார்.

    சாக்கிய நாயனார் தாம் மேற்கொண்ட செயல் தம் நிலைக்கு ஏற்றதென்று எண்ணி அதையே விரதமாகக் கொண்டு , கடைபிடித்து , இறைவனிடம் உண்மையான அன்பு பாராட்டியது வியத்தற்குரியதாகும் . அவருடைய தூய அன்பினால் அவர் இறைவன் மேல் எறிந்த கல் , மணம் பொருந்திய மலர் ஆயிற்று .நாம் புறத்தில் எவ்வகையாக இருந்தாலும் அகத்தில் தூய்மையாக இருத்தல் வேண்டும் . புறச் செயலைக் காட்டிலும் உள்ளன்பே , எம்பெருமானுடைய திருவருளைப் பெறுவதற்குரிய கருவி என்பதை நாம் சாக்கிய நாயனார் வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம் .
    ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற
    கோது இல் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்
    சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தாள் சூடித்
    தீதினை நீக்கல் உற்றேன்; சிறப்புலியாரைச் செப்பி.
Working...
X