courtesy:Sri.KSR.Ramki
'திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது' என்பதற்கு உதாரணமாக விளங்குவது அருணகிரிநாதர் வாழ்க்கைஇந்த பிரார்த்தனை பதிவில் அருணகிரிநாதர் வாழ்வில் முருகன் செய்த திருவிளையாடல் ஒன்றை பார்ப்போம்.
உயர்குடியில் பிறந்திருந்தும் எந்த வித லட்சியமும் இன்றி பரத்தையர் வீட்டுக்கு செல்வதையே ஆனந்தமாக கருதி அருணகிரி வாழ்ந்து வந்தார். அவரிடம் செல்வம் வற்றி, உடலில் ரோகம் பீடித்த பின்னர், 'அற்ற குளத்து அறுநீர் பறவை' போல அனைவரும் விலகிச் சென்றுவிட, ஊரார் வெறுத்து ஒதுக்க, திருவண்ணாமலை கோபுரத்தின் மீதேறி அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறார் அருணகிரி. முருகப் பெருமான் அதுசமயம் ஓடிவந்து அவரை தடுத்தாட்கொண்டு, பெறுதர்க்கரிய இந்த மானிடப் பிறவியை இப்படி வீணாக்கலாமா? என்று கூறி பிரணவ மந்திரத்தை உபதேசிக்கிறார்.
பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை மோட்சம் வேண்டி இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, "அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்." என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, "யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!" என்று சொல்லி அவர் நாவில் ஷடாக்ஷர மந்திரத்தை எழுதுகிறான். முருகனின் வேல், நாவில் பட்டவுடன், அருணகிரி அருணகிரிநாதராக மாறுகிறார். "முத்தைத் தரு பத்தித் திருநகை" என முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான் கந்தன்.

அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
இது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதனாக இருந்த சம்பந்தாண்டான் என்பவனுக்கு தெரிய வந்தது. தேவி உபாசகனான அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் அதை தடுக்க எண்ணம் கொண்டான். "மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!" என்று சொன்னான்.
மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், "நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? " என்று கேட்டான் மன்னன்.
சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , "மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் சாட்சாத் காளி தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?" என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் தோன்ற வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். பந்தயத்திற்கு முந்தைய தினம் இரவு, பலவித யாகங்கள் செய்து காளியை தோன்றச் செய்து மறுநாள் சபையில் அவள் மைந்தன் முருகன் அருணகிரியின் வேண்டுகோளுக்கு இணங்கி தோன்றக்கூடாது என்றும் வரம் பெற்றான்.
மறுநாள் மன்னன் தலைமையில் ஊற மக்கள் சபை கூடியது.
முதலில் அருணகிரி முருகனை தோன்றச் செய்யட்டும் என்று சவால்விட, அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார்.
ஏற்கனவே சம்பந்தாண்டனுக்கு காளி வரம் கொடுத்தபடியால் முருகனை தேவி விடவில்லை. இதை ஞானதிருஷ்டியில் உணர்ந்த அருணகிரிநாதர், மயில்விருத்தத்தை பாடி மயிலை ஆடவைத்து அதன் மூலம் தேவியை மயங்கவைத்து மயிலைக் கொண்டு முருகனை தோன்றச் செய்தார்.
செங்கேழ் அடுத்த சின வடிவேலும் என்று துவங்கும் அந்த பாடல் மிக மிக அற்புதமான பாடலாகும்.
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே
அருணகிரிநாதர் பாடி முடித்ததுதான் தாமதம், மயில்வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தூணைப் பிளந்து தோன்றினான். கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.
அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends