Announcement

Collapse
No announcement yet.

--ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாள்-II--ஈஸ்வரனின் திருவி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • --ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாள்-II--ஈஸ்வரனின் திருவி

    ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாளுடன் திருவிடைமருதூர் மகாலிங்கேச்வரன் நிகழ்த்திய திருவிளையாடலை பற்றி சிறிது பார்ப்போம்.
    வரதராஜன்


    ஒருமுறை ஐயாவாளின் ஆத்மார்த்தமான பக்தியுடன் விளையாடிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை, சாட்சாத் பரமேஸ்வரனுக்கு வந்துவிட்டது. (ஐயாவாளே பரமேஸ்வரனின் அவதாரம் என்றும் சொல்வார்கள்) திருவிளையாடலுக்கான தினத்தைக் குறித்தும் விட்டார்.

    அன்றைய தினம் இரவு வேளையில், திருவடைமருதூர் மகாலிங்கத்தைத் தரிசிக்கப் புறப்பட்டார் ஐயாவாள். அப்போது காவேரியில் வெள்ளம் அதிகம் ஓடியது. பரிசல் ஓட்டிகள் எவரும் காவிரிக்கரையில் இல்லை. இந்த வெள்ளத்தில் பரிசல் ஓட்ட முடியாது என்பதால் அனைவரும் விட்டிலேயே முடங்கிவிட்டனர்.

    காவிரியின் இக்கரையிலேயே நின்றுகொண்டு, என்ன செய்வது? என்று தவிர்த்துப் போனார் ஐயாவாள். சிவபெருமானை தரிசிக்காமல், வீட்டுக்குப் போவது அபசாரமாகப்பட்டது அவருக்கு. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. காவேரியில் தண்ணீர் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர, குறைவதாகத் தெரியவில்லை. சற்றுநேரம் காத்திருந்தவர், இக்கரையில் இருந்தபடியே திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய ராஜகோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். சிவபெருமானை நேரில் தரிசிக்க முடியாத ஏக்கத்தில் அவரது கண்களில் இருந்து நீர் கரகரவென வழிந்தது. அப்போது ஈஸ்வரனை தியானித்து. ஆர்த்திஹர ஸ்தோத்திரம் எனும் ஸ்லோகத்தைப் பாடினார்.

    இப்படி, ஐயாவாள் காவிரிக்கரையில் நின்றபடி ஈஸ்வரனைத் தியானித்திருந்த வேளையில்.... திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தவரும் ஐயாவாளுக்குப் பழக்கமானவருமான சிவாசார்யா ஒருவர், அவர் முன் தோன்றினார். ஐயாவாளுக்குப் பிரமிப்பு, விழிகளை இமைக்க மறந்து சிவாசார்யரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    காவிரியில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. அதனால் ஆற்றைக் கடந்து வந்து ஈசனைத் தரிசிக்க முடியவில்லையே என்று தாங்கள் மிகவும் வருந்தியிருப்பீர்கள் என்று அறிவேன். தங்களது மனம் புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அர்த்தஜாம பூஜை முடிந்ததும் விபூதிப் பிரசாதம் எடுத்து வந்தேன். இந்தாருங்கள் என்று கொடுத்தார் சிவாசார்யர்.

    ஆகா, சிவ தரிசனம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டேன். ஆனால், அந்த மகாலிங்கமே அர்ச்சகரை நேரில் அனுப்பி, விபூதிப் பிரசாதம் கொடுத்திருக்கிறார். இனி எனக்குக் கவலை இல்லை . ஈஸ்வரனையே தரிசித்த பாக்கியத்தை அடைந்துவிட்டேன் என்று கண் மூடி பிரசாத்தை இட்டுக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார். அர்ச்சகரைக்காணவில்லை. பிரசாதம் கொடுத்துவிட்டு நேரமாகிவிட்டது என்று கிளம்பி போய்விட்டார் போலிருக்கிறது என்று நினைத்த ஐயாவாளுக்கு அப்போதுதான் பிரக்ஞை வந்தது. அதுசரி, வெள்ளம் கரை புரண்டு ஓடும் இந்த வேளையில் நம்மால் அக்கரைக்குச் செல்ல முடியவில்லை. அப்படியானால் அர்ச்சகர் மட்டும் எப்படி வந்தார்? வேட்டி, துண்டு நனையாமல் இட்ட திருநீறு கலையாமல் இருந்தது எப்படி? வந்தவர் ஒரு வேளை மகாலிங்க ஸ்வாமியாகவே இருக்குமோ? சரி, நாளைக்குத் திருவிடைமருதூர் போகும்போது அந்த அர்ச்சகரிடமே கேட்டுவிட்டால் ஆச்சு என்று நினைத்து வீடு திரும்பினார்.

    மறுநாள், காவேரியில் வெள்ளம் வடிந்திருந்தது. பரிசல் மூலம் அக்கரைக்குச் சென்றவர் மகாலிங்க ஸ்வாமியைக் கண்குளிர தரிசித்தார். தரிசனம் முடிந்த பின், முந்தைய தினம் விபூதிப்பிரசாதம் கொடுத்த அர்ச்சகர் கண்ணில் பட்டார். பயபக்தியுடன் அவர் அருகே சென்றார்.

    நேற்று திருவிசநல்லூருக்கு வந்து எனக்குப் பிரசாதம் கொடுத்தீர்களே ஏன்? என்று கேட்டார்.

    நானா? காவிரியில் நேற்று கரை புரண்டு ஓடிய வெள்ளத்தைத் தாங்கள் பார்க்கவில்லையா? அதைக் கடந்து எவர் வர முடியும்? நான் வரமுடியவில்லை ஸ்வாமிகளே.

    ஐயாவாளுக்குப் பிரமிப்பு. அப்படியெனில் நேற்று திருவிசநல்லூருக்கு வந்து விபூதிப் பிரசாதம் தந்தருளியது சாட்சாத் பரமேஸ்வரன்தானா? தயாபரனே, என்னே உனது கருணை. உன்னைத் தரிசிக்க இயலாமல் நான் தவித்து நின்றபோது என் குரலுக்கு செவி சாய்த்து என்னையே தேடி வந்துவிட்டாயே என்று உருகினார்.
Working...
X