Announcement

Collapse
No announcement yet.

தைப்பூசச் சிறப்பு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தைப்பூசச் சிறப்பு

    எழுதியவர் உமா பாலசுப்பிரமணியன்

    தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
    தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்
    தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
    சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
    கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
    கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
    கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
    கண்குளிர என்றன்முன் சந்தியாவோ
    புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
    பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
    பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
    புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்
    கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
    கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே

    முருகனின் பொற்பாதங்களில் தண்டை, கிண்கிணி, சிலம்பு, சதங்கை போன்றவைகள் கொஞ்ச தன் தந்தை மனம் களித்திட நடனமாடினார்.

    "நகரம் இருபாதமாகி மகர வயிராகி
    மார்பு நடு சிகரமாகி வாய் வகரமாகி
    நதி முடியசாரமாகி உதய திருமேனியாகி
    நமசிவயமாமையாகி எழுதான" என்று கூறப்படுகின்ற சிவபெருமானும்

    "எங்குமாய்க் குறைவற்றுச் சேதன
    அங்கமாய்ப் பரிசுத்தத்தோர் பெறும்
    இன்பமாய்ப் புகழ் முப்பத்தாறினின்
    முடிவேறாய் இந்த்ர கோட்டி மயக்கத்தான்மிக
    மந்த்ர மூர்த்த நெடுத்துத் தாமதமின்றி
    வாழ்த்திய சொக்க காவல" என்று கூறப்படுகின்ற முருகனும்

    அருணகிரிநாதருக்கு ஒருவராகவே தெரிந்தார். முருகனும் சிவனும் ஒன்றே என்பதை அவர் நன்கு அறிந்து உணர்ந்திருந்தார்.
    அவ்வாறு சிறந்து விளங்கிய முருகனுக்கும் சிவபெருமானுக்கும் தைப்பூசம் உகந்த நாளாகும்.


    தைமாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி தினம் ஒரு சிறந்த நாளாகும். இத் தினத்தில் பல நல்ல நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. இந் நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் சரிந்து வீழவேருடன் பறிந்த நாள் தைப் பூசமேயாகும். சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே!


    மத்தியந்தின என்ற பெயர் கொண்ட முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரிய தவங்களைச் செய்து ஒரு மகனை ஈன்றெடுத்தார். குழந்தைக்கு நாமகரணம் செய்துவிட்டு, அவன் வளர்ந்த பின் முறையே உபநயனம் போன்ற சடங்குகளையும் யாவரும் போற்றும்படிச் செய்தார். மேலும் இலக்கண, இலக்கியங்களையும் படிக்க வைத்து, வேதாகம உபதேசமும், சிவதீட்சையும், ஸ்ரீ பஞ்சாட்சர மந்திர உபதேசங்களையும் செய்வித்து மகனை வல்லவராக்கினார். இத்துணைத் துறைகளிலும் சிறந்து விளங்கிய தன் மகனைப் பார்த்து,

    "
    என் கடமை நிறைவேறிவிட்டது. மேலும் உனக்கு நான் செய்ய வேண்டியது ஏதாவது இருந்தால் இப்பொழுதே சொல் ஆற்றக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார். உடனே மகன், "பெரிய தவங்களைச் செய்யும் முறைகளை அடியேனுக்கு உபதேசித்தல் வேண்டும்" என்று கூறினான்.


    மத்தியந்தின முனிவர் உடனே, "தவம் ஏன் செய்ய வேண்டும்? நீ இந்திர சந்திர போகத்தை விரும்புகிறாயா? செய்யும் தவங்கள் எல்லாம் சிவகதிக்குத் துணை போகுமா? வரம் ஏதேனும் வேண்டுமென்றால்தான் தவம் செய்ய வேண்டும். நீ சிவபூஜை செய் போதும். அதுவே உனக்கு எல்லா நன்மைகளும் தந்துவிடும். அதுமட்டுமன்றி சிவ போகமும் சித்திக்கும்" என்று அருளிச் செய்தார்.


    இளம் முனிவர், "அதற்குரிய சிறந்த தலம் எது?" என்று தந்தையிடம் வினவினார்.

    "தில்லையம்பதியைவிட வேறு தலம் சிறந்ததாக அமையுமோ?" என்று கூறி விடையளித்தார். மத்தியந்தின முனிவரின் மகனும் தன் தந்தை சொற்படி தில்லையம்பதி சென்று, அங்கு ஒரு ஆல மர நிழலில் சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருப்பதைக் கண்டு பல நாட்கள் முறைப்படி வழிபட்டுவந்தார். இவ்வாறு இருக்கையில் திருநடனம் பார்த்துக் கும்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. தன் மனதில் அந்த ஆசை வீணாகாது மேலும் மேலும் வளர, வீணே நாள் போய் விடாமல் திருமூலட்டானேசுவரரை வழிபட்டு வந்தார். தன் மனதில் கூத்தனின் ஆனந்தத் தாண்டவத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆசையைத் தழல் போல் எழவிட்டு அதற்காக திருமூலட்டானத்துப் பெருமாளின் உதவியையும் நாடினார்.


    இறைவனைப் பூசிப்பதற்கு வண்டு தீண்டாத உகந்த மலர்களை விடியலில் நந்தவனம் சென்று பறித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் இள முனிவர். அவ்வாறு கோட்டுப் பூக்களைப் பறிக்க மரத்திலேறும் பொழுது கை,கால்கள் வழுக்கிக் கீழே விழுவார். விடியலில் கன்னியிருட்டில், பூக்களும் கண்களுக்குத் தெரியாது, கோதுகளை அகற்றவும் போதிய வெளிச்சம் போதாது திண்டாடினார். அதனால் இறைவனிடம் தனக்குக் கை விரல் நுனிகளில் ஒளியான கண்களையும், மரம் ஏறுவதற்குத் தகுந்த வண்ணம் புலிக்காலையும் கொடுத்து உதவுமாறு வேண்டி நின்றார். இறைவனும் அவ்வாறே உதவவே அவருக்கு அதுமுதல் புலிக்கால் முனிவர் என்ற பெயர் உண்டாயிற்று. வட மொழியில் 'வியாக்ர பாதர்' எனவும் வழங்கப் பெற்றார்.
    திருப்புகழில் பல இடங்களில் வியாக்கிரபாதரைக் குறிப்பிட்டிருக்கிறார் அருணகிரிநாதர்.
    'இனிய முது புலிபாதன்','கருணை ம்ருகேந்த்ர அன்பருடன்', 'தவம் புலியூர்', 'புலியூர் வியாக்கிரனும்', 'வாம்புலியான பதம்'.


    மேற்கண்டவாறு புலிப்பாதர் வசித்து வரும் காலத்தில், திருப்பாற்கடலில் 'அரவணை மிசை துயில் நரகரி நெடியவர்', 'நச்சணை மேல் வாழும் அச்சுதன்', 'எறிதிரை யலம்பு பாலுததி நஞ்சராமேல் இருவிழி துயின்ற நாரணன்' திடீரென்று விழித்துக் கொண்டார். அவர் கண்களில் ஆனந்த பரவசம் தோன்றியது. அதனால் நீர் பெருகியது. அப்போது அவர் சிவலோகத்து எழுந்தருளியிருந்தார்.

    திரு வுறைந்துள மார்பகனார் திருமகளுடனும் பேசாது ஆனந்தாநுபவத்தில் திளைத்து, தியான பரவசத்தில் இருந்தார். அநந்தன் அவருடைய உடற் சுமையைத் தாங்காது வியந்திருந்தான். 'நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கருளே புரிந்திட நொடியிற் பரிவாக வந்த பெரிய பெருமாள் அரங்கர்' தியானத்திலிருந்து கலைந்து தெளிந்திருந்த சமயத்தில், 'அடுத்த ஆயிர விடப் பணாமுடி ஆதிசேடன்' அவர் திருவடியில் வீழ்ந்து, "செகச் செஞ்சோதியுமாகிய மாதவனே! முன் போல என் மீது பள்ளி கொள்ளாது, இவ்வாறு இருந்தது என்ன காரணத்தால் என்று நான் உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்ளலாமா?" என வேண்டிக்கொண்டான்.

    'நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கருளே புரிந்திட நொடியில் பரிவாக வந்தவனான திருமால்', "உலக நாயகனாகிய சிவபெருமான், நேற்றுத் திருக்கைலை மலையின் அடிவாரத்தில் ஒரு அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, தாருகா வனத்து முனிவர்களுடைய உள்ளத்தை உலகுக்கு அறிவிக்கப் போகிறோம். நீ மோகினி உருக் கொள்க! நாம் பிட்சாடனர் உருக் கொள்வோம். இருவரும் ஒருசேரத் தாருகா வனம் செல்வோம். தாம் கன்மமே பிரம்மமெனக் கருதும் முனிவர்கள் தவம் செய்யும் இடத்தை நோக்கிச் செல்க! நாம் அவர்கள் மனைவிமார்கள் வாழ்கின்ற பர்ணசாலையை நோக்கிச் செல்வோம். அவர்கள் உறுதியை அளந்து உலகிற்கு எடுத்துக் காட்டி, கருமம் பிரமம் ஆகாது, இறையுணர்ச்சி அவசியம் வேண்டும் என்ற உண்மையை உணர்த்தி வருவோம் என்று கூறிப்புறப்பட்டார். அதனால் நானும் அவர்தம் ஆணைப்படி உடன் சென்றேன்.

    என் அழகைக் கண்டு நிலைகுலைந்த முனிவர்கள், தம் பத்தினிமார்களின் நிலை மாற்றத்தால் சினந்து, இறைவனைச் சபித்தார்கள். மேலும் தங்கள் சாபம் இறைவனிடம் பலியாமை கண்டு, மிக்க சினம் கொண்டு அபிசார ஓமம் செய்தார்கள். அந்த யாக குண்டத்திலிருந்து புலி ஒன்றை எழுப்பி, இறைவன் மீது ஏவினர். ஆனால் இறைவனோ அப்புலியைப் பிடித்து, அதன் தோலை உரித்து ஆடையாகச் சூட்டிக் கொண்டார். பின்னர் முனிவர்கள் பூதங்களை ஏவினர். அவற்றை இறைவன் தம் பரிசனங்களாக ஏற்றுக் கொண்டார். இவ்வாறே பெரும் பாம்பை ஏவினார்கள். அதனைத் திருக்கரத்தில் கடகமாக அணிந்தார்.

    பின்பு முனிவர்களுக்கு சடை மருவு திருமுடியும், அடி மருவு திருச்சிலம்பும் நெற்றிக்கண்ணுமாகத் தன் உண்மை உருவத்தைக் காட்டியருளினார். அப்போது யாக குண்டத்தினின்றும் முயலகன் எழுந்து, இறைவன் மீது வெகு சீற்றத்துடன் பாய்ந்தான். இறைவனோ அவனைக் குப்புற வீழ்த்தி அவன் மேல் வலப் பாதத்தை ஊன்றினார். இதைக் கண்ணுற்ற முனிவர்கள் மந்திரங்களை இறைவன் மேல் ஏவ அவைகள் சிலம்பாக அவர் தம் திருப்பாதத்தை வந்தடைந்தன. இறைவன் எல்லோரும் காணும்படி உமையம்மையை நோக்கி மகிழ்ந்து ஆனந்தத் தாண்டவம் ஆடினார். இந்தத் தாண்டவத்தைக் கண்ட முனிவர்கள் இறைவன் பெருமையை உணர்ந்து சிவஞானம் பெற்று விளங்கினர்.

    "சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்"
    "
    உடலு முயலகன் முதுகு நெறுநெறென
    எழு திமிர வுரகர்பிலமுடிய ஒரு பதமோடி
    உருவமுது ககனமுகடிடிய மதி முடிபெயர
    வுயரவகில புவனம் அதியர் வீசிக் கடக
    கரதல மிலக நடனமிடு இறைவர்" [திருப்புகழ்]


    பிறகு இறைவன் பல காரணங்களோடு கூடிய பல தாண்டவங்களைப் புரிந்தார். இதைக் கண்டு மகிழ்ந்த முனிவர்களின் வேண்டுகோளின்படி முயலகனிடம் அவர்களுடைய ஆணவமலச் சக்திகளையெல்லாம் அடங்கச் செய்து, அதன் மீது நின்று அனவரதமும் ஆனந்தத் தாண்டவம் புரிகின்றார் "அரியயன் அறிந்திடாத அடியிணை சிவந்த பாதம் அடியென விளங்கி யாடு நடராஜன். அதனைத் தரிசனம்செய்த பேரானந்தம் தான் இவ்வாறு என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழச்செய்தது." என்று கூறினார்.


    அருணகிரிநாதர், "ஒருகோடி சடை மாமுடி முனிவோர் சரணென வேதியர் மறையோதுக சதி நாடக மருள் வேணியன்" என்றும், "சிவ சமய ஞானங்கேட்க தவமுனிவோரும் பார்க்க திருநடமாடுங்கூத்தர்"என்றும்,
    "முனிவோர்கள் சிவமில் உருகியும் அரகரவெனவதி பரதபரிபுரமலரடி தொழ அநுதினமு நடமிடுபவர்" என்றும் சிவபெருமானின் நடனம் பற்றி நம்மிடம் பகிந்து கொள்கிறார். இவ்வளவு நேரம் திருமால் கூறிக் கொண்டிருந்தவைகளைக் கேட்டுக் கொண்டிருந்த 'மவுலியில் அழகிய பாதாளலோகன்' அத்தகைய தாண்டவத்தைத் தானும் ஒருமுறை தரிசிக்க ஆவலாக உள்ளதாக விண்ணப்பித்துக் கொண்டான்.


    திருமாலின் ஆணைப்படி திருக்கைலாயம் சென்று,மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டான் ஓராயிர வெம் பகு வாய்ப்பணி சேடன். தவத்திற்கு இரங்கிய எம்பெருமான், தன் இடத்திலிருந்து வெளிப்பட்டு, "என்னுடைய தாண்டவத்தைத் தாங்குவதற்கு உரிய இடம் தாருகா வனமும், தில்லை வனமுமாகும் ஆதலின் நீ தில்லைக்கு வருக, தக்க தருணத்தில் எம் ஆடலைக் காணலாம்" என்று கூறி அருளினார்.


    சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க விடப்பணச்சிரமாயிர சேடன், பாம்புடலும், மனித முகமும் கொண்டு பதஞ்சலி முனிவராகத் தில்லையில் திருநடனம் காணத் தவம் செய்து கொண்டு வந்தார். அப்பொழுது . இறைவனும் தைப்பூசம் வியாழக்கிழமையோடு கூடிய சித்தயோக தினத்தில் நடுப் பகலில் நம் ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசிக்கச் செய்வோம் என்று அருளிச்செய்தார். பதஞ்சலி முனிவர் வியாக்ரபாத முனிவரோடு கூடி தக்கதருணத்தை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார். முற்கூறிய இலக்கணங்களோடு கூடிய சுப தினத்தில் தில்லை வாழ் அந்தணர்களும், தேவர்களும் பூசித்து நிற்க நண்பகலிலே இறைவன் திருநடனம் ஆடினார்.

    "நீண்டிடு மாலொடய னறியாது
    பாம்புரு வானமுநி வாம்புலியான பதன்
    ஏய்ந்தெதிர் காண நடமிடு பாதர்" ( திருப்புகழ் )

    அதைக் கண்டு பரவச நிலையை அடைந்த பதஞ்சலியும், வியாக்கிரபாதரும், ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு எப்போதும் திருநடனம் ஆடவேண்டும் என்று வேண்டி நின்றனர். இறைவனும் அவ்வண்ணமே ஆகுக! என்றதன் பேரில் அனவரதமும் திருத் தாண்டவம் புரிந்து கொண்டிருக்கிறான் என்பது கோயில் புராணவரலாறு.


    அருணகிரிநாதர் திருப்புகழில் பதஞ்சலிக்குப் பல இடங்கள் கொடுத்துள்ளார்.

    'அறிதுயில் சயன வியாள மூர்த்தன்', 'உரகேந்த்ரர்', 'பாம்புருவான முனி', 'புலிபாதனுடன் அரவு', 'மரகத முழுகிய காகோதராஜன்', என்று பெயர்கள் அளித்துள்ளார். மீமாம்ச நூலையே உண்மையென்று ஒழுகிய முனிவர்களை ஆட்கொள்வதற்காகவே இறைவன் பிட்சாடன உருவெடுத்தார் என்றும், மனம் பரிபாகப் பட்டு உண்மை ஞானத்தை அறியாமையால் கருமங்களையே செய்பவர்களுக்குக் காமம், கோபம் போன்ற உட்பகைகள் என்றும் அழியாது. அதனால் அவை ஒழியாது போகவே கன்மங்களை முதன்மையாகக் கொண்டவர்கள் என்றும் இன்பம் பெற மாட்டார்கள் என்பதை முனிவர்கள் உணர்ந்து உய்வதற்கு, நீராட்டு வழிபாடு, ஓமம் இவைகளைச் செய்து பொழுதைக்கழிக்கும் முனிவர்கள் முன்னிலையில் திருமால் மோகினியாகச் சென்றார்.

    அவ்வாறு சென்றதால் முனிவர்களுக்குக் காமம் நீங்காமையையும், அவர்கள் பத்தினிமார்களுக்கு ஒழுக்கம் நிலையாமையையும் அதனால் அவர்களுக்குக் கோபம் நீங்காதமையையும் எடுத்துக் காட்டி, இக்குணங்கள் நீங்காத உயிர்கட்கு முத்தி சித்திக்க வாய்ப்பில்லை என்பதை இறைவன் உணர்த்தினார். அதுமட்டுமன்றி ஆன்மாக்கள் தன் செயலற்று நம்புகின்ற மந்திர, தந்திர, யாக, யோக வன்மைகளைப் பயனற்றது என்று தெரிந்து அடங்கும் போதுதான், இறைவனாகப்பட்டவன் பரமானந்த தரிசனம் வழங்குவார் என்ற உண்மையை அவரது ஆனந்தத் தாண்டவம் அறிவிக்கின்றது.


    சூரியனின் குமாரனான மநு வழி வந்த ஐந்தாவது மநுவிற்குப் பிறந்த இரணிய வர்மன், வியாக்ரபாதருடனும், பதஞ்சலியுடனும், தேவர்களுடன் கூடித் தில்லையில் திருக்கூத்தைத் தரிசித்தனர் என்பதை அருணகிரிநாதர் 'அவகுண' எனும் திருப்புகழில் இணைத்திருக்கிறார்.

    "மவுலியில் அழகிய பாதாள லோகனும்
    மநு நெறியுடன் வளர் சோணாடர் கோனுடன்
    உம்பர்சேரும் மகபதி புகழ் புலியூர் வாழும் நாயகர்" என்கிறார்.

    இங்ஙனம் இவர்கள் யாவருக்கும் திருக்கூத்தைக் காட்டிய நாள் தைப் பூச நாளாகும். அருணகிரியாருக்கு நடராஜரே முருகனாகவும், முருகனே நடராஜராகவும் சிறிதும் வித்தியாசமின்றி தரிசனம் தரப்பட்டது என்பதை நாம் உணர்ந்தால், அருணகிரிநாதருக்குக் கிடைத்த பேறு நன்கு விளங்கும். வண்டாக இருந்து தன் பெற்றொர்கள் பேசிக்கொண்டிருந்த பிரணவ ரகசியத்தை அறிந்த முருகனுக்கு சாபம் இடப்பெற்றது. தவம் புரிந்து சாபம் தீர்ந்தபின் சிவபெருமானும், அம்மையும் காட்சி கொடுத்த நாள் தைப் பூச நாளே!


    முருகனின் அருள் பெற்ற திரு அருட்ப்ரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க அடிகளார் தை மாதம் பூச நட்சத்திரம், பௌர்ணமி அன்று தான் ஜோதி வடிவில் இருந்த இறைவனுடன் கலந்தார்.
    யாவற்றுக்கும் மேலாக சிவபெருமான் இத் தினத்தில் தான் மும் மலங்களாகிய திரிபுரத்தை நகைத்தே அழித்தார்.
    "திரிபுரம் அதனை ஒரு நொடியதனில் எரி செய்தருளிய சிவன்"
    திருநடனங்களை நாம் நம் முன் எதிரே காண வேண்டும் என்றஆசை பெருகினாலும், முருகனையும் அவன் தந்தையையும் நம் மனத்தில் இருத்திவிட்டால், அவர்கள் நம் மனதில் நிறைந்திருக்கும் இருளை அகற்றி,
    திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
    பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
    மருவடி வான வதனங்க ளாறும் மலர்க் கண்களுங்
    குருவடி வாய்வந்தென் னுள்ளங்குளிரக் குதிகொண்டவே
    என்று போற்றும்படியான ஒரு நிகழ்வை நிச்சயம் ஏற்படுத்துவான். வாழ்க அன்பர்கள்! வளர்க முருகன் அருள்!
Working...
X