Announcement

Collapse
No announcement yet.

SRI SRIDHARA AYYAVAL- ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாள்-I

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SRI SRIDHARA AYYAVAL- ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாள்-I

    பதினேழாம் நூற்றாண்டில் திருவிசனல்லூரில்வாழ்ந்த ஸ்ரீஸ்ரீதர அய்யாவாள் என்கிற மகான் ஹர நாமத்தையும் ஹரி நாமத்தையும் போற்றியவர்.
    அநேக அதிசயங்களை நிகழ்த்தியவர்.
    அவரைப்பற்றி சிறிது அறிவோம்.
    வரதராஜன்


    ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள்


    எத்தனையோ மகான்கள் பகட்டையும் படாடோபத்தையும் விரும்பாமல் எளிமையாக
    வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்


    திருநாமம் : ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்

    தலம் : திருவிசநல்லூர்

    சிறப்பு : ஸ்ரீ ஐயாவாள் திருமடம்

    எங்கே இருக்கிறது : கும்பகோணத்தில் இருந்து காவிரிக்கரை ஓரமாகச் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு

    எப்படிப் போவது : கும்பகோணத்திலிருந்து 2, 2ஏ, 2பி, 38 ஆகிய நகரப் பேருந்துக்கள் உண்டு. தவிர, தனியார் பேருந்துகளும் உண்டு. இறங்க வேண்டிய இடம் திருவிசநல்லூர் மடம். அங்கிருந்து சுமார் 10 நிமிடம் நடந்தால் ஐயாவாள் மடத்தை அடைந்துவிடலாம்.

    தொடர்புக்கு:
    ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சாரிடபிள் டிரஸ்ட்
    திருவிசநல்லூர் அஞ்சல், பின்கோடு 612 105.
    வேப்பத்தூர் வழி, கும்பகோணம் ஆர்.எம்.எஸ்
    தஞ்சை மாவட்டம்
    போன்:0435-246 1616. ,

    கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவிசலூர் என்கிற கிராமம். திருவிசநல்லூர் என்றும் சொல்வது உண்டு. திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் வியலூர் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறார். இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது தவிர, அருளாளர்களின் திருவடிபட்ட திவ்ய பூமி இது.

    போதேந்திரர், மருதநல்லூர் சத்குரு ஸ்வாமிகள், சதாசிவ பிரம்மேந்திரர் (காஞ்சி காமகோடி பீடத்தில் வந்த பரமசிவேந்திரரின் சிஷ்யர்). ராமபத்ர தீட்சிதர், ராமசுப்பா சாஸ்திரிகள் முதலானோரின் வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட ஊர் திருவிசநல்லூர். ஸ்ரீஐயாவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள், கன்னடப் பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் தனது வாழ்நாளின் பிற்பகுதியை இங்குதான் கழித்தார்.

    திருவிசநல்லூர் அக்ரகாரத்தில் வசித்து வந்தார் ஐயாவாள். அருகில், பிரமாண்டமாக ஓடும் காவேரி நதிக்கு அக்கரையில் திருவிடைமருதூர். அப்போதெல்லாம் இந்தப் பகுதியில் சிவக்ஷேத்திரம் என்றால் அது திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலைத்தான் குறிக்கும். எனவே, தினமும் அர்த்தஜாம பூஜை வேளையில் மகாலிங்க ஸ்வாமியைத் தரிசிக்க திருவிசநல்லூரில் இருந்து பரிசலில் அக்கரைக்குச் சென்று வருவார். தவிர, ஒவ்வொரு பிரதோஷ வேளையின்போதும் தவறாமல் அங்கு இருப்பார் ஐயாவாள். ஒருநாள், அர்த்தஜாம் தரிசனத்துக்காக ஐயாவாள் மகாலிங்க ஸ்வாமி சந்நிக்கு வந்தபோது அவர் முகத்தில் கூடுதல் பிரகாசம். தன்னுடன் இருந்த பக்தர்களுக்குப் பல உபதேசங்களை உருக்கமாக வழங்கினார். அன்றைய தினம். இறை இன்பம் குறித்த அவரது செயல்பாடுகளைக் கண்டு பக்தர்கள் பிரமித்து நின்றனர். ஐயாவாள், சிவ நாமத்தை ஜபித்துக்கொண்டே இருந்தார். கர்ப்ப கிரகத்துக்குள் மகாலிங்க ஸ்வாமி ஜோதி சொரூபமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் தன் சந்நிதி முன் நடக்கப் போகும் சிலிர்ப்பான அந்தக் காட்சியை, மகாலிங்கம் மட்டும்தானே உணர முடியும்? ஆம். திட்டமிடுதலும் தீர்மானிப்பவனும் அவன்தானே.

    உணர்ச்சிப் பெருக்குடன் நமசிவாய நாமத்தை மனமுருகி நெடுநேரம் உச்சரித்துக் கொண்டிருந்த ஐயாவாள். திடீரென கருவறையை நோக்கி ஓட ஆரம்பித்தார். கர்ப்ப கிரகத்துக்குள் இருக்கும் லிங்கத் திருமேனியை ஆலிங்கனம் செய்துகொள்ளும் மனோபாவத்துடன் ஏதோ ஒரு சக்தியுடன் ஓடி வந்த ஐயாவாளை, ஆலய அர்ச்சகர் தடுக்க முற்பட்டார், முடியவில்லை. ஈசனின் சந்நிதிக்குள் நுழைந்து. பொன்னார் மேனியனின் ஆவுடை அருகே வந்ததும் ஐயாவாள் பொசுக்கென மறைந்துவிட்டார். ஆம். மகாலிங்கத் திருமேனியில் ஐக்கியமாகிவிட்டார் ஐயாவாள். இந்தக் காட்சியை நேரில் கண்ட அர்ச்சகர். பக்தர்கள் மற்றும் ஆலய சிப்பந்திகள் உட்பட பலரும் நடந்த சம்பவத்தின் தாக்கம் குறையாமம் மூர்ச்சையாகிக் கிழே விழுந்தனர். இன்னும் சிலர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

    ஸ்தூல உடம்புடன் ஜோதிர்லிங்க சொரூபனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் ஸ்ரீஐயாவாள். எனவே, அவருக்கு அதிஷ்டானம் என்று கிடையாது. அவர் வாழ்ந்து, அனுபவித்து, பல நல் உபதேசங்களை பக்தர்களுக்கு வழங்கிய திருவிசநல்லூர் வீட்டையே திருக்கோயிலாக பாவிக்கிறார்கள். அவரது நினைவுகளை, வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் இடமாக இன்று காட்சியளிக்கிறது அந்த சந்நிதி.

    ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சேரிடபிள் டிரஸ்ட் என்கிற அமைப்பு தற்போது அவரது கோயிலை நிர்வாகித்து வருகிறது. கிருஷ்ண ப்ரேமியின் முயற்சியால், இது நன்றாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. சித்திரையில் வசந்தோற்சவம், ஆவணியில் கோகுலாஷ்டமி உற்சவம், கார்த்திகையில் கங்காவதாரண மகோற்சவம், மார்கழியில் ராதா கல்யாண மகோற்சவம் என்று பல விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. ஸ்ரீதர ஐயாவாளின் வீட்டுக் கிணற்றில் கங்காதேவி நிரந்தர வாசம் செய்கிறாள். இதை, ஐயாவாளே தனது ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கிணற்றில் ஸ்நானம் செய்தால் கங்கையில் நீராடிப் பலன் உண்டு.

    ஒவ்வொரு வருடமும் கார்திக்கை அமாவாசை தினத்தன்று கங்கை, இந்தக் கிணற்றில் பொங்கி வருவதாக ஐதீகம். எனவே அன்றைய தினத்தில் புனிதம் வாய்ந்த இந்தக் கிணற்றில் நீராட எங்கெங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் சாரை சாரையாக வந்து சேர்வார்கள். இந்துக்கள்தான் என்றில்லை..... இஸ்லாமிய பெண்மணிகள் உட்பட அனைத்து மத்தினரும் இந்த மகானின் மகிமையை உணர்ந்து, நீராடும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    மூலவர் சந்நிதியில் ஐயாவாளின் உற்சவர் விக்கிரகம், கோதண்டராம ஸ்வாமி விக்கிரகம், நவநீதகிருஷ்ணன் மற்றும் நடராஜரின் படங்கள் ஆகியவை இருக்கின்றன. விகட ராமசாமி சாஸ்திரிகள் என்பவரது காலத்தில்தான் ஐயாவாளுக்கு விக்கிரகம் செய்யப்பட்டு, முறையாக ஆராதனையும் உற்சவமும் தொடங்கப்பட்டன.

    கார்த்திகை அமாவாசைக்கு முதல்நாள் இரவு இடைவிடாமல் பஜனை நடைபெறும். அதிகாலை பஜனை முடிந்ததும், பாகவதர்கள் அனைவரும் காவேரிக்குச் சென்று சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வார்கள், கங்காஷ்டக ஸ்லோகம் சொல்வார்கள். உடன் ஏராளமான பக்தர்களும் சென்று காவேரியில் ஸ்நானம் செய்வார்கள். பிறகு அங்கிருந்து நாம கோஷத்துடன் புறப்பட்டு வந்து ஸ்ரீமடத்தை அடைவர்.

    அங்கு கங்காதேவி வாசம் செய்யும் புனிதக் கிணற்றுக்கு விசேஷ பூஜைகள் செய்து அதில் ஸ்நானம் செய்வார்கள். இதைத் தொடர்ந்து. பக்தர்களும் புனித நீராடுவார்கள். இதற்கென்றே நான்கு பக்தர்கள் கிணற்றின் அருகில் இருந்துகொண்டு பக்தர்களது தலையில் கிணற்றுநீரை இரைத்து ஊற்றுவார்கள். கிணற்றில் நீராடுவதற்கு முன் காவிரி ஸ்நானம் செய்யவேண்டும் (இந்தக் கிணற்றில் பக்தர்கள் எப்போதும் நீராடலாம்). கார்த்திகை அமாவாசை காலத்தில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு விரிவான ஏற்பாடுகளை டிரஸ்ட் செய்கிறது. அதுபோல், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் குறைவில்லாமல் நடைபெறுகிறது.

    நித்திய வழிபாடுகள் அனைத்தும் நன்றாகவே நடந்து வருகின்றன. சுப்ரபாதம், ராமாயணம், பாகவதம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், டோலோற்சவம், பஜனை, நாம கோஷம் என்று எதற்கும் இங்கே குறையவில்லை. ஏகாதசி, அமாவாசை ஆகியவை விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றன.
    இவர்களுடைய சரிதத்தைப் புரட்டினால் கண்கள் கசியும், இதயம் இளகும். தங்களுக்கென வாழாமல், பிறரது நலன்களை முன்னிறுத்தியே இவர்களது வாழ்க்கை அமைந்துள்ளது.இவர்களுடைய ஜீவன் அடங்கி இருக்கும் சந்நிதியை தரிசிப்பதே பெரும் பாக்கியம். நம் முன்னோர் செய்த தவப்பயனின் விளைவாகவும் நமக்குள் இருக்கும் ஆன்மிக ஆற்றாலும்தான் அந்த பாக்கியம் நமக்குக் கிடைக்கிறது.


    .....................மகானின் அதிசயங்கள் தொடரும்
    Last edited by R.Varadarajan; 28-01-15, 10:07.
Working...
X